Showing posts with label தினமணி. Show all posts
Showing posts with label தினமணி. Show all posts

நீர் ஆதாரங்கள் இணைப்பின் அவசியம் - தமிழ்நாடு - தினமணி

நீரின்றி அமையாது உலகு என்பர். ஆனால், உலகம் முழுவதும் தண்ணீருக்காகப் பிரச்னைகளும், யுத்தங்களும்கூட நடக்கிற சூழல்கள் ஏற்பட்டுள்ளன.

உலக நாடுகளுக்கிடையே பாயும் நதிகளின் நீரைப் பங்கீடு செய்வதை பற்றி விவாதிக்க 1956-ம் ஆண்டு ஹெல்சிங்கில் பன்னாட்டு மாநாடு நடந்தது. அதில் நீர் பாய்ந்தோடும் இறுதி கட்டம் வரை உள்ள நாடுகளுக்கு பாயும் நீரில் உரிமை உண்டு என தீர்மானிக்கப்பட்டது.

இந்தியாவில் நதிநீர்ப் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண வேண்டுமென்றால் அரசியல் அமைப்புச் சட்டம் 262-ன்படி நதி நீர் வாரியங்கள் அமைக்கலாம். ஏதாவது ஒரு மாநிலம் உச்ச நீதிமன்றம் அல்லது நதிநீர் தீர்ப்பாயங்கள் உத்தரவுகளை மதிக்கவில்லை என்றால், மத்திய அரசு சம்பந்தப்பட்ட நதிநீர் குறித்து நதிநீர் வாரியம் அமைத்து பிரச்னைகளைத் தீர்க்கலாம். ஆனால், இதுவரை அந்த அதிகாரத்தை மத்திய அரசு பயன்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. இதனால்தான் காவிரிப் பிரச்னைக்குத் தீர்வு காணப்படாமல் உள்ளது.

காவிரியிலிருந்து தமிழகத்துக்கு நீர் வராததால் நெல் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. தமிழகத்தில் ஒரு ஹெக்டேர் நிலத்தில் 3,116 கி.கி. நெல் கிடைக்கிறது. ஆனால், கர்நாடகத்தில் நீர் வளங்கள் எல்லாம் இருந்தும் வெறும் 2,454 கி.கி. நெல்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்குக் காரணம் என்ன? தமிழகத்தில் மனித ஆற்றல் அதிக அளவில் உள்ளது. கர்நாடகம் தண்ணீர் கொடுத்தால், தமிழகத்தில் நெல் உற்பத்தி அதிகரிக்கும். இது இந்திய நாட்டுக்குத்தானே நன்மையை கொடுக்கும் என்பதை கர்நாடகம் உணர மறுக்கிறது.

முல்லைப் பெரியாறு பிரச்னையில் கேரளம் பிரச்னை செய்கிறது. குமரி மாவட்டத்தின் நெய்யாற்றிலிருந்து தொடங்கி, வடக்கே கோவை மாவட்டத்தில் ஆழியாறு பரம்பிக்குளம், பாண்டியாறு புன்னம்புழாவிலும் கேரளம் பிரச்னை செய்து வருகிறது. மேற்கு நோக்கிப் பாயும் நதிகளை கேரளத்திலிருந்து தமிழகத்துக்குத் திருப்பலாம் என பல பரிந்துரைகள் செய்தபோதும், அச்சன்கோவில், பம்பை வைப்பாறு இணைப்புத் திட்டம் வலியுறுத்தப்பட்டும் கேரளத்தின் அலட்சியப் போக்கால் இத்திட்டங்கள் நிலுவையில் உள்ளன.

கேரளத்தில் நீர்வளம் சராசரியாக 3,050 மி.மீ. ஆகும். இது தமிழகத்தைவிட 3.2 மடங்கு அதிகம். அங்கு கிடைக்கும் உபரிநீரைத் தேக்கி வைக்கவும் அணைகள் இல்லை. கேரள ஆறுகளில் ஓடும் நீர் வளம் மொத்தம் 2,500 டி.எம்.சி. ஆகும். இதில் 500 டி.எம்.சி. நீரை மட்டுமே கேரளம் பயன்படுத்துகிறது. 350 டி.எம்.சி.க்கு மேல் நீரைத் தேக்க வசதியும் இல்லை. சுமார் 2,000 டி.எம்.சி. நீர் அரபிக் கடலுக்குச் செல்கிறது.

இந்த 2,000 டி.எம்.சி.யில் வெறும் 200 டி.எம்.சி. நீரைத் தமிழகத்துக்குத் தருமாறு கேட்டும் தண்ணீர் இல்லையென்று அடித்துப் பேசுகிறது கேரளம். இதில் உள்ள நியாயத்தை எங்கே போய் சொல்ல? நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகேயுள்ள அடவிநயினார் அணைக்கு கடப்பாரை, மண்வெட்டியுடன் தமிழக எல்லைக்கே முரட்டுத்தனமாக வந்தவர்தான் இன்றைய கேரள முதல்வர் அச்சுதானந்தன். வடதமிழகப் பகுதியில் பாய்ந்த பாலாறு, பொன்னை ஆறுகளில் ஆந்திராவால் பிரச்னைகள் எழுந்தது.

தமிழ்நாட்டில் உள்ள 33 ஆற்றுப்படுகைகளில் மொத்த நீர்வளம் 35,726.74 மி.க.மீட்டர். இதைக் கொண்டுதான் தமிழகம் தனது நீர்த் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டியுள்ளது. இவ்வாறான சிக்கல்களுக்கு விடை காண்பதற்காகத்தான், தமிழக அரசு கங்கை காவிரி இணைப்பு வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அதற்கு முன்னோடியாக, இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய வகையில், தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் பாசன வசதி பெறுகிற வகையில் தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டம் | 369 கோடி செலவில் 73 கி.மீ. தூரம் கால்வாய் தோண்டும் பணிகள் விரைந்தும், தீவிரமாகவும் நடைபெறுகிறது என்பது வெளியில் தெரியாமல் நடக்கும் நதிநீர் புரட்சி.

தாமிரபரணி, கன்னடியன் கால்வாயிலிருந்து, வெள்ளக் கால்வாய் மூலம் திசையன்விளை மற்றும் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், திருச்செந்தூர் ஆகிய பகுதிகள் பயன்பெறும் வகையிலான இந்தத் திட்டத்தை, மார்ச் 2008-ல் தமிழக முதல்வர் அறிவித்தார். இந்தியாவுக்கே முன்னோடித் திட்டமாகும் இது. தாமிரபரணியில் வெள்ளக் காலங்களில் வீணாகக் கடலில் கலக்கும் நீரைத் திருப்பி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 23,040 ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறவும், மக்களுக்குக் குடிநீர் கிடைக்கவும் இத்திட்டம் தீட்டப்பட்டது. கடலுக்கு வீணாகச் செல்லும் 13,758 மி.க.மீட்டர் அடியிலிருந்து, 2,765 மி.க.அடி நீர் இத்திட்டத்தில் திருப்பப்படுகிறது.

இப்போது இப்பணிகள் 72 பகுதிகளாகப் பிரித்து, அதை 4 பிரிவுகளாக வகுத்து நடைபெறுகின்றன. இதில் ஒரு சில பகுதிகளுக்குப் பணியின் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

தாமிரபரணி மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி, தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை 126 கி.மீ. தூரம் பயணித்து கடலில் கலக்கிறது. பாபநாசம் அணையில் தொடங்கி பொருநை ஆறு, வடக்கு கோடை மேலழகியான், தெற்கு கோடை மேலழகியான், நதியுன்னி, கோடகன், திருநெல்வேலி, பாளையங்கால், மருதூர் கீழ், மேல், திருவைகுண்டம் தெற்கு, வடக்கு போன்ற கால்வாய்கள் மூலம் நீர் பாசனம் வழங்குகிறது. இந்த நேரடி பாசனம் போக பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு, கடனாநதி, ராமநதி, குண்டாறு, அடவிநயினார், கொடுமுடியாறு, கருப்பா நதி, பச்சையாறு, நம்பியாறு என அணைகளை கொண்டு நெல்லை மாவட்டத்தை வளப்படுத்துகிறது.

இதை விரிவுபடுத்தும் வகையில் திட்டமிடப்பட்டதுதான் தாமிரபரணி, கருமேனியாறு நம்பியாறு திட்டம். இத்திட்டத்தால் தெற்கே திசையன்விளை, உவரி, கூடங்குளம், சாத்தான்குளம், திருசெந்தூர் வரை உள்ள பகுதிகள் பயன்படும். இந்தப் பகுதிகளில் திருச்செந்தூர் வட்டாரத்தைத் தவிர, மற்ற இடங்களில் நீர்வளம் குறைவு. தேரிக்காடான செம்மண் இருக்கின்ற பகுதிகள், இருபோகம், முப்போகம் சாகுபடி என்று மாறக்கூடிய அளவிற்கு இந்த இணைப்புத் திட்டம் பயன்படும்.

இப்பகுதியில் அவ்வப்போது வறட்சி விவசாயமும் அங்குள்ள மக்களுக்குப் பெரிதாக கைகொடுக்கவில்லை. அங்குள்ள சாலைகளில் பயணித்தால் பச்சை நிறமானது ஒரு சில கிணற்றுப் பகுதிகளில் மட்டுமே தெரியும். மீதி இடங்கள் கட்டாந்தரையாக இருக்கும். பனை மரங்கள், முட்புதர்கள் மட்டுமே கண்ணுக்கு எட்டிய தூரம்வரை தெரியும்.

அதுபோலவே, ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், கோவில்பட்டி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் ஆகிய பகுதிகள் வானம் பார்த்த பூமியாக கந்தக பூமியாக இன்றைக்கு இருக்கிறது. அந்த பூமியில் கருவேல மரங்கள்தான் அதிகம் உள்ளன. மானாவாரி பயிர்கள் அடிக்கடி பொய்த்து வருகிறது. அப்பகுதிக்கும் தாமிரபரணியிலிருந்து விவசாயத்துக்கு உபரி நீரை வழங்கக் கூடிய அளவில் திட்டங்கள் வேண்டும்.

ஏற்கெனவே அச்சன்கோவில், பம்பை வைப்பாறு இணைப்பு, இப்பகுதிக்குப் பயன்படும் என்று திட்டமிடப்பட்டிருந்தாலும், அது கேரளத்தின் பிடிவாதத்தால் கானல் நீராகவே இதுவரை இருக்கிறது. இதன் வடபகுதிகள் இராஜபாளையம், திருவில்லிப்புத்தூர், சிவகாசி, சாத்தூர் ஆகிய பகுதிகளுக்குப் பயன்படும் அழகர் அணைத் திட்டமும் நடைமுறைக்கு வரவேண்டும்.

நதிகள் இணைப்புப் பிரச்னையில் சுற்றுச்சுழல் பிரச்னை, நில ஆர்ஜிதம் போன்ற காரணங்கள் ஒருபக்கம் இருந்தாலும் முடிந்த அளவு தென்னிந்திய நதிகள் மற்றும் மாநிலங்களில் உள்ள நதிகளை இணைத்து, இறுதியில் வடஇந்திய நதியான கங்கையோடு இணைக்கத் திட்டமிடலாம். இத்திட்டத்தைச் செயல்படுத்த நீண்டகாலம் ஆனாலும், அதற்கான தொடக்கத்தில் மும்முரம் காட்டுவது அவசியமாகும்.

நதிநீர் இணைப்பு திட்டத்துக்கான முயற்சிகள் 1998-லிருந்து எடுக்கப்பட்டு வருகிறது. இணைக்கப்பட வேண்டிய 30 நதிகளில் 15 நதிகள் தென்னிந்திய தீபகற்ப தக்காண பீடபூமியில் உள்ள தீபகற்ப நதிகளாகும். அதுபோல, வடபுலத்தில் இமாலய நதிகள் கிட்டத்தட்ட 15 வரை ஆகும். பேட்வா பன்சால் நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கு உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா போன்ற மாநிலங்கள் கையெழுத்திட்டுள்ளன. ஆனால், அப்பணியிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 14 நதிகளை தேசிய சொத்து என்ற அறிவிப்பையும் இன்றைய மத்திய அரசு செய்துள்ளது.

தமிழகம் மட்டுமல்லாமல், தென் மாநிலங்கள் வளம் பெற கங்கை காவிரி நீரைத் திருப்பி வைகை பொருநை, குமரி வரை இணைக்க வேண்டும். இந்தப் பிரச்னை அனைவராலும் இன்றைக்குப் பேசப்பட்டு வருகிறது. இந்த பத்தியாளர் 1983-ல் நதிகள் தேசியமயம், நதிநீர் இணைப்பு, கேரள நதிகளைத் தமிழகத்தோடு இணைப்பு குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவில் நீதிபதிகள் எம். சீனிவாசன், ஏ.ஆர். இலட்சுமணன் ஆகியோரின் தீர்ப்பில் நதிகள் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டனர்.

ஒரு கட்டத்தில் இந்தியா பாலைவனம் ஆகிவிடும் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது. அடுத்த 15 ஆண்டுகளில் உலக அளவில் இந்தியாவில் 60 சதவீத நிலத்தடி நீர் வற்றிவிடும் என மறுபுறம், உலக வங்கி கடந்த 12.3.2010 அன்று தெரிவித்தது. 2025-ல் நாடு முழுவதும் உள்ள 5,173 நிலத்தடி நீர் பாதைகளில், 615 பாதைகள் நீரோட்டம் குறைந்துவிடும் என்றும், 108 பாதைகள் வற்றி விடும் என்றும் அந்த அறிக்கையில் உலக வங்கி குறிப்பிடுகிறது. இது அபாயகரமான நிலையாகும்.

கடந்த 2001 காலகட்டத்திலிருந்து நிலத்தடி நீரைத் தோண்டித் தோண்டி பகாசுர நிறுவனங்கள் குளிர்பானங்களையும், மினரல் வாட்டரையும் பாட்டில்களில் அடைத்து வியாபாரம் செய்வதால் நிலத்தடி நீருக்கும் ஆபத்து வந்துவிட்டது. நிலத்தடி நீரைப் பாதுகாக்கவும், அதை நல்ல முறையில் மேலாண்மை செய்ய வேண்டுவது அனைவரின் கடமையாகும். இச்சூழ்நிலையில் நதிநீர் இணைப்பு அவசியம்.

தமிழகத்தில் மழைக்காலங்களில் கிடைக்கும் தண்ணீரில் 50 சதவீதம் வீணாகிறது. இதில் 30 சதவீதம் கடலுக்குச் செல்கிறது. ஆறுகள் மூலம் 170 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலக்கிறது. இந்தத் தண்ணீரை எல்லாம் பயன்படுத்த வேண்டும் வீணாக்கக் கூடாது என்ற சிந்தனையில்தான் நதிநீர் இணைப்பு வலியுறுத்தப்படுகிறது.

முதியோர் வதம்!

தினமணி கருத்துக்களத்தில் வெளிவந்த முதியோர்வதம் கட்டுரையிலிருந்து சில வரிகள்...

இசைபட வாழ்ந்த நாட்களை அசைபோட்டபடி கால வெள்ளத்தில் துடுப்பில்லாத ஓடமாகப் பயணிக்கிறது முதுமை வாழ்க்கை.




முதியவர்களின் கம்பீரம் காக்கும் சுய உழைப்பு சில்லறை வியாபாரங்களும் கால வெள்ளத்தில் கரைந்துபோயின. ரயில் பயணங்கள் சில பரிதாபங்களையும் பரிகாசங்களையும் படம் பிடித்துக் காட்டும். உரிமம் பெறாமல் வேர்க்கடலை, சுண்டல், கொய்யாப்பழம், டீ, காபி, பானங்கள் விற்கும் சில்லறை வியாபாரிகள் இரயில் பெட்டிகளில் தென்படுவது பயணிகளுக்கு ஒரு சாதாரண காட்சி. வெளியில் தெரியாத வேதனைகள் ஏராளம். சில்லறை வியாபாரிகளில் பெரும்பாலோர் முதியவர், மூதாட்டிகள். சுயமரியாதையை இழக்க மனமில்லாமல் இரயில் பயணத்தில் சில்லறை வியாபாரம் செய்து குறைந்த வருமானத்தைக் கொண்டு நிமிர்ந்து வாழும் உழைப்பின் சிறு தேவதைகள் அவர்கள்.

திருநெல்வேலி ரயில் பயணிகளுக்கு மிகவும் அறிமுகமான இட்லி வியாபாரியை எளிதில் மறக்க முடியாது. வயது எண்பத்தி ஐந்தைத் தொடும். கூன் பின்னுக்கு இழுக்கும். இரணியா வீக்கம் முன்னுக்குத் தள்ளும். கரணம் தப்பினால் மரணம். உயிர் ஆபத்தைப் பொருட்படுத்தாமல் இரயில் பெட்டிகளில் ஏறி இறங்கி கூவிகூவி அவர் இட்லி வியாபாரம் செய்வது கல் நெஞ்சையும் கரையச் செய்யும்.

விவசாயத்துறை, தொழிலாளர்கள், வாலிபப் பருவத்தில் நாட்டின் வளர்ச்சிக்காக உழைப்பின் வாயிலாகத் தங்களைத் தியாகம் செய்கிறார்கள். முதுமை அவர்களை முடக்கிப்போடும்போது குடும்பத்திற்குப் பராமரிக்கிறார்கள். குலை நடுங்கி துயரத்தில் குமைகிறார்கள். காந்தியும், புத்தரும் காருண்ய இயேசுவும் வள்ளலாரும் புனிதமாய் மதிக்கப்படும் இந்தியத் திருநாட்டில் ஏழை முதியவர்களிடமும் கருணை காட்ட வேண்டும்

முழுமையான கட்டுரை வாசித்தலுக்கு


நன்றி - தினமணி

மனு நீதி நாள்..?

ஒவ்வொரு திங்கள்கிழமையும் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்களும், அதே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் ஏதாவதொரு வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்களும், மாதம்தோறும் ஒரு நாளில் ஓய்வூதியர்களுக்கு குறை தீர்க்கும் கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

இவற்றுடன் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட வருவாய் அலுவலரும் தனித்தனியே கிராமங்களுக்குச் சென்று மனுநீதி நாள் முகாம்களையும் ஒவ்வொரு மாதமும் நடத்தி வருகின்றனர்.


எத்தனை முகாம்கள், எத்தனை வேறு பெயர்களில் நடத்தினாலும் கூட்டம் கூடுவதற்கு, மனுக்கள் குவிவதற்கு இரு காரணங்கள் இருக்கக் கூடும். முதலாவது காரணம்- மக்களின் குறைகளை நம்மால் கேட்கத்தான் முடிகிறதே தவிர, தீர்க்க முடியவில்லை என்பது.

இரண்டாவது காரணம்- மக்களும் தங்களின் அடக்க முடியாத ஆசைகளுடன் ஏதாவது கிடைத்தால் பரவாயில்லை என்று முட்டி மோதுகின்றனர்.

பொதுமக்கள் தரப்பில் கேட்டால் முதல் காரணத்தை வழிமொழிவார்கள். அதிகாரிகள் தரப்பில் கேட்டால் இரண்டாவது காரணத்தை வழிமொழிவார்கள்.

இந்தக் காரணங்களில் வழியில் ஆய்வு செய்தால், எது சரி என்பதற்கான விடை கிடைக்கிறதோ இல்லையோ, ஒரு சில அதிர்ச்சிகரமான உண்மைகள் நமக்குப் புலப்படும். முன்பைவிடவும், அரசு ஊழியர்களுக்கு ஊதியம் பல மடங்கு அதிகரித்திருக்கிறது என்பதையும்விட முக்கியமானது, மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப அரசு ஊழியர்கள், அதிகாரிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை என்பதுதான்.

பணிச்சுமை அதிகரிக்க அதிகரிக்க, மறைமுகமாக ஒரு வழியில் லஞ்சமும், ஊழலும், எதேச்சாதிகாரப் போக்கும்ஆல் போல் தழைத்து, அருகுபோல் வேரோடி' வளர்ந்து விடுகிறது.

இதனாலேயே, ஒரு முறை போடப்படும் எந்தச் சாலையும், கட்டப்படும் சாக்கடையும், கட்டடங்களும் பல ஆண்டுகளுக்கும் பலன் தருபவையாக நீடித்து நிலைப்பதில்லை. மீண்டும் மீண்டும் அந்தப் பகுதிகளில் இருந்து கோரிக்கை மனுக்கள் வருவது தவிர்க்க முடியாததுதான்.


இதனாலேயே உடனடித் தீர்வு என்பதெல்லாம், ஆட்சியில் உள்ளவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே. இதுதான் வெளியே செய்தியாகப் பிரபலமாக்கப்படுகிறது.


நுட்பமான பிரச்னைகள் ஏராளம். இதையெல்லாம் ஒவ்வொன்றாக ஆய்வு செய்து தீர்ப்பதற்கான வழிமுறைகளைச் செய்யாமல், குறை தீர்க்கும் கூட்டங்களை இன்னும் வெவ்வேறு வடிவங்களில் நடத்துவது, வண்ணமயமாக நடத்துவது எதுவும் நிரந்தரத் தீர்வைத் தந்துவிடாது.

ஏனென்றால், இவ்வாறாக நடத்தப்படும் முகாம்களில் பெறப்படும் மனுக்களில் 40 சத மனுக்கள் நிராகரிக்கப்படுபவை. எது சரியென்றும், எது சரியான வழியென்றும் தெரியாமல் மீண்டும் மீண்டும் மனு அளித்துக் கொண்டே இருப்பார்கள். எப்படித் தீர்வு கிட்டும்?

நன்றி - தினமணி

மேலும் வாசிக்க...

6 சிக்மா!



சிக்ஸ் சிக்மா என்பது என்னவென்று சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், அது மோட்டரோலா நிறுவனம் கண்டுபிடித்த ஒரு மானேஜ்மென்ட் தந்திரம். கடலை எண்ணெய்க்கு ஐ.எஸ்.ஐ முத்திரை குத்துவது போல ஒரு தரக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ்.

எந்த ஆறு சிக்மா நிறுவனமும் தயாரிக்கும் பொருட்கள் 99.999 சதவிகிதம் கியாரண்டியாக நல்ல தரத்துடன் இருக்கும். சிக்மா என்ற சொல், புள்ளியியலில் வருகிறது. சராசரியிலிருந்து நாம் எவ்வளவு தூரம் விலகி வசிக்கிறோம் என்பதை அளக்கும் குறியீடு அது.

உதாரணமாக, நீங்கள் நட்டு போல்ட் தயாரிக்க ஒரு நிறுவனம் ஆரம்பிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு ஆறு சிக்மா சான்றிதழ் கேட்கிறீர்கள். அவர்கள் முதலில் அளப்பது, உற்பத்தியாகும் பொருட்களில் எவ்வளவு சதவிகிதம் குறைபாடு இருக்கிறது என்பதைத்தான். ஒரு மாதத்தில் பத்து லட்சம் போல்ட்டு தயாரித்தால், அதில் சுமார் மூன்றரை போல்ட்டுகளுக்கு மேல் தப்பு இருந்தால் சர்டிபிகேட் கிடைக்காது! (மூன்றரை போல்ட் என்பதை ஒத்துக் கொள்ள முடியாவிட்டால், ஒரு கோடியில் முப்பது நான்கு பிழைகளுக்கு மேல் அனுமதிக்க மாட்டார்கள் என்று வைத்துக் கொள்ளலாம்).

ஆறு சிக்மா வாங்குவது அவ்வளவு சுலபமல்ல. ஜி.இ., ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களுக்கே சான்றிதழ் கிடைப்பதற்குள் தூக்குப் போட்டவன் மாதிரி நாக்குப் பிதுங்கிவிட்டது. அவர்களிடம் இல்லாத கம்ப்யூட்டரா, எம்.பி.ஏக்களா? இருந்தும் பிழைகளை நீக்கிக் கொள்வதற்கு முக்கியத் தேவை, கடமைக்கு வேலை செய்யாமல் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு வேலை செய்யும் ஊழியர்கள். அப்படிப்பட்ட ஊழியர்கள் மட்டும் கிடைத்தால், எதிர்பாராத இடங்களில் எல்லாம் ஆறு சிக்மாவைச் சந்திக்கலாம். இதற்கு அருமையான உதாரணம், மும்பை நகரின் சாப்பாடுக் கூடைக்காரர்கள்.

புகழ் பெற்ற ஐ.ஐ.எம்.நிர்வாகவியல் பள்ளி. உச்சாணிக் கிளை எம்.பி.ஏக்களை உற்பத்தி செய்யும் நாற்றங்கால். அங்கே ஒரு நாள் மானேஜ்மென்ட் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருப்பவர், கோட்டு சூட்டு போட்ட ஹார்வர்ட் பேராசிரியர் அல்ல; வேட்டியைத் தார் பாய்ச்சிக் கட்டி காந்தி குல்லாய் அணிந்த சர்வ சாதா கூலித் தொழிலாளி. தலை மேல் சாப்பாட்டுக் கூடைகளைச் சுமந்து சென்று வினியோகிக்கும் "டப்பாவாலா'. அவராவது, எம்.பி.ஏ. மாணவர்களுக்குப் போய் மானேஜ்மென்ட் சொல்லித் தருவதாவது? ஏனெனில் அன்று நடந்த பாடம், "தவறுகளே நடக்காமல் வேலை செய்வது எப்படி' என்பதாகும்.

மும்பைக்கு ஒரு முறை சென்று வந்த யாரும் இந்த டப்பாவாலாக்கள் என்பவர்களைக் கவனிக்காமல் இருந்திருக்க முடியாது. மும்பை நகரம், ஒவ்வொரு சதுர கிலோமீட்டருக்கும் இருபதாயிரம் பேர் என்ற ரேட்டில் மக்கள் டப்பாவில் அடைக்கப்பட்ட பேரீச்சம் பழம்போல் நெரிசலாக வசிக்கும் நகரம். இத்தனை பேரும் சேவல் கோழியுடன் சேர்ந்து எழுந்து ரயில் பிடித்து எங்கோ இருக்கும் அலுவலகம் போக வேண்டும். அத்தனை பேருக்கும் மதியம் சாப்பாடு வேண்டும். காண்டீனிலோ, கண்டகண்ட எண்ணெய். இங்கேதான் உதவிக்கு வருகிறது டப்பாவாலா சர்வீஸ். இவர்கள், புற நகர் பகுதியில் இருக்கும் உங்கள் வீட்டிலிருந்து காலை ஒன்பது மணி அளவில் டிபன் காரியரை எடுத்துக் கொண்டு போனால் சரியாக லஞ்ச் நேரத்துக்கு அலுவலகத்தில் சேர்ப்பித்து விடுவார்கள். மாலையில் காலி காரியர்கள் எதிர்த் திசையில் பயணம் செய்து கண்ணன் மேய்த்த ஆநிரைகள் போல் வீட்டுக்கு வந்து சேரும். ட்ரெயின், பஸ், சைக்கிள், மனிதக் கால் என்று சகலவிதமான போக்குவரத்து சாதனங்களையும் பயன்படுத்தி ஒவ்வொரு சாப்பாட்டு மூட்டையும் சராசரியாக அறுபது கிலோ மீட்டர் பயணம் செய்கிறது; நாலு கை மாறுகிறது. இருந்தும் காரியர் மாறிவிடாமல், அவரவர் வீட்டுச் சாப்பாடு அவரவருக்குப் போய்ச் சேருவதுதான் ஆச்சரியம்.



டப்பாவாலாக்களில் பெரும்பாலானவர்களுக்கு எழுதப் படிக்கவும் தெரியாது. டிபன் பாக்ஸ்களில் கோடு, புள்ளி, ஸ்வஸ்திக் என்று தங்களுக்கே உரிய எளிய குறியீடுகளைப் பயன்படுத்தி அதனதன் இலக்கைத் தெரிவிக்கிறார்கள். ஒரு ஏரியாவிலிருந்து சேகரித்த டப்பாக்கள் தபால் பிரிப்பு அலுவலகம் போன்ற ஒரு மரத்தடிக்கு வந்து நாலு திசைகளிலும் பிரித்து அனுப்பப்படுகிறது.

ஐயாயிரம் ஊழியர்கள் தினம்தினம் இரண்டு லட்சம் சாப்பாடுகளை டெலிவரி செய்கிறார்கள். மழையோ புயலோ வெயிலோ, க்வார்ட்ஸ் கடிகாரம் மாதிரி எல்லாம் சீராக, நேரம் தவறாமல் இயங்குகிறது. டெலிவரியில் தப்பு நடப்பது மிகமிகமிக அபூர்வம்!

இந்தத் தொழிலை மட்டும் நம்ம லட்ச ரூபாய் எம்.பி.ஏக்களிடம் விட்டிருந்தால், ஒவ்வொரு டிபன் காரியருக்கும் ஆர்.எஃப் பட்டி, கூடைக்குப் பார் கோட், சுமப்பவர் ஒவ்வொருவருக்கும் ஜி.பி.எஸ் என்று டெக்னாலஜியில் புகுந்து விளையாடி, வரிசை வரிசையாக டெல் கம்ப்யூட்டர்கள் வைத்துக்கொண்டு கண்காணித்து, கடைசியில் அல்போன்ஸ் வீட்டு மீன் குழம்பை அனந்தாச்சாரிக்குக் கொண்டு போய்க் கொடுத்துவிடுவார்கள்.

மாபெரும் மானேஜ்மென்ட் பள்ளிகளும் டப்பாவாலாக்களைப் பக்கத்தில் சென்று கவனித்து ஆராய்ச்சிக் குறிப்புகள் எழுதியிருக்கிறார்கள். ஃபோர்ப்ஸ் என்னும் புகழ் பெற்ற பிசினஸ் இதழ் அவர்கள் ஆறு சிக்மா உலகத் தரத்தை எட்டிவிட்டார்கள் என்று வியக்கிறது.

நியூயார்க் டைம்ஸ் அவர்களைப் பற்றிக் கட்டுரை எழுதுகிறது, பி.பி.சியில் டாக்குமென்டரி படம் காட்டுகிறார்கள். இளவரசர் சார்லஸ் இந்தியாவுக்கு வந்தபோது டப்பாவாலாக்களைச் சந்தித்து அவர்களுடன் பெருமிதமாக போட்டோ எடுத்துக் கொள்கிறார். கலிபோர்னியாவின் சிலிக்கன் பள்ளத்தாக்கில் இதைப் பின்பற்றி "அன்னதாதா' என்று சாப்பாட்டு கேரியர் சர்வீஸ் ஆரம்பிக்கிறார்கள்.

செய்வதைத் திருந்தச் செய்வது என்பது பல்லாயிரம் ஆண்டு பழமையான கருத்து. எகிப்திய பிரமிடின் நாலு பக்கங்களையும் இப்போது அளந்து பார்த்தால் தொண்ணூறு டிகிரிக்கு ஆச்சரியகரமாகக் கிட்டத்தில் அமைத்திருக்கிறார்கள். ஒரு டிகிரியில் ஆயிரத்தில் ஒரு பகுதிதான் வித்தியாசம் கண்டுபிடிக்க முடிந்தது! குவாலிட்டி கண்ட்ரோல் என்ற நவீன வார்த்தை உலகப் போரின்போது உருவானது. தொழிற்சாலை அசெம்பிளி லைன்களில் கார் முதல் குண்டூசி வரை பெரிய அளவில் அடித்துத் தள்ள ஆரம்பித்தார்கள்.

ஊழியர்களை "வேகம், வேகம்' என்று துரத்தியதில் தரம் வீழ்ந்துவிட்டது; கஸ்டமர்கள் கதறினார்கள். எனவே, 1924-வாக்கில் புள்ளியியல் அடிப்படையில் தரக் கட்டுப்பாடு சோதனை செய்யும் வழக்கம் கொண்டுவரப்பட்டது. வால்டர் ஷேவார்ட் என்பவர் அன்றைக்கு எழுதிய புகழ்பெற்ற ஒரு பக்க டாக்குமென்ட்தான், பின்னால் வந்த அத்தனை ஜிலுஜிலு பவர் பாயின்ட்களுக்கும் முன்னோடி. சீக்கிரமே தரக் கட்டுப்பாடு என்பது தாரக மந்திரமாகி (தாரக என்றால் என்ன?), டி.க்யூ.எம், சி.எம்.எம், ஐ.எஸ்.ஓ, ஜப்பானில் கைஸன் என்று கிளைகிளையாகப் புறப்பட்டது. முழு நேர குவாலிட்டி டிப்பார்ட்மென்ட்கள் உருவாக்கப்பட்டு நூற்றுக்கணக்கானவர்கள் நாற்காலியைத் தேய்க்க ஆரம்பித்தார்கள்.

இன்றைக்கு ஆறு சிக்மா, ஏழு சிக்மா என்றெல்லாம் அவர்கள் சீசனுக்கு சீசன் ஒரு புதிய மானேஜ்மென்ட் ஃபாஷன் ஏற்படுத்தி அப்பாவி முதலாளிமார் தலையில் மிளகாய் அரைத்தாலும், தரத்தை உறுதி செய்வதற்கு பிரமிட் காலத்திலிருந்தே ஒரே ஒரு எளிய விதிதான் இருந்து வந்திருக்கிறது.

டப்பாவாலாக்கள் போன்ற தொழில் பக்தி மிகுந்த ஊழியர்கள்! சார்லஸ் இளவரசர் வந்த அன்றைக்குக்கூட, ""எங்கள் வேலை பாதிக்கக் கூடாது; டியூட்டி நேரம் முடிந்த பிறகு வாங்க'' என்று சொல்லி அனுப்பினார்கள். கடந்த நூற்று இருபது வருடங்களாக நடப்பது டப்பாவாலா சர்வீஸ். இருந்தும் ஒரு முறை கூட ஸ்ட்ரைக், ஊர்வலம் என்று நடந்ததே இல்லை. வேலைக்கு வருபவர்களின் பின்னணியைத் தீர விசாரித்துவிட்டுத்தான் கிட்டேயே சேர்க்கிறார்கள். ரிட்டையர்மெண்ட் வயது என்று எதுவும் கிடையாது. அவரவர்கள் உடம்பில் தெம்பு உள்ள வரை வேலை செய்யலாம். அநாவசியமாக லீவு எடுத்தாலோ, காந்திக் குல்லாய் யூனிஃபார்ம் இல்லாமல் காணப்பட்டாலோ கடும் அபராதம் உண்டு! இந்தப் படிப்பில்லாத மக்களிடமிருந்து நமக்கு நிறையப் படிப்பினை இருக்கிறது.

நன்றி - தினமணி கதிர்

ஈழ மக்கள் தமிழ்நாட்டில்...?


சொந்த நாட்டில் ஏற்படும் போரினாலும், பிரச்னைகளாலும் மற்றொரு நாட்டுக்கு இடம்பெயரும் அகதிகள், இடம்பெயர்ந்த நாட்டிலும் அடைக்கலம் கிடைக்காவிட்டால், அவர்களது வாழ்க்கை கேள்விக்குறி தான்!

அப்படியொரு நிலைதான் இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு ஏற்பட்டுள்ளது. உள்நாட்டுப் போரில் உறவையும், உறைவிடத்தையும் விட்டுவிட்டு உயிரை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு, இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு அரசின் அதீத கட்டுப்பாட்டால் வாழ்க்கையே நரகமாக மாறியுள்ளது

இலங்கையில் 1983-ம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப் போரின் விளைவாக, இலங்கை தமிழர்கள் புலம்பெயரத் தொடங்கினர். மூன்றில் ஒருபங்கு தமிழர்கள், வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர். பெரும்பாலானவர்கள் இந்தியாவுக்கு வந்தனர் அவ்வாறு அகதிகளாக இந்தியாவுக்கு வந்து சேர்ந்த இலங்கைத் தமிழர்களைத் தங்க வைக்க தமிழகத்தில் 117 முகாம்கள் அமைக்கப்பட்டன. இந்த முகாம்களில் தற்போது ஒரு லட்சம் பேர் உள்ளனர்.

சொந்த நாட்டில் உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதம் இல்லாமல் வந்த அகதிகளுக்கு, இங்கும் எந்த வாழ்க்கை உத்தரவாதமும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது!

தங்களது இனம், மொழி, கலாசாரம் என பல ஒற்றுமைகளுடன் இருக்கும் தமிழகத்தை நம்பி வந்த இலங்கை மக்களுக்கு பெரும்பாலான இடங்களில் ஏமாற்றமே பரிசாகக் கிடைத்திருக்கிறது

உயர் கல்வி படிக்க 2000-ம் வரை தமிழகத்தில் அகதிகளுக்கு மேல் ஒதுக்கீடு 5 சதம் இருந்தது. ஆனால், நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பின் விளைவாக, அந்த ஒதுக்கீடு பறிபோனது. கல்வி மட்டுமன்றி அனைத்துத் துறைகளிலுமே இந்தியாவில் உள்ள பிறநாட்டு அகதிகளைவிட, இலங்கை அகதிகளுக்கு அதிக கட்டுப்பாடுகள் உள்ளதாகவே காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும், அவர்களுக்கு உதவியாக இருந்தவர்களும் அண்மைக்காலமாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக காவல்துறை, முகாம்கள் மீதான கட்டுப்பாட்டையும், கண்காணிப்பையும் தேவைக்கு அதிகமாகவே அதிகப்படுத்தியுள்ளது. இதனால், அகதிகள் ஓரிடத்தில் நிலையாக வேலை செய்து, அன்றாட வாழ்க் கையை கழிக்கவே கஷ்டப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது

அதீத கட்டுப்பாட்டின் ஒரு பகுதியாக அகதிகள் வைத்திருக்கும் வாகனங்களின் ஆவண நகல்களை வழங்க வேண்டும்; வேலை செய்யும் இடத்தின் முகவரியை தெரிவிக்க வேண்டும்; செல்போன் கண்காணிப்பு, வெளியூர் வேலைக்குச் செல்லக் கூடாது என பல கட்டுப்பாடுகளை காவல்துறையினர் இலங்கை அகதிகள் மீது திணித்துள்ளனர்.

இலங்கையில் அந்த நாட்டு ராணுவம் செய்த வேலையை, இந்தியாவில் காவல் துறையினர் செய்கின்றனர். சோதனைகள் குறையவும் இல்லை, மாறவும் இல்லை. ஆள்களும், இடமும்தான் மாறி இருக்கிறது.

இலங்கை அகதிகள் காவல் துறையினரால் மிகவும் கண்காணிப்படுவதால், அவர்களுக்கு வேலை வழங்க தொழில் நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன. மேலும் சில நிறுவனங்கள் வெளிப்படையாகவே இலங்கை அகதிகளுக்கு வேலை கொடுப்பது இல்லை என அறிவிக்கின்றன.இந்தியாவில் குடியேறி உள்ளதுபோல கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு அகதியாகச் சென்ற இலங்கை மக்களுக்கு, இவ்வளவு விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் இருப்பதாகத் தெரியவில்லை
மேலும், இங்குள்ள அகதிகளைவிட, அங்குள்ள அகதிகள் பொருளாதாரம், கல்வி என அனைத்துத் துறைகளிலும் நன்றாகவே உள்ளனர். மேலும், அங்கு அவர்களுக்கு சமுதா யத்தில் அந்தஸ்தும் கொடுக்கப்படுகிறது.



இலங்கையில் வாழும் தமிழர்களுக்காக போட்டிபோட்டு குரல் கொடுக்கும் தமிழக அரசியல்வாதிகள், உள்ளூரிலேயே அடிப்படைத் தேவைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு, அடைக்கலம் தேடி வந்த இடத்தில் அடைக்கலம் கிடைக்காமல் வதைக்கப்படும் இலங்கைத் தமிழர்களுக்காக ஏன் குரல் எழுப்பவில்லை என்பதே மக்களின் கேள்வி.

நன்றி - தினமணி

வீதியோரத்தில் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் வழி வந்தோர்!


இன்றைய தினமணியின் முகப்பில் இப்படி ஒரு கட்டுரை!

தியாகம் தேசியம் என்று இன்னும் இந்த சொற்களோடு வாழ்ந்த தேசிய போராட்டத்தில் தம் வாழ்வினை அர்ப்பணித்த நல் உள்ளங்களுக்கு நம்மால் உதவ முடியாவிட்டாலும் கூட அவர்தம் மக்களுக்கு கூட நம்மால் சிறு உதவி செய்ய இயலாத சூழ்நிலையில் இருக்கிறோமே என்பதை எடுத்துச்சொல்லும் சேதி!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

ஆங்கிலேய அரசையே ஆட்டிப்படைத்த சுதந்திரப் போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் கொள்ளுப் பேத்தி, பேரன் ஆகியோர் வசிக்க இடமின்றி சாலையோரத்தில் வாழ்கின்றனர்.

"மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?' -என பாரதியார் தனது "சுதந்திரப் பயிர்' என்ற தலைப்பிலான கவிதையில் வ.உ.சிதம்பரனாரின் தியாகத்தை நினைந்து அன்றே உள்ளம் உருகிப் பாடி யிருந்தார்.

அப்படிப்பட்ட தியாகச்சுடர் சிதம்பரனாரின் மூத்த மகன் ஆறுமுகம். இவரது மகள் கமலாம்பாள். இவரது கணவர் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ஞான வடிவேலு.
இந்திய குடியரசுத்தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத், ஞானவடிவேலு வுக்கு தொழிலாளர் நலத்துறையில் பணி வாய்ப்புக்கு ஏற்பாடு செய்தார்.

ஞானவடிவேலு-கமலாம்பாளின் மூத்த மகள் தனலெட்சுமி (52). மகன்கள் சங்கரன் (46), ஆறுமுகம் (40), சோமசுந்தரம் (40). தாய் இறந்த நிலையில் தந்தையே இவர்களை வளர்த்துள்ளார். அருப்புக்கோட்டையில் குடும்பக் கோயிலுக்குச் சொந்தமான வீட்டில் வசித்துள்ளனர். அப்போது, பங்காளிகளுக்குள் ஏற்பட்ட சொத்துப் பிரச்னை காரணமாக கல்லூரணி என்ற ஊருக்கு வாடகை வீட்டில் குடிபெயர்ந்தனர்.

இந்நிலையில் தனலெட்சுமி, சங்கரன் ஆகியோருக்கு திருமணமாகியது. சங்கரன் மதுரை மூன்றுமாவடி சம்பக்குளம் பகுதியில் குடியேறி பெயிண்டிங் தொழில் செய்தார். அவரது சகோதரரான ஆறுமுகமும் உடன் வசித்தார்.

காதல் திருமணம் செய்த தனலட்சுமி கணவரைப் பிரிந்தார். 2003-ல் ஞானவடி வேலு இறந்துவிட்டார். ஆறுமுகம் பெயிண்டிங் வேலை செய்தபோது ஏற்பட்ட விபத்தில் மனநலம் பாதிக்கப்பட்டார். இதனால் திருமணமாகவில்லை.

கணவரும் பிரிந்து, ஆதரித்த தந்தையும் இறந்துவிட்டதால், மதுரை வந்த தனலெட்சுமி மூன்று மாவடிப் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி முறுக்கு வியாபா ம் செய்தார். ஆனால் சொத்துப் பிரச்னை வழக்கு தொடர்பாக அருப்புக்கோட்டைக்கு அடிக்கடி சென்றதால் வியாபாரத்தைச் சரியாகக் கவனிக்க முடியவில்லை.

மாதாமாதம் வாடகை தராததால் வீட்டைக் காலி செய்துவிட்டனர். தனலெட்சுமியின் சகோதரர் சங்கரனுக்கும் பெயிண்டிங் தொழிலில் போதிய வரு வாய் இல்லை.
அவராலும் வீட்டு வாடகையைக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தகராறு ஏற்பட்டது. அவரது மனைவி குழந்தையுடன் பிரிந்து சென்றுவிட்டார்.

இப்போது தனலெட்சுமியும் அவரது சகோதரர்களும் மூன்று மாவடி பஸ் நிலையம் அருகே உள்ள "கண்ணன் கருப்பன் ஆஞ்சநேயர் கோயில்' வளாகத்தில் தங்கியுள்ளனர்.
சங்கரனும், தனலெட்சுமியும் கிடைக்கும் கூலி வேலைக்குச் சென்று வருகின்றனர். அவரது சகோதரர் ஆறுமுகமும் அவ்வப்போது பெயிண்டிங் வேலைக்குச் சென்று வருகிறார். இவர்களை யாரென்று அப்பகுதியில் உள்ளோருக்குத் தெரியவில்லை.

வெட்டவெளியில் கோயிலுக்கு அருகே விற்பனைக்கு குவிக்கப்பட்ட மணல், செங்கல் இடையேதான் தன லெட்சுமியும், அவரது சகோதரர்களும் தினமும் இரவில் உறங்குகின்றனர் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.மழைக்காலத்தில் அங்குள்ள கடைகளின் முன்பகுதியில் தங்குவார்களாம். மழை பெய்தால் அன்று இரவு அவர்களுக்கு சிவராத்திரிதான். இந்தச் சூழலால் தற்போது தனலெட்சுமியும், அவரது சகோதரர்களும் மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கலாம் என ஆதங்கப்படுகிறார் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.

காபி, வடையே காலை உணவு! தெருவோரத் தில் தள்ளுவண்டியில் விற்கப்படும் கேப்பை, கம்பங்கூழே பகலுணவு - என காலத்தைக் கழிப்பதாக விரக்தியுடன் விவரிக்கிறார் தனலெட்சுமி.

வ.உ.சி. வாரிசுகள் என உதவி கேட்டு அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் எதுவும் நடக்கவில்லை என்பதால் வெறுத்துப் போய்விட்டதாக தனலெட்சுமி விரக்தியுடன் சிரிக்கிறார்."ஏதாவது ஓர் இடத்தில் குறைந்த ஊதி யத்திலாவது என்னை வேலைக்கு சேர்த் துவிட முடியுமா?'' என நம்மைப் பார்த்து அவர் கெஞ்சியதைக் கண்டு கண்ணீர் தான் வருகிறது.சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு ஏதேதோ சலுகைகள் செய்ததாகக் கூறி வரும் தமிழக அரசுக்கும், வ.உ.சி. பெயரில் கட்சியும், மன்றமும் நடத்துவோருக்கும் இந்த தனலெட்சுமி போன்றோரது கஷ்டம் தெரியாமல் போனது எப்படியோ? வ.உ.சி. சிறையில் இழுத்த செக்கையும், அவர் பயன்படுத்திய பொருளையும்கூட பத்திரப்படுத்தி வைத்து பாதுகாத்துகொண்டிருக்கிறது தமிழக அரசு!
நன்றி - தினமணி

”நேரம்” சரியில்லை!


சில நேரங்களில் அரசினாலோ அல்லது ஆள்பவர்களாலோ எடுக்கப்படும் முடிவுகள் பைத்தியக்காரதனமாகவோ தெரிகின்றது! அட்லீஸ்ட் ஆலோசனை சொல்லுபவர்களை (நிறைய படிச்சவங்கதானே இருக்காங்க!??) நினைத்துப்பார்த்தால் கூட இவர்களும் கூட இதற்கு உடந்தையாகி இப்படியான முடிவுகளை ஏற்க வாய்மூடி மெளனியாக இருப்பார்களோ என்று நினைக்கதோன்றுகிறது!- என்ன மேட்டருன்னா....!

"ஜூன் 1-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் தாலுகா தலைநகரங்களில் உள்ள நூலக வாசகர்களுக்கு "நேரம்' சரியில்லாமல் போய்விட்டது! மே 31-ம் தேதி வரை காலை 8 மணி முதல் 11.30 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருந்த நூலகங்கள் ஜூன் 1-ம் தேதி முதல் பொது நூலகத் துறையால் புதிய வேலைநேரத்தில் மாற்றிய மைக்கப்பட்டன.

அதன்படி, காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இடைவிடாமல் நூலகம் திறக்கப்படும் எனக் கூறி புதிய வேலை நேரத்தில் நூலகங்கள் திறக்கப்படுகின்றன.மற்ற அரசு அலுவலகத்திற்கும் நூலகத்திற்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. அதனால் தான் நூலகத்திற்கான வார விடுமுறை வெள்ளிக்கிழமை வைக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை முழு வேலைநாள். ஞாயிறு நூலகம் இயங்கும். இதற்கு காரணம் விடுமுறை நாளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் நூலகத்திற்கு வந்து படிக்கவும் புத்தகம் எடுத்துச் செல்வதற்காகவும்தான்...!

1993-ஆம் ஆண்டுக்கு முன்பெல்லாம் நூலகங்கள் காலை 8 மணி முதல் 11 மணி வரையும் மாலை 4 மணி முதல் 7.30 மணி வரையும் செயல்பட்டன. 1993ஆம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நூலகத்தின் வேலை நேரம் மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி காலை 8 மணி முதல் 11.30 மணி வரையும் மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் செயல்படத் தொடங்கின. காலையில் அரை மணி நேரம் அதிகமாக்கப் பட்டு இரவில் அரை மணி நேரம் குறைக்கப்பட்டது.

இரவு 7.30 மணி வரை, படிக்கவும் புத்தகம் மாற்றவும் வரும் வாசகர்கள் அப்போது கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் தங்கள் பணிகளை முடித்துவிட்டு 6 மணிக்கு மேல் நூலகம் வந்தார்கள்; அதற்கு ஜெயலலிதா அரசு முட்டுக்கட்டை போட்டு ஏழு மணிக்கே நூலகத்தை இழுத்து மூட ஆணையிட்டது. சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின் 2008ஆம் ஆண்டில் நூலக வாசகர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

வாசகர்களின் விருப்பத்தைக் கேட்காமல் அரசே தன்னிச்சையாக நூலக வேலை நேரத்தை தாலுகா நூலகங்களில் மாற்றியுள்ளது பொதுமக்களுக்கும் நூலக வாசகர்களுக்கும் நிச்சயமாக மரண அடிதான். நூலகங்களை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று அரசு கங்கணம் கட்டி செயல்படுகிறதா?

பொதுமக்கள் தங்கள் வீட்டு வரி கட்டும் போது நூலக வரி 10 சதவீதம் சேர்த்து வசூலிக்கப்படுகிறது; அதாவது ஒருவர் வீட்டு வரி ரூ. 100 கட்டுகிறார் என்றால் நூலக வரி 10சதவீதம் சேர்த்து ரூ. 110 வீட்டு வரியாக வசூலிக்கப்படுகிறது.

இந்த நூலக வரியை மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் தனியாக நூலகத்துறையினரிடம் கொடுத்து விடுகிறார்கள். இந்த நூலக வரியைக் கொண்டு தான் நூலகத்தின் செலவினங்கள் செய்யப்படுகின்றன.

ஆக,நாம் ஒவ்வொருவரும் அரசு நூலகங்களின் பங்குதாரர்களாக உள்ளோம்; நூலக வளர்ச்சியில், அக்கறையில் நூலகத் துறையை விட நமக்குத்தான் அதிக உரிமை உள்ளது.

பள்ளிக்கு மிக அருகில் அரசு நூலகங்கள் இருக்கும்போது, முன்கூட்டியே பள்ளிக்கு வரும் மாணவர்கள் காலை 8 மணி முதல் 9 மணி வரை ஒருமணி நேரம் தங்களின் பொது அறிவை வளர்த்துக் கொள்ள அன்றைய நாளிதழ்களைப் படித்து வந்தார்கள்.

அனைத்து நாளிதழ்களையும் காசு கொடுத்து வாங்கிப் படிக்க முடியாத மாணவர்கள் காலை நேரத்தில் அரசு நூலகத்தில் இலவசமாக நாளிதழ்கள், வார, மாத இதழ்களைப் படித்து மகிழ்ந்தார்கள். பள்ளிக்குச் சென்று முக்கியமான செய்திகளை சக நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டார்கள். அந்த வாய்ப்பு இனிமேல் கிடைக்காது. மாணவர்கள் மட்டுமல்ல, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தனியார் துறை ஊழியர்கள் தாங்கள் வேலைக்குச் செல்லும் முன் நூலகத்தைப் பயன்படுத்தினார்கள். பத்து மணிக்கு தான் அரசு அலுவலகங்களுக்கும் தனியார் அலுவலகங்களுக்கும் சென்று வந்தார்கள்.

இவர்கள் அனைவரும் 1-ம் தேதியில் இருந்து நூலகத்தைப் பயன்படுத்த முடியாமல் போய்விட்டது. நூலகம் காலை 10 மணிக்குத் திறக்கப்படும் போது எப்படி வர முடியும்? இவர்களால் மாலை நேரங்களிலும் நூலகத்தைப் பயன்படுத்த முடியாது. பள்ளி மற்றும் கல்லூரி முடிந்து வீட்டிற்குச் சென்று பிறகு நூலகம் வந்தால் 6 மணியைத் தாண்டி விடும். இதேபோல்தான் வேலைக்குச் செல்பவர்களின் நிலையும். 6 மணிக்குத்தான் அரசு மற்றும் தனியார் துறை வேலை முடியும். கிராமப்புறங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் பள்ளி முடிந்து, நகர்ப்புறத்திற்கு வரும்போது 6 மணியைக் கடந்து விடும். முன்பு 6 மணிக்கு மேல் தான் ஆசிரியர்கள் நூலகத்திற்கு வருவார்கள்.

குடிமகன்களின் தாகத்தைத் தீர்க்க டாஸ் மாக் மதுபானக் கடைகள் இரவு 11 மணி வரை திறந்திருக்கிறது. ஆனால், அறிவு தாகத்தைத் தீர்க்கும் அறிவுச் சுரங்கமான நூலகங்கள் மாலை 6 மணிக்கே பூட்டப்படுகிறது. என்ன கொடுமை ஐயா இது!

நன்றி - தினமணி

ஆடி மாசம் - தினமணியிலிருந்து...!




ஆடி மாதம் இது சிலருக்கு வாய்ப்புகளை வழங்கும் மாதமாகவும், மணமான இளம் தம்பதிகள் விரும்பாத மாதமாகவும் திகழ்கிறது. "ஆடிப்பட்டம் தேடி விதை' என்ற பழமொழிக்கேற்ப விவசாயப் பணிகளை விவசாயிகள் தொடங்கும் மாதமும் இதுதான்.

பெரும்பாலானவர்கள் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் எதையும் ஆடி மாதத்தில் மேற்கொள்ள மாட்டார்கள். இதனாலேயே ஜவுளி விற்பனை பிற மாதங்களை விட மந்தமாக இருக்கும். இதெல்லாம் அந்தக் காலம். விளம்பர யுகத்தில், வீடு தேடிவரும் டி.வி. விளம்பரங்கள் மூலம் ஜவுளிக் கடைக்கு மக்களை கடலென இழுக்கும் காலமிது. சமீப காலமாக ஆடி மாத விற்பனையைப் பெருக்க ஜவுளி வியாபாரிகள், வர்த்தக நிறுவனங்கள் பலப் பல உத்திகளைக் கடைப்பிடித்து வாடிக்கையாளர்களின் கவனத்தை தங்கள் தயாரிப்புகளின் மீது திருப்புகின்றனர

இப்போதே தீபாவளிக்குத் தேவையானதை வாங்கிவைத்து பணத்தைச் சேமிக்கலாம் என்று நினைப்பவரும் உண்டு.

பணிக்குச் செல்லும் பெண்கள், அந்த வருடத்தின் விசேஷ நாள்களுக்கும் சேர்த்து, ஆடி மாதத் தள்ளுபடியை பயன்படுத்தி அரை டஜன் வரை வாங்குகின்றனர் எல்லாம் சரி, ஜவுளி நிறுவனங்கள் அளிக்கும் தள்ளுபடி உண்மையிலேயே தள்ளுபடிதானா. இதனால் வாடிக்கையாளர்களுக்கு பலன் உண்டா? என்றால் அதை எந்த வகையிலும் "செக்' செய்து பார்க்க முடியாது.

ஏனென்றால், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களுக்கு உள்ள ஒரே சீரான மதிப்பு துணிகளுக்குக் கிடையாது.ஆடிக் கழிவுக்கு முன் இதுதான் இப்பொருளின் விலை என்று யாருக்குமே தெரியாது (கடைக்காரரைத் தவிர).

தீபாவளிக்காக வாங்கும் துணிகளில் தேங்கும் துணிகளுக்கு இத்தகைய தள்ளுபடி அளித்து விற்பதாக பெரும்பாலான நிறுவனங்கள் கூறுகின்றன. ஆண்டு முழுவதும் தள்ளுபடி அளிக்கும் அரசு நிறுவனங்களான கோ-ஆப் டெக்ஸ், ஆந்திர அரசின் ஆப்கோ போன்ற துணி விற்பனையகங்களில் இந்த அளவு கூட்டம் குவியாததற்குக் காரணம் என்ன? என்பதும் புரியாத புதிர்! ஆண்டு முழுவதும் விற்பனையைத் தக்க வைத்துக் கொள்ள ஒவ்வொரு துறையினரும் ஓர் உத்தியைக் கடைப்பிடிக்கின்றனர். அந்த வகையில் வந்தது தான் இந்த "ஆடிக் கழிவு' என்று வர்த்தகத்துறையினர் கூறுகின்றனர்.

ஆண்டு முழுவதும் ஆகும் விற்பனையை ஒரே நாளில் சம்பாதிக்க தங்க நகை விற்பனையாளர்கள் கண்டறிந்த யுக்திதான் "அட்சய திருதியை'.அதைப் போல ஜவுளித்துறையினர் ஆடி மாத தேக்க நிலையைப் போக்க கண்டுபிடித்த உத்தியே "ஆடிக் கழிவு' என்று சொல்வோரும் உண்டு.

உண்மையிலேயே இந்தத் தள்ளுபடி விற்பனையால் வாடிக்கையாளர்களுக்குப் பலன் உண்டா? என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம்..

சரி படத்தில இருக்கற புடவை பத்தி ஒரு குறிப்பு! இது லேட்டஸ்டு டிசைன் சாரியாம்! முத்து மணிகள் கோர்த்து இருக்கும் இந்த சேலை நல்லி ஸ்பெஷல்! - அம்மிணி பத்தி உண்மையாவே ஒண்ணும் தெரியாதுப்பா!??? :-(

பள்ளி பார்க்காத + பாலகர்கள் - தினமணியிலிருந்து....!


தமிழகத்தில், எய்ட்ஸ் நோய் பரவுவது கட்டுப்பாட்டு மையத்தால் நிகழ்த்தப்பட்டுள்ள விழிப்புணர்வுப் பிரசாரங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது வரவேற்கப்படவேண்டிய விஷயம்.

எய்ட்ஸ் பாதிப்பு என்பது பெரியவர்களை விட குழந்தைகளுக்கு அதிக சாபக்கேடான ஒன்று. பெரியவர்கள் முறையற்ற உறவுகளால் நோய் தாக்கி பாதிக்கப்படுவது கூட அவர்களது செயலுக்குக் கிடைத்த தண்டனையாக எடுத் துக் கொள்ளலாம். ஆனால் தவறு செய்த கணவனால் பாதிக்கப்படும் மனைவி, மருத்துவர்களின் அலட்சியத்தால் எச்ஐவி பாசிடிவ் கொண்ட ரத்தம் செலுத்தப்பட்டவர்கள், பெற்றோர் மூலம் நோய் பாதிக்கப்பட்ட குழந் தைகள் போன்றோர் உண்மையிலேயே பரிதாபமானவர்கள்.

குழந்தைகளுக்கு எய்ட்ஸ் நோய் தாக்கும் பட்சத்தில் அந்த இளவயதிலேயே அவர்களது வாழ்நாள் எண்ணப்படுவது தெரியாமலே வளரவேண்டிய சூழல். குழந்தைகளுக்கு 7 முதல் 8 வயது வரை தங்களுக்குள்ள பாதிப்பு பற்றி தெரியாமலே கூட இருக்கும். அதனால் அவர்களுக்கு மனதில் பாதிப்பு மிகுந்திருக்காது. ஆனால் இன்றைய கல்வி முறையில் 5 அல்லது 6-ஆம் வகுப்புகளிலேயே அறிவியல் பாடங்களில் இது போன்ற விஷயங்கள் விளக்கப்படுவதால் குழந்தைகள் தங்களுக்குள் உள்ள வேற்றுமை, ஒற்றுமைகளை கேட்டது, படித்ததுடன் ஒப்பிட்டு ஆராய ஆரம்பித்து விடுகிறார்கள்.

எனவே நோய் பாதிப்பைவிடவும் மனதில் ஏற்படும் குழப்பமே அவர்களது வாழ்வுக்கு முதல் எதிரியாய் மாறுகிறது. இதனால் மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் குழந்தைகள் அடுத்தவர்களை விட்டு ஒதுங்கிவிடுவதும் உண்டு. அவர்களின் விளையாட்டுத்தனம் போய் மனநிலை எதிலும் ஒன்றாமல் தனித்து விடப்பட்டதாக நினைத்து தடம் மாறவும் செய்கின்றனர்.

இந்நோய் தாக்கப்பட்ட பள்ளி செல்லும் குழந்தைகள் பக்கத்திலிருக்கும் குழந்தைகளிடம் இருந்து அதிக நோய்த் தொற்றுகளைச் சம்பாதிக்கும் வாய்ப்பும் அதிகம். இவர்களுக்கு வியாதி தாக்கக் கூடிய தன்மை அதிகம் என்பதால் சாதாரணக் குழந்தைகள் நோய்த் தொற்றால் வெறும் சளித் தொல்லைக்கு ஆளானால் எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளுக்கு சளியுடன் உபரியாக நிமோனியாவும் (காய்ச்சல்) தொற்றிக் கொள்ளும்.

தோல் வியாதிகள் இவர்களுக்கு பெருந் தொல்லையாய் இருக்கும் என்பது அச்சுறுத்தும் உண்மை. சாதாரணக் கொசு கடித்தால் கூட இவர்கள் அரிப்பு, புண், ரத்தம் அல்லது சீழ் வடிதல் எனப் பாதிக்கப்படுவது பரிதாபம். எய்ட்ஸின் முக்கியத் தாக்கமே நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைப்பது தான் என்ப தால் அரிப்பு, புண் போன்றவை சில நேரங்களில் தொடர்கதையாகும் வாய்ப்புமுண்டு.

மேலும் பள்ளிகளில் இவர்கள் எய்ட்ஸ் பாதித்த குழந்தைகள் எனத்தெரிந்தால் அனேகமாக ஒதுக்கப்படுகிறார்கள். பல பள்ளிகளில் இவர்களைச் சேர்த்துக்கொள்வதே கிடையாது. இதனால் இவர்களுக்கு கல்வி என்பது கேள்விக்குறிதான்.

இக் குழந்தைகள் சந்திக்கும் அடுத்த பிரச்சனை அடைக்கலம். அனேகமாய் இக்குழந்தைகள் பெற்றோரிடமிருந்தே நோயைப் பெறுவதால் அவர்களின் பெற்றோரும் இறுதி வரை குழந்தையைப் பேண முடியாமல் இடையிலேயே மரணத்தைத் தழுவிவிடும் நிலையில் குழந்தைகள் அனாதை ஆக்கப் படுகிறார்கள். இந்நிலையில் குழந்தைகளின் தாத்தா, பாட்டி என யாராவது அடைக்கலம் கொடுத்தால் மட்டுமே உண்டு. ஆனால் அவர்களும் பொருளாதார நிலையில் பின்தங்கியிருக்கும் பட்சத்தில் குழந்தையின் நிலை அதோகதிதான்.

பெற்றோரை இழந்த, நல்ல நிலையில் உள்ள குழந்தைகளையே கண்டு கொள்ள ஆளில்லாத இன்றைய நிலையில் கூடுதலாக எய்ட்ஸ் தாக்கத்துக்கு ஆளான குழந்தைகள் என்றால் உறவுகள் சொல்லாமல் ஓடிப் போவதைத் தவிர்க்க முடிவதில்லை. இவர்களைப் போன்றோரை சேர்த்துக் கொள்ள சேவை இல்லங்களும் குறைந்த அளவிலேயே உள்ளன.

இவர்கள் சந்திக்கும் அடுத்த மிக முக்கியப் பிரச்னை மருத்துவம். இவர்களை அனேக தனியார் மருத்துவமனைகள் சேர்த்துக் கொள்ளத் தயங்கும் நிலை இன்றும் உள்ளது கண்டிக்கத்தக்க ஒன்று. பொருளாதார நிலையில் பின்தங்கியோர் அரசு மருத்துவமனைகளை நாடத் தயங்குவதில்லை. ஆனால் பணம் படைத்தோர் இங்கு வரத் தயக்கம் காட்டுகின்றனர்.

இக்குழந்தைகளை அரவணைக்க குடும்ப அமைப்பிலான இல்லங்கள் அமைப்பது, சமூகத்திலிருந்து ஒதுக்காத நிலையை ஏற்படுத்துவது, பள்ளிகளில் அங்கீகாரம், தனியார் மருத்துவமனைகளில் உரிய மருத்துவம், உறவுகள் விலகாமை, நோய் குறித்த முழுமையான விழிப்புணர்வு போன்றவற்றால் இவர்கள் மனப் புழுக்கம் இல்லாமல் எஞ்சிய நாள்களையாவது வாழ்ந்து பார்க்க வழி செய்வோம்!

எண்ணங்கள் செயல்களை மேம்படுத்துங்கள்! - தினமணி - 2


நற்சிந்தனைகளை மனதில் எண்ணும் போது, திட்டமிடலும் சிறப்பாக அமையும். பின்னர், திட்டமிட்டபடி அதைத் திறமையாகச் செயல்படுத்த வேண்டும்.

செயல்களில் வெற்றிகாண தளராது முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். முயற்சிகள் தோல்வியுற்றாலும் மனம் தளரக் கூடாது.

தோல்விகளுக்கான காரணங்களை பிறர் மீது திணிக்கக் கூடாது.

அனைவரையும் அன்பால் அரவணைக்க வேண்டும். அன்பினால் வெல்ல முடியாதது ஒன்றுமே இல்லை. இல்லத்திலும் சரி, வெளியிலும் சரி, தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும். தனது பொறுப்பிலுள்ள அனைவரையும் அன்பால் அரவணைத்து, அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.அவர்களது தேவைகளில் நிறைவேற்றக் கூடியவற்றை நிறைவேற்ற வேண்டும்.

குறிப்பாக மன இறுக்கத்தை கைவிடப் பழகிக் கொள்ள வேண்டும். மன அழுத்தமானது மன உளைச்சலை ஏற்படுத்துவதுடன், மனித உயிரையே மாய்த்துவிடும். எனவே மனசாட்சிப்படி நடக்க வேண்டும்.

மனசாட்சிக்கு ஏற்ப வாழ வேண்டுமானால், அதற்கு இன்றிமையாதது மனப்பக்குவம். இதற்கான பயிற்சிகளை நாள்தோறும் வளர்க்கத் தவறக் கூடாது.

இந்த உலகில் நிரந்தரமானது ஒன்றுமில்லை.மாற்றம் என்ற ஒன்றைத் தவிர மற்ற அனைத்தும் மாற்றங்களுக்கு உள்பட்டது.

எனவே மாறிவரும் சூழலுக்கு ஏற்ப, நாம்தான் நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். தோல்வியுற்றபோது துவளவும், வெற்றிபெறும்போது வீறுகொள்ளவும் கூடாது.எந்தச் செயலைச் செய்தாலும், அதை முனைப்புடன் செய்ய வேண்டும். முழு ஈடுபாட்டுடன் செய்தால்,கடினமானதும் கைகூடும். முடியாதது என்று ஒன்றுமே இல்லை.

பிறரை அழிக்க வேண்டும்; பிறருக்கு இன்னல்கள் விளைவிக்க வேண்டும் என்ற கொடிய எண்ணங்களுக்கு ஒருபோதும் இடம் கொடுக்கக் கூடாது. அனைவரும் நம் சகோதரர்களே என்ற அன்பு மலர்கள் நம் மனதில் மலர வேண்டும். அனைத்து உள்ளங்களும் மகிழ்ச்சியில் திளைக்க வேண்டும்.

துன்பங்களையும், எதிர்பாராது ஏற்படும் இன்னல்களையும், தாங்கிக் கொள்ளும் வலிமையை, பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

தோல்விகளை படிப்பினைகளாகக் கருதி, அவற்றை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவற்றை வெல்வதற்கான முயற்சிகளை மீண்டும் மீண்டும் மேற்கொள்ள வேண்டும். முயற்சித்தால் முடியாதது ஒன்றுமில்லை.

வாழ்க்கை வாழ்வதற்கே! வாருங்கள் வாழ்ந்து காட்டுவோம்!

நன்றி - தினமணி

ஏற்கனவே போட்ட பார்ட்டு 1 இங்க இருக்கு!

எண்ணங்கள் செயல்களை மேம்படுத்துங்கள்! - தினமணி - 1


ஒருவருடைய வாழ்வையும், வளத்தையும் நிர்ணயிப்பது அவரது சிந்தனையே. மனிதனாகப் பிறக்கும் ஒவ்வொருவரும் நற்சிந்தனைகளை எண்ணினால், அலைக்கழிக்கப்படும் மனதை எந்த நிலையிலும், எத்தகைய சோதனைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெற முடியும்.

இந்த உலகில் இறைவனால் படைக்கப்படும் ஒவ்வொரு ஜீவராசிக்கும் உயிர் உண்டு என்பதை உணர வேண்டும். குறிப்பாக மனித உயிரை மதிக்க வேண்டும். மனிதநேயத்தைப் பேண வேண்டும். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். அதை விடுத்து வீண் வாதம் செய்யத் தேவை யில்லை.

நானே அனைத்தும் அறிந்தவன்; எனக்கு நிகர் எவருமில்லை என்ற எண்ணத்தைக் கைவிட வேண்டும். நான் என்ற அகந்தையை கண்டிப்பாக விட்டொழிக்க வேண்டும்.

சமூகத்தில் நீ பெரியவனா? நான் பெரியவனா? என்ற தேவையற்ற சர்ச்சையை விடுத்து, சமூகத்திற்குப் பயனளிக்கும் வகையில் நமது பணிகள் அமைய வேண்டும்.

இறைவனின் படைப்பில் அனைவரும் சமம் என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும். உயர் நிலையில் உள்ளவர்கள், தமக்குக் கீழ்நிலையில் உள்ளவர்களிடம் இன்முகத்துடன் பழக வேண்டும். அனைவரிடத்தும் அன்பு காட்ட வேண்டும்.அவ்வாறு அவர்களிடம் அன்பு காட்ட முடியாவிட்டாலும் பரவாயில்லை, அவர்களுக்கு இன்னல் விளைவிக்கக் கூடாது. பிறருக்கு உபகாரம் செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யவே கூடாது.

நாம் பேசும் வார்த்தைகள் பிறரது இதயங்களில் இதமளிக்கும் வகையில் இருக்க வேண்டுமே தவிர, ரணங்களை ஏற்படுத்தும் வகையில் அமையக் கூடாது.

நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரையும் நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இன்று நாம் செலவழித்துக் கொண்டிருக்கும் நாள் மீண்டும் திரும்பப் போவதில்லை. எனவே இன்றைய நாளை இனிய நாளாக்கிக் கொள்ள வேண்டும். நல்ல செயல்களைச் செய்ய எண்ணும் போது, எந்த ஒரு நாளையும் தேவையற்ற நாள் என கழிக்கக் கூடாது.

திட்டமிடலே வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு அஸ்திவாரம். திட்டமிடாத வாழ்க்கை அஸ்திவாரம் இல்லாத கட்டடம் போன்றதாகும்.திட்டமிடலுக்கு அடிப்படை நல்ல எண்ணங்களே. நம்மால் எதையும் செய்ய முடியும்.

இதை உறுதியாகச் செய்து முடிப்போம் என்ற நம்பிக்கையை முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும்.


நன்றி - தினமணி

கேபிள் டிவி - ஏமாளி மக்கள் - எத்தனை கேள்விகள்? - தினமணியிலிருந்து...


கட்சி தொடங்கிய கையோடு ஒவ்வொரு தமிழக அரசியல் தலைவரும் யோசிக்கும் அடுத்த விஷயம் தங்களுக்கென ஒரு தொலைக்காட்சி சேனல் தொடங்குவது பற்றித்தான். அந்த அளவுக்கு தொலைக்காட்சியின் தாக்கமும் ஆதிக்கமும் தமிழகத்தில் இருப்பதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.

தமிழகத்தில் மட்டும் சுமார் 2 கோடி வாடிக்கையாளர்கள் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. தமிழ்நாட்டில் 10 கோடி மக்கள் தொகையில், தொலைக்காட்சி பார்க்காதவர்களின் எண்ணிக்கை 5 சதவீதம்கூட இருக்காது என்கிற நிலைமை. போதாக்குறைக்கு அரசே இலவசமாக தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கவும் தொடங்கி விட்ட நிலையில், இதைவிடச் சிறந்த பிரசார சாதனம் இருக்க முடியாது என்று அரசியல்வாதிகள் கருதுவதில் ஆச்சரியம் இல்லை.

தொலைக்காட்சிச் சேனல்களுக்கு இடையிலான யுத்தம் ஒருபுறம் இருக்க, இந்தச் சேனல்களை விநியோகம் செய்யும் கேபிள் டிவி நிறுவனங்களின் போட்டா போட்டி வேறு தொடங்கி இருக்கிறது. கேபிள் டிவி விநியோகத்தின் மொத்த குத்தகைக்காரர் என்பதுபோல இயங்கி வந்த சுமங்கலி கேபிள் விஷனின் (எஸ்.சி.வி.) மேலாதிக்கத்தை ஒழிப்பது என்று கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கி இருக்கிறது மதுரையிலுள்ள ராயல் கேபிள் விஷன் (ஆர்.சி.வி.)வேடிக்கை என்னவென்றால், எஸ்.சி.வி. என்னென்ன யுக்திகளைப் பிரயோகித்துத் தனக்குப் போட்டியே இல்லாமல் மேலாதிக்கம் செய்ததோ, அதையே இப்போது ஆர்.சி.வி.யும் செய்ய முற்பட்டிருக்கிறது.

ஒரு தவறு அதே தவறு மீண்டும் செய்யப்படுவதை நியாயப்படுத்தி விடாது. அப்போது, தங்களுக்கு இருந்த அரசியல் பலத்தைப் பயன்ப டுத்தித் தங்களது வியாபார எதிரிகளை எஸ்.சி.வி. முடக்கியது எப்படித் தவறோ, அதேபோல இப்போது ஆர்.சி.வி.யின் செயல்பாடுகளும் கண்டனத்துக்குரியவை.

முன்பணம் கட்டி, மாதக் கட்டணமும் செலுத்தி கேபிள் மூலம் இந்தத் தொலைக்காட்சிச் சேனல்களைப் பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு எந்தவித உரிமையும், தாங்கள் விரும்பும் சேனல்களைப் பார்க்கும் வசதியும் கிடையாது என்றால் எப்படி? யார் வேண்டுமானாலும் கேபிள் விநியோகம் செய்யட்டும்; யாருடைய சேனல் நன்றாகவும், கட்டணம் குறைவாகவும் இருக்கிறதோ அதை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளட்டும் என்பதுதானே முறை? இதைக் கண்காணித்து கேபிள் விநியோகஸ்தர்கள் அனைவருக்கும் நியாயம் கிடைப்பதை உறுதி செய்வதற்குத்தானே அரசும் ஆட்சியாளர்களும் இருக்கிறார் கள்? முந்தைய அதிமுக அரசு அறிவித்தபோது எங்கள் கழுத்தை நெரிக் கிறார்கள் என்று கூக்குரலிட்டு எஸ்.சி.வி.க்கு ஆதரவாகப் பேரணி நடத்தி, ஆளுநரிடம் மனு கொடுத்தவர்கள், உறவு கசந்ததும் அரசுத் தரப்பில் கேபிள் விநியோகம் என்று அறிவித்தனர். அறிவித்து வருடம் ஆயிற்று, கேபிளையும் காணோம், விஷனையும் காணோம்.

முதல்வரின் மகனே கேபிள் விநியோகம் செய்ய ஆர்.சி.வி. தொடங்கு கிறார். அப்படியானால் அரசு நிறுவனம் அவ்வளவுதானா? மின்சாரம் இல்லாமல் தொலைக்காட்சி பார்க்க முடியாது. மின்சார விநியோகம் செய்யும் மின்வாரியம் கேபிள் விநியோகத்தையும் செய்யட்டுமே. மின்வாரிய நஷ்டமாவது ஈடுகட்டப்படுமே? அதை ஏன் செய்ய இவர்கள் முன்வரவில்லை? இந்தக் குடும்பமோ, அந்தக் குடும்பமோ, தங்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் கேபிள் விநியோகம் செய்ய வேண்டும் என்பதாலா?

அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் இலவசச்சேனல்களில் தான் விளம்பரங்கள் போடமுடியும். கட்டணச் சேனல்களில் விளம்பரங்கள் இருக்காது. இங்கே மாதக் கட்டணமும் வசூலித்து, ஐந்து நிமி டத்துக்கு ஒரு தடவை விளம்பரங்களையும் போடும் அயோக்கியத்தனமும் நடைபெறுகிறதே, அதைக் கேள்வி கேட்பாரே இல்லையா?

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் வாடிக்கையாளர்கள் அனைவரையும் முட்டாள்களாக்கி,விளம்பரத்திலும், கட்டணத்தி லும் வருமானத்தை அள்ளிக் விக்கிறார்களே,இது என்ன நியாயம்? 2 கோடி கேபிள் இணைப்புகள் என்றால்,ரூ. 100 மாதக் கட்டணம் என்று வைத்துக் கொண்டாலும் வருடத்திற்கு ரூ. 2,400 கோடி ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதில் அரசுக்கு என்ன கிடைக்கிறது? இந்த வருமானம் ஏன் மின்சார வாரியத்துக்குக் கிடைக்கக் கூடாது? அதை விட்டுவிட்டு மின்வாரியத்தைத் தனியார் மயமாக்க சிந்திப்பது ஏன்? எஸ்.சி.வி., ஆர்.சி.வி. என்றெல்லாம் தனியார் கேபிள் விநியோகம் நடைபெறுவதாக இருந்தால் அனைத்துத் தரப்பினரும், எந்த உருட்டல் மிரட்டலுக்கும் ஆட்படுத்தப்படாமல் தங்களது சேவையை முன்னிலைப்படுத்தி போட்டியிடட்டும். அதனால் வாடிக்கையாளர்களுக்கு நன்மை கிடைக்கும். இல்லையென்றால், தனியாரின் தலையீடு இல்லாமல் அரசு நடத்தட்டும். அதை விட்டுவிட்டு, ஏகபோக உரிமை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குக் கைமாறுவதில் பொதுமக்களுக்கு என்ன நன்மை?

நன்றி - தினமணி

டாஸ்மார்க் தண்ணி வுட்டு வளர்ந்தோம்! - தினமணி

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில், இளைஞர்களின் கைகளில் மதுக் கோப்பைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் டாஸ்மாக் நிமிர்ந்து நிற்கிறது, இளைஞர்க ளின் எதிர்காலம் தள்ளாடுகிறது.

எதிர்கால வளம்மிக்க இந்தியாவில், உழைக்கும் சக்தியாக இருக்க வேண்டிய இன்றைய இளைஞர்கள், மது உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாகி நல்ல குணங்களை இழந்து, கெட்ட குணங்களை அதிகப்ப டுத்திக் கொண்டு, தன் எதிர்காலத்தை இருண்டகாலமாக மாற்றி, வாழ்க்கையைக் கசப்பாக மாற்றி வருகின்றனர்.

இன்று எந்த வரைமுறையுமின்றி, கிராமங்கள்தோறும் அரசு மூலம் மிக எளிதாக மது கிடைப்பதால், இளைஞர்களிடையே மதுப் பழக்கம் அதிகரித்து வருகிறது.

முன்பெல்லாம் மனஅழுத்தம் உடையவர்கள், காதல் தோல்வி அடைந்தவர்கள் தான் மது குடிப்பார்கள் என கேள்விப்பட்டுள்ளோம். அதுவும் இப்பழக்கம் உள்ளவர்களை கிராமங்களில் விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்கள் மட்டுமே குடிகாரர்களாக தெரிவர்.ஆனால் இன்றைய நிலைமையே வேறு.

மது குடிக்காதவர்கள் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம். இன்றைய இளைஞர்கள் மது குடிப்பதையே ஒரு நாகரிகமாகக் கருதுகிறார்கள். காதணிவிழா முதல், கல்யாணவிழா, கருமாதி வரை நடைபெறும் விருந்துகளில், மதுவே முக்கியப் பங்கு வகிக்கிறது. முன்பெல்லாம் விருந்து என்றால் அதில் இனிப்பு, காரம், காபி இருக்கும். இன்று சாதாரணமாக சிறுசிறு விஷயங்களுக்கு கூட விருந்தில் மதுவைப் பயன்படுத்துகிறார்கள்.

ஒரு திருமண நிகழ்ச்சி நடக்கிறது என்றால் அந்த வீட்டில் மாப்பிள்ளை செலவு பட்ஜெட்டில், மது விருந்து அளிப்பதற்கென்றே கணிசமான அளவு நிதி ஒதுக்க வேண்டியுள்ளது. அப்படி இருந்தால் மட்டுமே திருமண வீட்டில் இளைஞர்கள் கூட்டத்தைப் பார்க்க முடியும்.

முன்பெல்லாம் குடிப்பவனுக்கு பெண் கொடுக்கவே கூடாது என பெற்றோர்கள் நினைப்பார்கள். இப்போது குறைந்த பட்சம் பகலிலாவது குடிக்காமல் இருக்கிறானா என்று பார்ப்போம் என்கின்ற நிலைமை. எதிர்காலத்தில் மது அருந்தாத இளைஞர்களே இல்லை என்ற நிலை வரக்கூடிய சூழல் உருவாகி வருகிறது.

டாஸ்மாக் கடை 10 மணிக்குதான் திறக்க வேண்டும் என்றாலும், மதுக்கூட உரிமையாளர்கள் விரைவிலேயே திறந்துவிடுவதால், அதிக தொகை கொடுத்துகூட வாங்கிக் குடிப்பதற்கு இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை காலையிலேயே மதுக்கடையில் காத்துக் கிடக்கின்றனர்.

மது குடிப்பதால் சிந்தனைத் திறன், செயல் திறன் பாதிக்கப்படுகிறது. சோம்பலை ஏற்படுத்துகிறது. மனநிலம், உடல்நலத்தை பாதிப்பதோடு பொருளாதார நஷ்டத்தையும் ஏற்படுத்துகிறது. இதனால் எதிர்காலத்தில் நல்ல இளைஞர்கள் உருவாகாமல் நல்ல குடிகாரர்களாக உருவாகுகிறார்கள். இதனால் அவர்களை ஜாதி, மத மோதல் மற்றும் வன்முறை, குடும்பங்களில் மனைவியுடன் தகராறு, போதையில் வாகன விபத்துகள், கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களில் ஈடுபடச் செய்கிறது.

பொழுதுபோக்கிற்காக மது குடிக்க ஆரம்பிக்கும் இளைஞர்களில் பலர், கடைசியில் அதற்கே அடிமையாகி விடுகின்றனர்.போதை தலைக்கேறும்போது வெறித்தனமாகச் செயல்படுகிறார்கள். அப்போது எடுக்கும் ஒவ்வொரு முடிவும் தவறாகவே முடிகிறது.

இதற்கு தீர்வுதான் என்ன...? ஒரே வழி அரசின் கையில்தான் உள்ளது. தமிழகம் முழுவ தும் முழுமையான மதுவிலக்கு கொண்டுவர வேண்டும். இதனால் மட்டுமே வருங்கால இளைஞர் சமுதாயத்தை நல்ல சமுதாயமாக உருவாக்க முடியும்.சாராயம், லாட்டரிசீட்டு, கந்துவட்டி உள்ளிட்டவற்றுக்கு அரசு எடுத்த தடை நடவடிக்கையால் பலன் கிடைத்தது.

மதுவிலக்கால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்கிறார்கள். அரசு நினைத்தால் எவ்வளவு நிதியை வேண்டுமானாலும் எத்தனையோ வழிகளில் திரட்டி வருவாய் இழப்பை ஈடுகட்டலாம். ஆனால் இளைஞர்களின் வாழ்க்கை இழப்பை யாராலும் ஈடு கட்ட இயலாது.

இனி இல்லாமல் போகும் இன்னிசை?! - தினமணி

இசையோடு இயைந்த வாழ்வு தமிழர்களுடையது என்று கூறிப் பெருமைப்படுகிறோம். உலகமே நமது இசையைக் கேட்டு மயங்குகிறது என்பது நிஜம். ஆனால், நகரங்களில் மேல்தட்டு மக்களுக்கு மட்டும்தான் இசையைப் பற்றிய ஞானம் இருக்கிறதே தவிர, மாவட்டங்களில் அடுத்த தலைமுறையினர் இசையைப் பற்றிய ஞானம் என்பதே இல்லாமல் அல்லவா வளர்கிறார்கள்.

இதைப்பற்றி யாராவது கவலைப்பட்டிருக்கிறார்களா? முன்பெல்லாம் ஆரம்பப் பள்ளிகளில் பாட்டுக்கென்று வகுப்பு இருக்கும். பாட்டுப் படித்தால் வேலை கிடைக்குமா என்று இப்போது பல பள்ளிக்கூடங்களில் பாட்டு வகுப்பு என்பதே இல்லாத நிலைமை.

சங்கீதம் என்பது வேலைக்காக மட்டுமல்ல. மனசாந்திக்கும், ஒரு மனிதனின் ரசனை உணர்வைத் தூண்டுவதற்கும் இசை மிகப்பெரிய மருந்தாக இருக்கும் என்பது சான்றோரும் முன்னோர்களும் கண்டறிந்து சொன்ன விஷயம்.

பாட்டு என்று சொன்னால் அது சினிமாப் பாட்டு என்றாகி விட்டிருக்கிறது. சொல்லப்போனால், அத்தனை திரை இசையமைப்பாளர்களும் - எம்.எஸ். விஸ்வநாதன் ஆனாலும், இளையராஜா ஆனாலும், ஏ.ஆர். ரஹ்மான் ஆனாலும், ஹாரிஸ் ஜெயராஜாக இருந்தாலும் - ஒத்துக்கொள்ளும் விஷயம் தங்களது பாடல்கள் அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பது கர்நாடக சங்கீதம்தான் என்பது.

நல்ல குரல் வளம் இருந்தாலும், அது முறையான பயிற்சியின் மூலம்தான் வளம் பெறுகிறது. ஸ்ருதி, லயம் போன்றவை எந்த சங்கீதமாக இருந்தாலும் இன்றியமையாத விஷயங்கள். இது தெரிந்ததால் தான் நமது முன்னோர்கள் குழந்தைகளுக்கு இசைப்பயிற்சி அளித்தனர்.

இசை ரசனை என்பது பரபரப்பான நாகரிக வாழ்வில் மனதுக்கு இதமளிக்கும் இன்றியமையாத விஷயம் என்று மேலைநாடுகளில் கூட உணரத் தொடங்கி இருக்கிறார்கள்.

தமிழகத்தில் சென்னை, கோயம்பத்தூர், மதுரை மற்றும் திருவையாறு என்று நான்கு இடங்களில் இசைக் கல்லூரிகள் இருக்கின்றன.

இவை தவிர நாகசுரம், தவில், பரதம் மற்றும் வாய்ப்பாட்டுப் பயிற்சி அளிக்கும் பள்ளிக்கூடங்கள் 17 இருக்கின்றன. இந்த இசைக் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் போதிய மாணவர்கள் சேர்வதில்லை என்பது மட்டுமல்ல, முறையாகப் பயிற்சி அளிக்கப் போதுமான ஆசிரியர்களும் இருப்பதில்லை.

இசைக்கல்லூரிகளிலும், இசைப்பள்ளிகளிலும் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாததால் இசைத்துறையில் மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதில் அதிசயம் இல்லை. இதுபோன்ற துறைகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அரசு கொடுத்தால்தான், தமிழகத்துக்கே உரிய கலைகளைக் காப்பாற்ற முடியும். தமிழுக்குத் தரும் முக்கியத்து வம் இசைக்கும் தரப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.

நாகசுரம் மற்றும் தவில் பயிற்சிக்கு தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மிக அதிகமாக ஆர்வம் காட்டி வந்தனர். இதுபோன்று பள்ளிகளில் தேர்வு பெற்று, பல ஆலயங்களில் வித்வான்களாக அவர்கள் நியமிக்கப்பட்டனர். இப்போது அதற்கான வாய்ப்பும் குறைந்துவிட்டிருக்கிறது.

இன்றைய நிலையில், பள்ளிக்கூடங்களில் மீண்டும் இசை வகுப்புகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்று கல்வித்துறை முனைப்புக் காட்டினால் ஒழிய, இந்தப் பாரம்பரிய இசை என்பது பணக்கார வீட்டுக் குழந்தைகளுக்கு மட்டும் கிடைக்கும் வாய்ப்பாக இருக்குமே தவிர, அடித்தட்டிலிருந்து ஒரு எம்.எஸ். சுப்புலட்சுமியோ, எம்.எல்.வசந்தகுமாரியோ உருவாக வாய்ப்பே இல்லாத நிலைமை தொடரும்.

கலைத்துறையிலும், இசையிலும் நாட்டமும், அவைகளின் வளர்ச்சியில் ஆர்வமும் உள்ள முதல்வர், ஏன் இசைக் கல்லூரியின் வளர்ச்சியிலும், அடித்தட்டு மக்களுக்கு இசைப்பயிற்சி அளிப்பதிலும் ஆர்வம் காட்டாமல் இருக்கிறார் என்பதுதான் புதிராக இருக்கிறது!

குடிப்பது ”சுகமே”! - தினமணியிலிருந்து..


பயணங்களின் போதும், வெளியிடங்களில் தங்கும்போதும் மினரல் வாட்டர் அல்லது பேக்கேஜ்ட் வாட்டரைப் பயன்படுத்தும் கலாசாரம் சுகாதார விரும்பிகள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

மக்களின் உடல்நலனைக் குறிவைத்து இன்று ஏராளமான நிறுவனங்கள் மினரல் வாட்டர் தயாரிப்பில் இறங்கி லாபம் சம்பாதித்து வருகின்றன. இதில், முழுக்க முழுக்க மகளிரே தயாரிக்கும் "சுகம்' பேக்கேஜ்ட் டிரிங்கிங் வாட்டர், தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுமைக்குமே மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை ஊராட்சிக்குட்பட்ட ஊமப்பாளையத்தில் தயாராகிறது "சுகம்' பேக்கேஜ்ட் குடிநீர். மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த 48 மகளிர் (4 குழுக்களாக) இத் தொழிலில் முழு மூச்சுடன் ஈடுபட்டுள்ளனர்.

ஓடந்துறை ஊராட்சி மூலம் சுத்திகரிக்கப்பட்டு வரும் பவானி ஆற்று நீரிலிருந்து "சுகம்' தயாராகிறது!.

2006-ல் மகளிர் சுய உதவிக் குழுவால் துவக்கப் பட்ட "ஓடந்துறை பேக்கேஜ்ட் டிரிங்கிங் வாட்டர்' தொழிற்சாலைக்கு, ரூ.15 லட்சம் வங்கிக் கடன் கிடைத்திருப்பது ஆச்சரியமான விஷயம். எந்தவிதப் பின்புலமும் இல்லாத பெண்களின் உழைப்பின் மீது வங்கி வைத்த அசாத்திய நம்பிக்கையின் அடையாளம் இது. வங்கிக் கடனைத் தவறாமல் திருப்பிச் செலுத்தி, மாதத்துக்கு ஒவ்வொரு மகளிரும் தலா ரூ.2000 வீதம் சம்பாதித்து வருகின்றனர்.

குடிநீர் தயாரிப்பில் ஈடுபடும் பெண்கள், சுத்தம், சுகாதாரத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். கையுறை, வாயுறை அணிந்தே தொழிற் சாலைக்குள் நுழைகின்றனர்.

""எங்கள் தயாரிப்பை அதிகப்படுத்தி, மார்க்கெட்டிங்கிற்கென்று தனியாக ஒரு பிரிவைத் துவக்கத் திட்டமிட்டுள்ளோம். பெரிய கம்பெனிகளுக்கு நேரடியாக நாங்களே விற்பனை செய்யும் எண்ண முள்ளது. தினசரி 18,000 லிட்டர் வரை "சுகம்' குடிநீர் தயாரிக்கும் திறன் கொண்டது இத்தொழிற் சாலை. கடன்கள் முழுவதும் அடைந்தபிறகு, கூடுதல் தயாரிப்பில் கவனம் செலுத்துவோம்'' என்று வருங்காலத் திட்டங்களை விவரிக்கின்றனர் பிர மோதினியும், யசோதாவும்.

நாடு முழுவதிலுமிருந்து மட்டுமல்லாமல் வெளி நாடுகளிலிருந்தெல்லாம்கூட உயர் அதிகாரிகள் இங்கு வந்து இத்தொழிற்சாலையை பார்வையிட்டுச் செல்கின்றனர். இதுவே "சுகம்' குடிநீரின் 100 சத வெற்றிக்குக் கிடைத்திருக்கும் "ஐஎஸ்ஐ' அடையாளம்!.

யோகா இனி பள்ளிகள்தோறும் - தினமணியிலிருந்து


வரும் கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கட்டாய யோகாசனப் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது மட்டுமல்ல; வரவேற்கக்கூடியதுமாகும்.

"நோய் நாடி நோய் முதல் நாடி' என்பது போல, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் யோகாசனப் பயிற்சி, நாளைய உலகின் நம்பிக்கை நட்சத்திரங்களான இளம் மாணவர்களுக்கு அளிக்கப்படவேண்டியது அவசியம்.

"மனதுக்கும் உடலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு' என்பது யோக சாஸ்திரத்தின் சாராம்சம். ஆரோக்கியமான உடல் இருந்தால் மட்டுமே ஆக்கபூர்வமான சிந்தனை பிறக்கும். அப்படிப்பட்ட சிந்தனை மட்டுமே செயலாகப் பரிமளிக்கும். வருங்காலச் சந்ததிகளின் வளமான வாழ்வுக்கு நோயற்ற உடலே குறைவற்ற செல்வம்.

அதற்கு யோகப் பயிற்சி ஓர் அற்புத வழி.இந்தியா வரும் வெளிநாட்டவர்களில் பலர், நம் நாட்டின் பாரம்பரிய பரத நாட்டியத்தையும், யோகக் கலையையும் கற்கவே பெரிதும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

வெளிநாட்டில் அலுவலகப் பணியாளர்களுக்கு ஒரு குழுவாக யோகாசனப் பயிற்சியளிக்கப்படுகிறது. இது மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதாம். பணியாளர்களுக்கு யோகா கற்பிப்பதால், உற்பத்தித் திறன் அதிகரிப்பதுடன், டென்ஷன் குறைந்து மன அமைதி கிடைப்பதாகச் சொல்கிறார்கள்.

8 வயதிலிருந்து குழந்தைகளுக்கு யோகாசனப் பயிற்சி அளிக்கத் தொடங்கலாம். இதனால் குழந்தைகளிடையே ஒழுக்கம், கட்டுப்பாடு வளர்கிறது. படிப்பில் மனதை ஒருமுகப்படுத்த முடிகிறது. நினைவாற்றல் அதிகரிக்கிறது. பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகளுக்கு யோகாசனப் பயிற்சி அளிப்பது எளிது. இளம் உடலை வளைத்து ஆசனங்களை எளிதில் செய்யமுடியும்.

பெண்களுக்கு குறிப்பாக வளர் இளம் பெண்களுக்கு யோகாசனம் உற்ற தோழி. மாத விலக்கு சமயத்தில் தோன்றும் கோபம், எரிச்சல் போன்ற மன உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதில் யோகாசனத்துக்கு இணை வேறில்லை. மாதவிலங்கு ஒழுங்கின்மை, மெனோபாஸ் நேரத்தில் ஏற்படும் மனஅழுத்தம் போன்றவற்றுக்கும் யோகா அற்புதமான தீர்வு. பிரசவத்துக்குப் பிறகு தளர்ந்திருக்கும் தசைகளை இறுகச் செய்வதிலும் இதன் பங்கு மகத்தானது.

வயதானவர்கள்கூட யோகாசனத்தின் மூலம் சுறுசுறுப்பாக வாழ்க்கை நடத்த முடியும் என்பதை லண்டனில் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது. யோகாசனம் செய்து வரும் முதியவர்கள் சிலரிடம் நடத்தப் பட்ட ஆய்வில், தசைகளைத் தளரச் செய்வதிலும், தள்ளாடாமல் நடக்கச் செய்வதிலும் யோகா முக்கியப் பங்கு வகிப்பது நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

ஆஸ்துமா, இதய நோய், உடற்பருமன், நீரிழிவு போன்ற பல நோய்களைக் கட்டுப்படுத்துவதிலும், குறைப்பதிலும் யோகாசனமும், மூச்சுப் பயிற்சியும் பெருமளவு உதவுகிறது.அனுபவித்துப் பார்த்தவர்களுக்கு மட்டுமே அற்புதம் புரியும்.

யோக சூத்திரத்தின் தந்தையான பதஞ்சலி முனிவர் அறிமுகப்படுத்திய யோகாசனங்களின் வகைகள் ஏராளம். காலப்போக்கில் அவற்றில் பல மறைந்து சுமார் 1000 வகையான ஆசனங்கள் மட்டுமே இப்போது வழக்கத்தில் உள்ளன.

சாதாரணமாக 10 முதல் 20 ஆசனங்கள் வரை தெரிந்தாலே ஆரோக்கியமாகவும், சுறு சுறுப்பாகவும் வாழ முடியும். குழந்தைகளிடையே யோகாவைச் சொல்லிக் கொடுப்பதால், ஒரு தலைமுறைக்கே அவற்றை சொல்லிக் கொடுக்கும் நன்மை ஏற்படுகிறது.

யோகாசனத்தைப் பற்றிப் பேசுகையில் தியானத்தையும் குறிப்பிடுவது அவசியமாகிறது. யோகமும், தியானமும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் எனலாம். கொந்தளிக்கும் மனதை கட்டுக்குள் கொண்டு வர தியானம், பொருட் செலவற்ற மருந்து. பரபரப்பு, மன அழுத்தம் நிறைந்த இன்றைய சூழ்நி லையில் தியானமும், யோகமும், மனித மனதுக்கு நிச்சயம் அமைதி தரும். உறவுகள் மேம்படவும் உதவிடும்.

சிந்தனையை சிதைக்கும் சிறுவர் டிவிக்கள் - தினமணியிலிருந்து



3 வயது குழந்தை முதல், பள்ளி மாணவ, மாணவிகள் வரை குழந்தைகளுக்கான சேனல்களின் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்க்கின்றனர்.விரும்பி பார்க்கின்றனர் என்பதைவிட அதில் மூழ்கிவிடுகின்றனர் என்றே சொல்ல வேண்டும்.இத்தகைய சேனல்களை மட்டுமே குழந் தைகள் விரும்பிப் பார்ப்பதால், அவர்களுக்கு வேறு எதன் மீதும் கவனம் செலுத்த இயலாத அளவுக்கு மூளையின் செயல்திறன் குறைகிறது.

படிக்கும் காலங்களில் படிப்பதற்கு அளிக்கும் முக்கியத்துவத்தைக் காட்டிலும் டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் அதிக கவனம் செலுத்துவதால், கல்வியின் மீதான ஆர்வம் குறைந்து தேர்வில் குறைந்த மதிப்பெண்களே பெறும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.மேலும் டிவி பார்ப்பதால் கண்பார்வை பாதிக்கப்பட்டு சிறு வயதிலேயே கண்ணாடி அணிய வேண்டிய சூழலும் உருவாகி விடுகிறது.

இத்தகைய குழந்தைகள் சேனல்களை பார்க்கும்போது, பெற்றோர்கள் அதை பார்க்காதே என அறிவுரை கூறினாலோ, அல்லது சேனல்களை மாற்றி னாலோ அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. அதிலும் ஒரே வீட்டில் 2, 3 குழந்தைகள் இருந்தால் குழந்தைகள் சேனல்களிலே எந்த சேனல்களை வைப்பது என்ற சண்டை வேறு.

இத்தகைய சேனல்களை தொடர்ந்து பார்ப்பதால் குழந்தைகள் வீட்டைவிட்டு வெளியே செல்வதில்லை. இதனால், அவர்களுக்கு நட்பு வட்டாரம் குறைகிறது. உறவினர்கள் வீட்டுக்குச் சென்று வரலாம் என பெற்றோர் அழைத்தால்கூட அவர்கள் வர மறுப்புத் தெரிவிக்கின்றனர். அப்படியே வந்தாலும் கூட அங்கு யாரிடமும் நன்கு பழகுவதில்லை.அங்கேயும் டிவி பார்ப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர்.

உணவுவேளைகளில் சரியான நேரத்துக்கு சாப்பிடச் சொன்னால்கூட ஒழுங்காகச் சாப்பிடுவதில்லை. அப்படியே சாப்பிட்டாலும் அரைகுறை சாப்பாடுதான். இதனால், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவர்க ளுக்கு ஒரு விதத் தளர்வும், மன உளைச்சலும் ஏற்படுகின்றன.

சீரியலில் மூழ்கிக் கிடக்கும் பெண்களைப் போல இப்போது குழந்தைகள் சேனல்களால் வீடுகளில் பிரச்னைதான்.

இது தொடர்ந்தால் குழந்தைகளை இந்த மாதிரியான சேனல்கள் கற்பனை உலகத்திலே சுற்ற வைத்து விடும். பெற்றோர்களிடம் பாச உணர்வுடன் இருக்கவோ, சரியாக படிக்கவோ, விளையாட்டுத்திறனை அதிகரிக்கவோ அது தடையாக இருக்கும் . அவர்களின் மூளை செயல்திறனை மழுங்கடிக்கும்.
இத்தகைய சேனல்கள் குழந்தைகளுக்கு ஒரு போதைப் பொருள்போல ஆகிவிடும்.இதனால் வருங்கால சமுதாயமே பாதிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதில் மத்திய, மாநில அரசுகள் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். பொதுமக்கள் நலன் கருதி எப்படி ஆபாச சேனல்களுக்கு அரசு தடை விதிக்கிறதோ, அதேபோல இத்தகைய குழந்தைகள் சேனல்களுக்கும் உடனடியாகத் தடைவிதிக்க வேண்டும்.அவ்வாறு செயல்பட்டால் அன்றி, வருங்கால இந்தியா, வல்லரசு இந்தியா என்பதெல்லாம் பெயரளவில் சொல்லிக் கொள்ளலாமே தவிர, நடைமுறைக்கு சாத்தியமில்லை.

இன்றைய குழந்தைகள்தானே நாளைய இளைஞர்கள். அவர்கள் ஒரு நல்ல குழந்தையாக இருந்தால் மட்டுமே நல்ல இளைஞராக உருவாக முடியும். அப் போதுதான் ஒரு நல்ல இந்தியனாக வந்து இந்தியாவை வல்லரசாக உருவாக்க முடியும்.எனவே, அரசு இதைக் கருத்தில் கொண்டு, கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. இனி குழந்தைகளுக்கு நேரம் அதிகமாகக் கிடைக்கும் என்பதால், அந்தச் சேனல்களில் மூழ்கிவிடாமல் இருக்கவும், உடனடியாக கவனித்து குழந்தைகள் சேனல்களை தடை செய்ய வேண்டும். அது விடுமுறை காலம் மட்டுமன்றி அனைத்து காலங்களிலும் இத்தகைய சேனல்கள் தேவை இல்லை என்பதில் உறுதியுடன் செயல்பட வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

நன்றி - தினமணி

புத்தூர் ஜெயராமன் கடை :-)


காத்திருத்தல் ரொம்பவும் கொடுமை. ஆனால், வாழ்வில் சுவையான அனுபவங்களைப் பெரும்பாலும் காத்திருந்தே பெற வேண்டியிருக்கிறது. இதுவரை என்னென்ன காரணங்களுக்காகவோ காத்திருக்க நேர்ந்திருக்கிறது. என்றாலும், புத்தூர் அனுபவம் உள்ளபடியே வித்தியாசமானது - ரசமானது!

சிதம்பரம் - சீர்காழி இடையேயுள்ள சின்ன கிராமம் புத்தூர். கொள்ளிடத்திலிருந்து கூப்பிடுதூரத்தில் இருக்கிறது. இந்த ஊரிலுள்ள ஒரு "கூரைக்கட்டு சாப்பாட்டுக் கடை'யில் அசைவச் சாப்பாடு ரொம்பவும் பிரசித்தம் என்றும் ஆனால், மதுரை வீரனே வந்தாலும் காத்திருந்தால்தான் அங்கு சாப் பிட இடம் கிடைக்கும் என்றும் ஒரு நண்பர் சொன்னார்.

பசிக்க ஆரம்பிக்காத ஒரு நண்பகல் வேளையில் புத்தூரை நோக்கிப் பயணமானோம். புத்தூர் கடைவீதியில் இறங்கி வழி கேட்ட நமக்கு, உள்ளூர்க்காரர் சுட்டிக்காட்டிய இடம் சற்றே பெரிய கீற்றுக்கொட்டகை.

பெயர்ப் பலகைகூட இல்லை. கடைக்கு வெளியில் போடப்பட்டிருந்த பந்தலில் வழியை மறித்து நிற்கிறது கூட்டம்.

""ஐயா, வரிசையில் மொதல்ல நிக்கிற நாலு பேரு உள்ள வாங்க.'' நமக்கு முன்னுள்ள வரிசை மெல்ல கரைய, பின்னுள்ள வரிசை நீண்டு கொண்டேயிருக்கிறது. இதற்குள் கடைக்காரருக்கு நாம் தகவல் தெரிவிக்க, அவர் நம்மை உள்ளே அழைத்துச் செல்கிறார்.கூட்டம் கொலைவெறியுடன் நம்மைப் பார்க்கிறது.

உள்ளே ரொம்பவும் சாதாரணமான மர பெஞ்சுகள், முக்காலிகளில் அமர்ந்து வியர்க்கவிறுவிறுக்கக் கருமமே கண்ணாக கனஜோராய் மீன் வறுவல், இறால் வறுவல் சகிதமாய் சாப்பாட்டை உள்ளே தள்ளிக்கொண்டிருக்கிறது கூட்டம். ஏற்கெனவே கடைக்காரர்களால் உள்ளே அழைக்கப்பட்ட அந்த நால்வரைக் கவனிக்கிறோம். தயிர்போட்டு சாப்பிடுபவர்கள் முன் இடத்தைக் கைப்பற்ற தயாராக நின்றுகொண்டிருந்தார்கள்.

நாம் கடைக்குப் பின்புறம் செல்கிறோம். கல்யாணவீட்டின் கொல்லைப்புறத்தில் போடப்பட்டிருக்கும் சமையல் கொட்டகைபோல் இருக்கிறது அந்தக் கடையின் சமையலறை. இறால், கோழி, வஞ்சிரம் மீன் துண்டுகளை வண்டியிலிருந்து இறக்கி கழுவிக்கொண்டிருக்கிறார்கள் சிலர். இன்னும் சிலர் மசாலா போட்டு அவற்றைப் புரட்டி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். குழம்பு, வறுவல், பிரட்டல் என அதுஅது போய்சேர வேண்டிய இடத்துக்குக் கொண்டுபோய் சேர்த்துக் கொண்டிருக்கின்றனர் வேறு சிலர்.

""இறாலுக்கு மெனக்கெடு அதிகம் சார். இறால் உரிக்கிறதுக்காகவே 10 பேர் இருக்கோம்'' என்கிறார் அவர்களில் ஒருவர்.சுடச்சுட தயாராகிக் கொண்டிருக்கும் மீன் குழம்பு வாசனை நம் நாசியைத் துளைக்கும் அந்த நேரத்தில் - இறால் வறுவல் "வா மகனே வா' என்று அழைக்கும் அந்த நேரத்தில் - பசி நம் வயிற்றில் பூதாகரமாய் கிளம்புகிறது. கடைக்காரர் சலுகையில் நமக்கும் ஓர் இடம் கிடைக்கி றது. அமர்கிறோம்.எளிமையான உணவுப் பட்டியல்.



சோறு, கறிக்குழம்பு, கோழிக்குழம்பு, மீன்குழம்பு, இறால்குழம்பு, ரசம், கீரை, வெங்காயப்பச்சடி. அவ்வளவே. வறுவல் பிரட்டல் எல்லாம் தனியாக வாங்கிக் கொள்ள வேண்டும்; மிக முக்கிய மாக கெட்டித் தயிரை. கேட்கக்கேட்கப் போடுகிறார்கள். புளிப்பு ஏறாமல் புளித்த தயிர் எப்படி இருக்கும்? அப்படி இருக்கிறது! வரிசையாய் குழம்பு, ரசம் ஊற்றி சாப் பிட்ட பின்னர், பொன்னி அரிசி சாதத்தில் கெட்டித் தயிரை நிறைய ஊற்றி வழியவழிய பிசைந்து இறால் வருவலையோ மீன் வருவலையோ தொட்டுக் கொண்டு சாப்பிடும் ருசி இருக்கிறதே..!

எத்தனையோ தொலைவிலிருந்து இந்த சின்ன கிராமத்துக் கடையைத் தேடி நாள் தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் ரகசியம் புரிகிறது.அருகில் அமர்ந்திருந்த கடை உரிமையாளர் பி. ஜெயராமனிடம் பேசினோம்.""அசைவச் சாப்பாடு சிறக்க இரண்டு விஷயங்கள் முக்கியம். மீனோ, கறியோ எதுவென்றாலும் உயிர்விட்டு நீண்ட நேரம் ஆகக்கூடாது. அதாவது கட்டு குலையக்கூடாது. சுத்தத்தில் பிசிறு கவுச்சி தங்கக்கூடாது. இதைக் கடைப்பிடித்தாலே பாதி ருசி வந்துவிடும். எங்கள் கடையில் வீட்டுப் பக்குவத்தில் மசாலா அரைத்துப்போட்டு விறகு அடுப்பில் சமைக்கிறோம்.தயிருக்கு ஒரு பங்கு பாலை அரைப் பங்கு பாலாக சுண்டக்காய்ச்சி உறை ஊற்றுகிறோம். வேறு எந்த ரகசியமுமில்லை'' என்றார்.வயிற்றைத் தள்ளிக்கொண்டு நாம் எழுந்த அடுத்த நொடி அந்த இடத்தில் துண்டு ஒன்று பறந்துவந்து விழுகிறது.திடுக்கிட்டு பார்க்கும் நம்மைப் பார்த்து துண்டை வீசியவர் சொல்கிறார்.

""என்ன மொறைக்குற, பசி வயித்தைக் கிள்ளுதுல்ல; நகருய்யா!''

நன்றி தினமணி

சித்திரை போன்று தைத்திருநாளும் மாற்றம் பெறுமா? - தினமணியிலிருந்து


தமிழ்ப் புத்தாண்டு என்பதும், தமிழர் புத்தாண்டு என்பதும் இன்று வெவ்வேறு மாதிரி என்று ஆகிவிட்டது. இந்தப் பிரச்னையை அரசியல் ரீதியாகவும், மத ரீதியாகவும்தான் அனைவரும் அணுகுகிறார்களே தவிர விஞ்ஞான ரீதியாக அணுகத் தயங்குகிறார்கள்.

பகுத்தறிவு பேசுபவர்களும், விஞ்ஞானம் பற்றிப் பேசுபவர்களும் இந்த விஷயத்தில் அரசியல்தான் பேசுகிறார்கள் என்பதுதான் வேடிக்கை.

இந்த மாதம் ஏப்ரல் 5 அன்று சந்திரன் சூரியனுக்கு அண்மையில் வசித்தது. "அண்மை வாசி' தானே அமாவாசை? ஏப்ரல் 20 அன்று சந்திரன், சித்திரை நட்சத்திரத்தில் நிலைப்ப தாகத் தோன்றும். கன்னி உடுக்கணத் தில் "ஆல்ஃபா வெர்ஜினிஸ்' என்னும் விண் மீனே நாம் கூறும் சித்திரை. இதற்கு வானவிய லில் "ஸ்பைக்கா' என்றும் பெயர்.

அதுவே பண்டைய சித்திரை மாதத் தொடக்கம். சந்திரன் சஞ்சரிக்கும் உடுக்கணத்தின் பெயராலேயே அந்தந்த மாதத்தை நாம் "திங்கள்' என்று குறிப்பிடுகிறோம்.அவ்வாறே, அடுத்த பௌர்ணமி அன்று (2008 மே 19) விசாக நட்சத்திரத்தில் தோன்றும். அந்த "விசாக' மாதம் வைகாசி என்கிறோம். இது எல்லாம் நம் நாட்காட்டிகள் தரும் தகவல்கள் தாம். ஆனால் விஷயம் அது அல்ல.

பண்டைத் தமிழர் வானவியல் ஆதாரப்படி, தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் சித்திரை தான். தமிழ்ச் சங்க இலக்கியங்களில் நெடுநல்வாடை எனும் சங்கப் பாடல் காட்டும் ஓர் உண்மை இங்கு முக்கியம் ஆனது.

""ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரு வீங்கு செலன் மண்டிலம்'' (160 - 161) என்கிற வரிகளில் பண்டைய தமிழர் வானவியல் திறன் விரிகிறது. கோப்பெருந்தேவியின் கட்டி லுக்கு நேர் மேலாக "ஆடு தலை'யாகப் பன்னி ரெண்டு உடுக்கணங்கள் தோற்றமும் விதான ஓவியமாகச் சித்திரிக்கப் பெற்றுள்ளது.

அதில் மேஷம் ஆகிய ஆடு உருவம் கொண்ட தலையாய உடுக்கணம் முதலில் சுட்டப் பெறுகிறது.

ஆனால் சித்திரை முதல் தேதி என்பது ஏப்ரல் 13 ஞாயிறு, அரசு விடுமுறை - தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பு என்று நாட்காட்டிகள் அசடு வழிந்தன.

உள்ளபடியே ஆண்டுத் தொடக்கம் மட்டுமல்ல, நாட்காட்டிகளும், நாள் கணக்குகளுமே காலந்தரமாகத் திருத்தப்படவேண்டியது அவசியம்.

இப்படி ஆண்டு, மாதம், நாள் கணக்குகளை மாற்றுவது சரியா? என்றால் வரலாற்றில் இத்தகைய செய்திகள் நடந்தேறி இருக்கின்றன.

பூமி சூரியனைச் சுற்றி வர ஆகும் 365.242 சூரிய நாள்களைப் பண்டைய உரோமானியர் பத்து சம பாகங்கள் ஆக்கி மாதங்களாக வகுத்தனர். அந்தப் பத்து மாதங் களுக்கு முறையே மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்டு என மன்னர்கள், தெய்வங்கள் பெயர்களைச் சூட்டினர். பின்னர் ஏழாவது ("சப்த' - செப்டம்பர்), எட்டாவது ("அஷ்ட' - அக்டோபர்), ஒன்பதாவது ("நவ' - நவம்பர்), பத்தாவது ("தச' - டிசம்பர்) என்ற அடிப்ப டையில் கிரேக்கப் பெயர்களால் குறிப்பிட்டனர். இங்கு வடமொழிச் சொற்களும் கிரேக்கப் பெயர்களும் ஒலி அமைப்பில் ஒத்துப் போகின்றன என்பது ஆய்வுக்கு உரியது.

எப்படியோ, பிற்காலத்தில் ஆண்டு பன்னிரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டது.

இறுதி இரண்டு மாதங்களுக்குப் புதிதாக ஜனவரி, பெப்ரவரி என்ற தெய்வப் பெயர்கள் சூட்டப்பெற்றன.எனினும், பிற்காலத்தில் எட்டாம் போப் கிரகோரி என்பவர் "கூதிர் சந்தி' அடிப்படை யில் கிரகோரியன் நாட்காட்டி ஒன்றை வரையறுத்தார். வானத்தில் தென்கோடியில் சூரியன் விலகிய பின் மீண் டும் வடக்கு முகமாக ஏறத் தொடங்கும் நாள் "கூதிர் சந்தி' இது டிசம்பர் 21 அன்று நிகழும்.

இன்றைக்குத் திருவள்ளுவர் ஆண்டு மாதிரியே அன்றைக்குக் கிறிஸ்து பிறந்த நாளையொட்டி ஜனவரி முதல் நாள் அந்த நாட்காட்டியின் முதல் நாள் ஆயிற்று. டிசம்பர் 25 அன்று கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவது பிந்தைய வரலாறு. அந்த நாட்காட்டியில் ஜனவரி தொடங்கிப் பத்தாவதான டிசம்பர் பன்னிரண்டாம் மாதமும் ஆயிற்று.

விஷயத்துக்கு வருவோம். பூமி சூரியனைச் சுற்றி வருவதால் இங்கிருந்து கவனிப்போருக்குச் சூரியன் வானில் வெவ்வேறு விண்மீன் கூட்டங்களின் ஊடாகப் பயணம் செல்வது போல் தோன்றும். இதுவே சூரியவீதி. அதனைப் பன்னிரண்டு சம பிரிவுகளாகப் பகுத்து அவற்றிற்கு ""ராசி வளையம்'' என்று பெயரிட்டு வழங்குகிறோம். ஆயின், சூரியனின் இந்த சஞ்சாரத்தை இரவில் விண்மீன்களிடை காண்பது இயலாது அல்லவா? ஆதலால் சூரியனுக்குப் பதிலாக நமது திங்களாகிய சந்திரன் பௌர்ணமியாக இயங்குவதைக் கவனித்தனர் நம் முன்னோர்.

சூரியன் வடக்கு நோக்கிய உத்தராயணப் பயணத் தொடக்க நாளில் பூமியில் இரவுப் பொழுதும், பகற் பொழுதும் சமமாக 12 மணி நேர அளவாக அமையும். இதுவே வசந்த சமநோக்கு நாள். சங்க காலத்தில் அந்த வசந்த சமநோக்கு நாளில் சூரியன் மேஷ ராசி யில் இயங்கியது. சித்திரைத் திருவிழா இதுவே.

ஆனால் இந்த வசந்த சமநோக்கு நாளில் வானவியல் சம்பவங்கள் இன்றைக்கு 2008 மார்ச் 21 அன்றே நிகழ்ந்துவிட்டன. சங்க காலத் தமிழர் கணக்குப்படி பங்குனி மாதமே தமிழ்ப் புத்தாண்டு பிறந்துவிட்டது.

இங்கு தான் உதைக்கிறது.

அதற்குத் தீர்வாக, வானவியல் கருத்துகள் சிலவற்றை ஆராய்வோம். பூமியும் சூரியனும் தொடர்ந்து இடம் பெயர்ந்த வண்ணம் இருக் கின்றன. இன்று நமக்கு நிலையானதாகத் தோன்றும் "போலாரிஸ்' துருவ நட்சத்திரமே நிலையானது அல்ல. கி.மு. 4000 - 3000 வாக்கில் காளைமுகத் தோற்றங் கொண்ட "ரிஷப' (இடப) ராசியில் வசந்த சம நோக்கு நாள் அமைந்தது. அன்றைக்கு தூபான் எனும் விண்மீனே நம் துருவ நட்சத்திரமாக இருந்தது.

இதில் இன்னொரு வேடிக்கை. கி.பி. 14000 ஆண்டில், அதாவது இன்றிலிருந்து சுமார் 12000 ஆண்டுகளுக்குப் பிறகு ""அபிஜத்'' எனும் விண்மீனே நமது புதிய துருவ நட்சத்திரமாக நிலைபெறுமாம்.

பூமியின் சுழற்சி அச்சு தலையாட்டம் போடுவதனால் அதன் துருவ நட்சத்திரமும் இவ்விதம் இடம் மாறி வருகிறது. சராசரியாக ஒவ்வொரு 2000 ஆண்டுகளுக்கும் ஒருமுறை வீதம் மெல்ல வசந்த சமநோக்கு நாள் ஒவ் வொரு ராசியாக முன்னேறி வருகிறது. 4000 ஆண்டுகளுக்கு முன்னால் இடபம், 2000 ஆண்டுகளுக்கு முன்பு மேஷம், இன்று மீனம்.

அவ்வாறே, அன்றைய குளிர்காலச் சம்பிரதாயங்களான தைந்நீராடல், தைப்பொங்கல் முதலிய நிகழ்ச்சிகள் இன்று மார்கழிக் குளிர் காலப் பூசைகள், பண்டிகைகள் ஆகிவிட்டன. பண்டைய கார்த்திகை ஒளிவிழாக்கள் தீபாவளி என்ற பெயரில் ஐப்பசியிலுமாக முன்னேறி வருகின்றன. அதாவது இன்று வசந்த சமநோக்கு நாளில் சூரியன் மேஷ ராசியில் இல்லை. மீனத்தில் இருக்கிறது. உள்ளபடியே, சூரியனின் உத்தராயண சஞ்சாரம் தொடங்கி ஒரு மாதம் ஆயிற்று.

அவ்வாறே, ஆறு மாதங்கள் வடக்கே சஞ்சரித்த சூரியன் செப்டம்பர் 21 அன்று தெற்குப் பயணம் தொடங்கும். அதுவே இலையுதிர் சமநோக்கு நாள்.

மூன்று மாதங்கள் கழித்துச் சூரியன் தெற்கே 23.5 பாகை தாழ்ச்சியினைத் தொடும். தென்கோடியில் சூரியன் இறங்கிய பின் மீண்டும் வடக்கு முகமாக ஏறத் தொடங்கும் நாள் "கூதிர் சந்தி'. டிசம்பர் 21 அன்று நிகழும் பண்டைய நாளில் இது மகர ராசியில் நிகழ்ந் தது. அதனைக் "காப்ரிகார்னஸ்' என்பர்.

ஆழ்கடல் நன்னீரோட்டத்தின் கடவுளாகக் கருதப்படும் பாபிலோனிய ""இயா'' எனும் தெய்வக் குறியீடு மகரம் எனும் நீர்ப்பி ராணி.

செம்மறியாட்டின் உடலும், மீனின் வாலும் கொண்ட அபூர்வத் தோற்றத்துடன் அது சித்திரிக்கப்பட்டது. அதன் பெயராலேயே 23.5 பாகை தெற்கு அட்ச ரேகைக்கு மகர ரேகை என்று பெயர். இன்று இது "தனுசு ரேகை' என்று பெயர் மாற்றப்பட வேண்டும்.

திருவள்ளுவர் காலத்தில் வசந்த சமநோக்கு நாள் மேஷத்தில் நிகழ்ந்தது. இலையுதிர் சம நோக்கு நாள் துலாம் உடுக்கணத்தில் ஐப்பசித் திங்களில் நிகழ்ந்தது. கூதிர் சந்தி மகர ராசி யில் நிகழ்ந்தது. அதுவே தை மாதம். ஆனால் இன்றோ, திருவள்ளுவ ஆண்டின் அந்தக் குளிர்காலச் சந்தியானது முன் கூட்டியே மார்கழியில் (டிசம்பர் 21 வாக்கில்) நிகழ்ந்து விடுகிறது. அப்போது சூரியன் தனுசு ராசியில் நிலைபெறுகிறது.

ஆதலால் இனி, மகர சங்கராந்திக்குப் பதில் "தனுசு சங்கராந்தி'யில் மார்கழி மாதமே உழ வர்திருநாளாகிய "தைப்பொங்கல்' கொண்டாடி விடுவது தான் நியாயம். அதாவது டிசம்பர் மத்தியில் "புதிய' தை மாதமும் வர வேண்டும். தமிழர் போற்றும் திருவள்ளுவர் ஆண்டு அதாவது டிசம்பர் 21 அன்று தான் கொண்டாடப்பட வேண்டும்.

பகுத்தறிவு, விஞ்ஞானம் என்று பேசுபவர்கள் மாற்றங்களை ஏற்படுத்த விரும்பினால் முறையாக வானசாஸ்திர ரீதியாக மாற்றங் களை ஏற்படுத்தி இருக்க வேண்டும். இப் போது நிகழ்த்த முயற்சித்திருக்கும் மாற்றங்கள் அரசியல்தானே தவிர விஞ்ஞானபூர்வமானதல்ல!



நன்றி :- கட்டுரை தினமணியிலிருந்து எடுத்தாளப்பட்டது!

கட்டுரையாசிரியர் நெல்லை சு.முத்து அறிவியல் எழுத்தாளர்.ஸ்ரீஹரிக்கோட்ட விஞ்ஞானி.

கடந்த பத்து ஆண்டுகளில் தினமணியில் அவ்வப்போது வெளியாகும் இவரின் கட்டுரைகளுக்கு நானும் ஒரு தீவிர வாசகன் :-)

அறியாமை இருள் அகலட்டும் - ஏப்ரல் 1- ல்

காலம் காலமாக "முட்டாள்கள் தினமாக' கடைப்பிடிக்கப்படும் ஏப்ரல் 1- ம் தேதியை, மருத்துவ அறியாமை இருள் போக்கும் தினமாகக் கொள்ளுங்கள்.

1. தினமும் குளிப்பது, நகங்களை அவ்வப்போது வெட்டி விடுவது உள் ளிட்ட அடிப்படைச் சுகாதார விஷயங்களில் கவனமாக இருங்கள்.

2. காய்ச்சிய தண்ணீரையே எப்போதும் குடியுங்கள். ஈ, கொசு மொய்க்கும் சாலையோர உணவுப் பண்டங்களை வாங்கிச் சாப்பிடாதீர்கள்.

3. வெயிலில் செல்லும்போது குளு குளு கண்ணாடி அணியத் தவறாதீர் கள். கண் புரை ஏற்படாது.

4. பசி இல்லாமல் நண்பர்கள் வற்புறுத்தினாலும் எதுவும் சாப்பிடாதீர்கள்.

5. மருத்துவச் செலவு காரணமாக நீங்கள் கடனாளியாக மாறாமல் இருக்க குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சேர்த்து மருத்துவ இன்சூரன்ஸ் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

நன்றி - தினமணி