


இந்தச் சந்திப்பின் நோக்கம்..? நீண்ட காலமாக நீங்கள் என்னைச் சந்திக்க வேண்டும் என ஆசைப்பட்டீர்கள்; அதே போல நானும் உங்களைச் சந்திக்க ஆசைப்பட் டேன். இதுதான் நோக்கம். ஒருமுறை சச்சிதானந்த சுவாமிகள் தன்னுடைய சிஷ்யர்களிடம் "உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள்; அதற்கு நான் பதில் அளிக்கிறேன்' என்றார்
அதுதான் இப்போது நடக்கிறது
முதலில் ராகவேந்திரரை வழிபட்டீர்கள்; அதன்பிறகு அருணாசலேஸ்வரர்; பிறகு பாபாஜி என்கிறீர்கள். அடிப்படையில் உங்களுக்கே தெளிவான பார்வை இல்லையா? நமது பாடத்திட்டத்திலேயே கூட வரலாறு, புவியியல், கணிதம் என பல படிப்புகள் உள்ளன. அவை நமது அறிவை விருத்தி செய்கின்றன. அதுபோலத்தான் தேடல் நிறைந்த உள் ளம் நமது ஆன்ம ஞானத்தை விருத்தி செய்கி றது. தேடல் உள்ளவர்கள் பார்வையில் இது ஒன்றும் தவறு கிடையாது
உங்களைக் குழப்பவாதி என எழுதுவதையும் பேசுவதையும் கேட்கும் போது கஷ்டமாக இருக்கிறது. அதற்கு ஏன் நீங்கள் இடம்கொடுக்கிறீர்கள்? பத்திரிகையாளர்களை வைத்துக்கொண்டே இந்தக் கேள்வியைக் கேட்டால் எப்படி?...
சில நேரங்களில் நான் செய்வது கூட அப்படித் தான் இருக்கிறது. இது செய்தால் இது நடக்கும் என யூகித்துச் சொல்வதில்லை!
நான் நினைப்பது சரி எனும்போது பேசிவிடுகிறேன். அதை வேறு கோணத்தில் பார்ப்பவர்களுக்குக் கஷ்டமாக இருக்கிறது. அது தவிர்க்க முடியாதது. சில செய்திகளைப் படிக்கும் போது சிரிப்பாக இருக்கும். சில செய்திகள் சிந்திக்க வைக்கும். ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம். என்னுடைய சுயநலத்துக்காக நான் யாரையும் குழப்பியதில்லை. மற்றவர்களுக்காக விட்டுக்கொடுத்து சில நேரத்தில் கெட்ட பெயர் எடுத்துள்ளேன். இப்போது அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். நானும் அமைதியாக இருக்கிறேன். எல்லாம் அனுபவத்தில் இருந்து கற்றுக்கொள்வதுதான்
ஒகேனக்கல் விவகாரத்தில் வருத்தம்; மன்னிப்பு? எது உண்மை? நான் முன்னால் போக வேண்டும் என நினைக்கிறேன். நீங்கள் பின்னாலேயே போக வேண்டும் என்கிறீர்கள். விஷயம் முடிந்துவிட்டது. அதை விட்டுவிடுங்கள். அதிலேயே இருந்தால் எப்படி..? ஒகேனக்கல் பிரச்னை சினிமா சம்பந்தப்பட்டது அல்ல. ஆனால் கர்நாடகத்தைப் பொருத் தவரை எந்தப் பிரச்னை என்றாலும் அங்கு முதலில் தாக்குலுக்கு உள்ளாவது தியேட்டர்கள் தான். அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகத்தான் அந்த மேடையில் அமர்ந்தேன். பலர் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்கள். நானும் மனிதன்தானே!... பேசிவிட்டேன். ஒரு பிரச்னை ஆரம்பித்தால் உடனே முடியவேண்டும். இழுத்தடிக்கக் கூடாது. அதனால் பொது நலத்திற்காக, மற்றவர்கள் நலனுக்காக நான் வருத்தம் தெரிவித்தேன்!
நீண்ட காலமாக மன்றப் பணிகள் செய்து வரும் ரசிகர்களைப் பற்றி..? "ரஜினி ரசிகர்கள்' என்பவர்களைப் பற்றி நான் பேச வேண்டிய அவசியம் கிடையாது
நாட்டு மக்களுக்கே தெரியும். இதை மற்றவர்களிடம் கேளுங்கள்
ரசிகர்களுக்கென ஓர் அங்கீகாரம் கிடைக்குமா? ரஜினி ரசிகர் என்றால் சமுதாயத்தில் ஓர் அங்கீகாரம் கிடைக்கும்படி நிச்சயம் செய்வேன்
எதிர்காலத் திட்டம்; அரசியல் ஈடுபாடு குறித்த கேள்விகளுக்கு சிறிது மெüனம் காத்து ரஜினிகாந்த் பேசியதாவது:
மீண்டும் மீண்டும் நான் சொல்வது இதுதான்..முதலில் உங்கள் குடும்பத்தைக் கவனியுங்கள்; அடுத்து நான்... அடுத்ததுதான் அரசியல். நான் என் மனைவிக்கு நல்ல கணவனாக, என் குழந்தை களுக்கு நல்ல தகப்பனாக, தயாரிப்பாளர்களுக்கு நல்ல நடிகனாக என் கடமையைச் செய்து வருகி றேன். அதுபோல நீங்களும் முதலில் உங்கள் கட மையைச் சரியாகச் செய்துவிடுங்கள் அரசியலைப் பொருத்தவரை திறமை, புத்திசா லித்தனம், உழைப்பு இருந்தால் மட்டும் வெற்றி பெற்றுவிட முடியாது. அதற்கேற்ற சந்தர்ப்பம், சூழ்நிலை, நேரம் அமையவேண்டும். அதுதான் வெற்றிக்கு முக்கியம். 1996-ம் ஆண்டு இருந்த நிலை வேறு. அன்று பதவிக்குரிய சூழ்நிலை இருந்தது.
நமக்கு ஒரு விஷயத்தில் திறமையும் அனுபவமும் இருக்கவேண்டும். தெரியாமல் ஒரு விஷயத்தில் இறங்கக்கூடாது. என் சிறு வயதில் பணக் கஷ் டத்தில் இருந்தபோதுகூட சினிமா பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முறைப்படி 2 ஆண்டுகள் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்தேன். அதன்பிறகுதான் நடிக்க வந்தேன். தெரியாத ஒரு விஷயத்தைச் செய்ய மாட்டேன்.
அரசியலுக்கு வருமாறு யாரும் கட்டாயப்படுத்தக் கூடாது. பலவந்தமாக திருமணம் செய்து வைத்தால் அந்த வாழ்க்கை இனிமையாகவா இருக்கும்? இரண்டு தரப்பிலும் ஈடுபாடு இருக்க வேண்டும். ஒரு தரப்பில் மட்டும் வற்புறுத்தல் இருக்கக்கூடாது. என்னைப் பொருத்தவரை எல்லாமே ஆண்டவன்தான். அங்கிருந்து உத்தரவு வந்தால் நாளையே பல விஷயங்கள் நடக்கலாம்
ஆனால் அரசியலில் ஈடுபடுவதற்கு இது உகந்த நேரம் அல்ல. தற்போது பல இடங்களில் நிலைமை சரியில்லை. இங்கு மட்டுமல்ல நாட்டின் பல பகுதிகளிலும் நிலைமை சரியில்லை. நாட்டில் நடப்பதைக் கூர்ந்து கவனித்து வாருங்கள்.