பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மியக்கா !


இன்று பிறந்த நாள் கொண்டாடும் அன்புச்சகோதரி ராமலக்ஷ்மி அக்காவுக்கு எங்களது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். அனைத்து வளங்களையும் பெற்று, நல்ல உடல்நலத்தோடும், மன மகிழ்வோடும் வாழ வாழ்த்துக்களோடு அவர்களின் பதிவிலிருந்து சில வரிகளை பகிர்ந்துக்கொள்கிறேன்!

எல்லார்க்கும் இனியவராய்... - இருக்க வாழ்க்கை பயணத்தினை, இயல்பாக இனிமையாக பயணிக்க...!

# தன்’, உணர்ச்சி வசப்பட்டு ‘தான்’ ஆகுகையில், தேவையற்ற விஷயங்களில் காட்டப் படுகையில், விளைவுகள்... வீழ்ச்சிக்கோ விரும்பத் தகாத மன வருத்தங்களுக்கோ அல்லவா நம்மை இட்டுச் செல்கிறது?

# எப்போது விசுவரூபம் எடுக்கும் இந்த எண்ணம் எனக் கேட்டால்.. அந்நியரோ அந்யோன்யமானவரோ, அடுத்தவர் அவ்வப்போது நம் தவறைச் சுட்டிக் காட்டும் போதும், அதனால் நம் 'சுயம்' பாதித்து விட்டதாய் பதறி மனம் சுருங்கும் போதும்...

# பாராட்டுக்களைப் பரவசமாகப் பத்திரப் படுத்தும் இதயம், விரும்பி வரவேற்று விமர்சனங்களுக்கும் மனக் கதவுகளை விரியத் திறந்து வைப்பதே விவேகம்! விமர்சித்தவர் பெரியவரானால், மதித்துக் கேட்கலாம். அனுபவம் எனும் அட்சய பாத்திரத்திலிருந்து அள்ளி வழங்கப் பட்ட அமுதம் எனக் கொள்ளலாம். வயதில் சிறியவரானால், சீறாமல் சிந்திக்கலாம். 'மூர்த்தி' சிறிதானாலும் 'கீர்த்தி' பெரிதாக இருக்கலாம்தானே!

# வார்த்தைகள் வருத்தம் தந்தாலும், 'நாம் இப்படி இப்படி இருத்திருக்கலாம் நடந்திருக்கலாம், இப்படி இப்படி இனி இருக்கலாம் நடக்கலாம்' என ஒரே ஒரு கணமேனும் அவை நம்மை நினைக்க வைத்தால், அவற்றை உரைத்தவர் நமக்கோர் 'உரை கல்'.

# தவறுகளைத் தட்டிக் கேட்க, சுட்டிக் காட்ட கடவுள் காட்சியொன்றும் தருவதில்லைதான். ஆனால் உணர்ந்து கொள்ள, திருத்திக் கொள்ள சந்தர்ப்பங்களைத் தராமல் இருப்பதில்லை. 'என்னைச் சொல்ல எவருக்கு என்ன தகுதி' என நினைப்பது நியாயமில்லை. ஏன் என வினவினால், நமது தகுதி எது என்பதே பல சம்யங்களில் நமக்கு தெளிவாகத் தெரிவதில்லை!

# அறிந்த தெரிந்த மற்றவர் மனதில் எங்கு எப்படி நிற்கிறோம் என்பதே 'தகுதி'. நாம் அங்கு நிற்கவே இல்லை என்றால்...?

# சரியான எண்ணங்கள், சரியான பார்வைகள் சரிகின்ற வாழ்க்கையைத் தூக்கி நிறுத்தும். மாறுகின்ற காலத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளும் கண்ணோட்டங்கள் விலகுகின்ற உறவுகளையும், நழுவுகின்ற நட்புகளையும் தடுத்து நிறுத்தும்.

*****************************

முகமே உன் கண்கள் அழகே
விழியே உன் பார்வை அழகே
இதழே உன் பேச்சு அழகே
மொழியே உன் வார்த்தை அழகே

மனமே உன் எண்ணம் அழகே
நினைவே உன் நேர்மை அழகே
உயிரே உன் மூச்சும் அழகே
மனிதா உன் தேகம் அழகே


வாழ்க்கை இன்பமே வாழ்வோம் என்றுமே
இது உண்மையே!

ஒவ்வொரு வரிகளிலும் நம்மை நாமே பாராட்டிக்கொள்ளும்படி அமைக்கப்பட்ட பாடல் இயக்குநர் அகத்தியனில் எழுத்தில் கோகுலத்தில் சீதையில் பாடலாக வெளிப்பட்டது! எத்தனை அற்புதமான எண்ண ஓட்டங்கள் ! கேட்டு ரசித்துபாருங்களேன் நம் தேன்கிண்ணத்தில் இன்றைய ஸ்பெஷல் !
நன்றி:- தேன்கிண்ணம் & முத்தக்கா!

வரிகளில் வலிகள் - 2



எல்லா வீடுகளிலும் வெளிப்படுத்தவே முடியாத அன்போடு யாராவது ஒருவர் இருக்கிறார்கள். நம் நிழல் நம் கூடவே வந்தாலும்,அது எதையும் பேசுவது இல்லை. அது போல இவர்களின் அன்பும்....!

- எஸ்.ராமகிருஷ்ணன்

Fair & லவ்லி


கருப்பா இருக்கேன்னு என்னிக்கும்மே கவலைப்படாதடா நீ மனசு வைச்சா இன்னிக்கே சிவப்பாகிடமுடியும் ஸோ டோண்ட் ஒர்ரி (கவலைப்படாதேவும் டோன் ஒர்ரியும் வந்தாலே அவன் எல்.கே.ஜியில ஆரம்பிச்சிருக்கான் படிப்பைன்னு அர்த்தம் வைச்சுக்கிடணும் - நாங்க ஸ்கூல்ல அப்புடித்தான் வைச்சுப்போம்!)

கான்வர்சேஷனை வைச்சே தீர்மானிச்சுடலாம் செவப்பாகுறதுக்கு எம்புட்டு கஷ்டப்பட்டேன்னு - அட்வைஸெல்லாம் கேட்டு (அதுவும் இங்கீலிசுல எல்லாம் பேசுவாங்க எப்புடி இருக்கும் தெரியுமா? - சொன்னா மன்ச்சு வலிக்கும்!)

அப்பவெல்லாம் நொம்ப்ப பேமஸான விளம்பரமா இருந்த ஃபேர்&லவ்லி பார்த்துட்டுத்தான் பயபுள்ளை அப்படி அட்வைஸு கொடுத்திருக்குன்னு தெரியாமப்போச்சு - அது பொம்பளை புள்ளைங்க முகத்துல போட்டுக்கிடற கீரிம்ன்னு விளம்பரம் வர்றப்பவெல்லாம் ரெண்டு கையையும் எடுத்து முகத்துல பொத்திக்கிட்ட எனக்கு எப்படி தெரியும்!

சரி ஆசை யாரை விடும் ஏழு நாளுதானே வாங்கி டிரைப்பண்ணி பார்க்கலாமேன்னு ஒரு அசட்டு தைரியத்தில வாங்கி வந்தாச்சு பேர் & லவ்லியை! மூஞ்சியில பூசுறதுக்கு முன்னாடி அட்டைபடத்து நிறம் மாறிய ஃபிகரினை பார்த்துக்கொண்டே நமக்கும் இப்புடி ஆயிடும்லன்னு நம்பிக்கையோட ஆரம்பிச்சாச்சு!

பவுடர் போடாம வெளியில போனதா சரித்திரமே இல்லாத என்னோட ஆட்டோபயோகிராபி பக்கங்களில் இந்த பேர்&லவ்லி வந்து பிரச்சனையை கிளப்பிடுமோன்னு லைட்டா ஒரு பயம் வந்துச்சு! பவுடர் போட்டுக்கிட்டு கீரிமை தடவிக்கிடலாமா இல்லாட்டி கீரிமை தடவிக்கிட்டு பவுடர் போட்டுக்கிடலாமான்னு கன்ப்யூசன் அப்புறம் பிங்கி பிங்கி பாங்கி போட்டு கீரிம் போட்டு ரெண்டு லேயர் பவுடர் போட்டா போதும்ன்னு மனசு திருப்தியாச்சு! ஆச்சு 7 நாளு ப்ராகிரஸ் ஒண்ணுமே இல்ல ஆனா ஒர்க் கண்டினியூ ஆகிக்கிட்டிருந்துச்சு! சரி வேற யார்க்கிட்டயாச்சும் அட்வைஸுங்கன்னு கேப்போம்ன்னு இன்னும் ரெண்டு மூணு பேரை புடிச்சா ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு அட்வைசு சொல்றானுங்க!

கிரீமை தடவிட்டு பெறவு அரைமணி நேரம் கழிச்சு பவுடர் போடுடா நல்லா ஒட்டும்ங்கறான் ஒருத்தன் ( அப்படியே சுவத்துக்கு பிளாஸ்டரிங்க் பண்ணுற மாதிரியான டெக்னிக்கேதான்!)

கிரீம் போட்டுட்டு போனா உடனே வியர்க்க ஆரம்பிச்சு பவுடர் எல்லாம் வழிஞ்சு போயிடும் ஸோ நீ கையில எப்பவுமே கொஞ்சம் பவுடர் வைச்சுக்கிட்டு அடிச்சுக்கோடான்னு இன்னொரு ப்ரெண்ட் அட்வைசு!

பேர் & லவ்லியோட சேர்த்து எந்த பவுடர்டா போட்டுக்கிட்ட...?

ம்ம்ம் பாண்ட்ஸ் பவுடரு!

அடேய் படுபாவி அந்த காம்பினேஷன்ல நீ என்னிக்குமே செவப்பாகமுடியாது! பேர்&லவ்லிக்கு சரியான காம்பினேஷனு கோகுல் சாண்டல்தான்! எப்படி அப்ளை பண்ணினாலும் - தனித்தனியா பர்ஸ்ட் & செகண்ட் லேயாராவோ இல்லாட்டி ரெண்டையும் கொழைச்சுக்கிட்டோ - கூடிய சீக்கிரமே செவப்பாகிடுவேன்னு சொன்னான் 3வதா ஒரு ப்ரெண்ட்டு! 3 தான் எனக்கு ராசி & ஒர்க் அவுட் ஆகும்! ஸோ அவன் சொன்னத நம்பித்தான் இப்ப கோகுல் சாண்டல் வாங்க கடைக்கு கிளம்பிக்கிட்டிருக்கேனாக்கும்!

எட்டில் வாழ்க்கை!



1.முழு முதலாய் மூச்சு

மூச்சு காற்றினை இழுத்து விடும் இயல்பிலேயே மிக கவனம் வைத்து அதிகம் அவசரமின்றி,அவதியின்றி மிகப்பொறுமையாக காற்றினை உள்ளிழுத்து வெளிவிடுங்கள். உடலே ஆதாரம் அதற்கு முக்கியமான செயல் மூச்சுக்காற்றினை முறையாக உள்ளிழுத்து வெளிவிடுதலே! அவசரகதியில் இயங்கவேண்டாமே!

2.இயற்கையோடு இயைந்த வாழ்வு

இயற்கை பெரும்பாலும் வெட்டவெளியிலே விரிந்து பரந்து கிடக்கிறது. இயல்பான நடைப்பயிற்சி,கடக்கும் ஒவ்வொரு கணத்திலும்,மனதில் எந்தவொரு நிகழ்காலபிரச்சனைகளின் பாதிப்பினையும் ஏற்றிக்கொள்ளாமல் இயற்கையினை கவனியுங்கள். - நடைப்பயின்றும்,இல்லையேல் அமர்ந்துக்கொண்டும்!

3.உறவுகளோடும் நட்புக்களோடும்.

கடந்த வாழ்க்கையில் நம்மை கடந்து சென்றவர்கள் தொடர்ந்து வருபவர்கள் என நமக்கு பிடித்தவர்களினை பற்றிய குறிப்பினை வைத்துக்கொள்ளுங்கள்! நேரம் அமைத்துக்கொண்டு மனம் மகிழ அவர்களை சந்தித்து மகிழ்ந்திருங்கள்!

4.சின்ன சின்ன விசயங்கள்

சின்ன சின்ன விசயங்களில் முழுமையாய் ஈடுபாடு கொண்டு ரசித்து செய்யுங்கள் எந்தவொரு சின்ன செயலினையும்!

5.இசையாக வாழ்வு

மெல்லிய ஒலி அளவில் இசையை ரசிக்கும்,இன்பத்தை ரசிக்கும் அந்த கணத்தினை ஒவ்வொரு நாளும் தவறவிடாமல் தொடருங்கள்!

6.படைப்புக்களில் பயணம்

ஓவ்வொருவருக்கும் தங்களுக்கு பிடித்தமான வகையில்,ஒவியம்,கலை,எழுத்து போன்ற துறை படைப்புக்களுக்கு நேரம் ஒதுக்குங்கள்

7.மன்னித்து மகிழ்ந்திருங்கள்

நீண்டநாட்கள் அல்லது தற்காலிக பிரிவுகளால் பாதிக்கப்பட்டிருந்தால் நீங்களாகவே முன்வந்து மன்னிப்பினை தந்து மனமுவந்து தொடர்புகளை புதுப்பித்துக்கொள்ளுங்கள் இடைவெளி நாட்கள் கண்டிப்பாக சரியானதொரு புரிந்துணர்வினை இரு தரப்புக்குமே தந்திருக்கும்!

8.பொதுவாழ்வில் ஈடுபாடு

சிறு சிறு உதவிகளில் உங்களை ஈடுப்படுத்திக்கொள்ளுங்கள். நம் தகுதிக்கேற்ப நம்மால் இயன்ற உதவிகளை செய்தாலே அதை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்ளும் மனங்கள் இருக்கின்றன என்பதை உணருங்கள்!


டிஸ்கி:- டைம்ஸ் ஆப் இந்தியாவின் மும்பை பதிப்பில் வெளியான கட்டுரையின் சாரம்சம் - தமிழில்...!

பா & யப்பா!

13 வருடம்தான் வாழ்க்கை கொஞ்சம் அதிர்ஷ்டமிருந்தா இன்னுமொரு பத்து வருஷம் நிறைய அதிர்ஷடமிருந்தா 20 வருஷம் வாழ்ந்துட்டு போய்க்கிட்டே இருக்கவேண்டியதுதான்! இதுதான் progeria வோட பேசிக் பிரப்ளம்!

பொருத்தமா உக்கார வேண்டிய ஜீன்களில் கொஞ்சம் கோச்சுக்கிட்டு இங்கயும் அங்கயும் மாறிப்போய் உக்கார்ந்துடுச்சுன்னா அந்த குழந்தையோட வாழ்க்கையே மாறிப்போயிடும்!

ரொம்ப ரொம்ப rare கேஸ்தான் இந்த நோய் - அதிர்ஷ்டம்ன்னு கூட வைச்சுக்கிடலாம்! இந்த விசயத்தை ஒரு சப்ஜெக்டா வைச்சு ஒரு படம் அதுவும் இந்தி சூப்பர் ஸ்டார் வைச்சு எடுக்கறதுங்கறது சிம்பிள் மேட்டர் கிடையாது!

யு.எஸ்ல இருக்கிற ப்ரோகேரியா ரிசர்ச் பவுண்டேஷன் இந்த படத்தை பார்த்துட்டு இந்த படத்தை விளம்பரபடமா இந்த நோய் பற்றிய விழிப்புணர்ச்சி பிரச்சாரத்துக்கு பயன்படுத்த முடிவு செஞ்சுருக்காங்களாம்!

சாதிச்சிருக்காரு R. பாலகிருஷ்ணன் aka பால்கி !

எம்.பியிடம் அவார்டு வாங்கிட்டு வந்து படுத்துக்கிடந்து கையில அவார்டோட எழுந்து அம்மாவிடம் விவரிக்கும் இடங்கள்

ராஷ்டிரபதி பவனுக்கு போவதற்கு அப்பாவிடம் தேதி பேரம் பேசுவது

ராஷ்டிரபதி பவனுக்கு போயிட்டு திரும்பி வரச்சொல்லிட்டு அதற்கு சொல்லும் காரணம்!

ரொம்ப்ப்ப்ப்ப் க்யூட்டான அந்த சின்ன பொண்ணுக்கிட்டயிருந்து எஸ்ஸாகும் விநாடிகள் கடைசியில் காரணம் நமக்கு புரிபடும் தருணங்கள்

அபிஷேக் வித்யா பாலன் காதல் செய்யும் தருணங்கள்!

பாட்டியுடனான கொஞ்சல்கள்

என ரசிக்கும் கவிதை நிமிடங்கள் நிறையவே இருக்கின்றது பா - விடத்தில்!

இளையராஜாவின் பின்னணி இசையில் சில இடங்களில் சிலிர்ப்பு உணரப்படுகிறது !



முழுப்படத்தின் உயிரோட்டமான நடிப்பு வித்யா பாலனும் அமிதாப்பும் - அமிதாப் இந்தி பட உலகின் சூப்பர்ஸ்டார் ஒரு சிறு பையனாக வித்தியாசமான மேக்கப்புடன் வலம் வருகையில் அவருடன் இணைந்து அதுவும் அம்மா கேரக்டரில் நடிக்கவேண்டுமெனில் நிறையவே சிரமங்கள் இருக்கலாம் ஆனால் எந்தவிதமான சமரசங்களுமற்ற ஒரு அம்மாவாக கச்சிதமாய் பொருந்தியிருக்கிறார்!


”யப்பா”

இந்த பா பார்ப்பதற்கு முன்பே ஒரு சின்ன வரி வடிவம் - யாரு “பா”வை தமிழ்ல ரீமேக் செய்யப்போறான்னு” டிவிட்டர்ல ஒரு கொஸ்டீன் மாதிரி வந்துச்சு! சரி நாம படம் தயாரிக்காட்டியும் (அடேங்கப்பா ஆசையை பாரு) அட்லீஸ்ட் செலக்‌ஷன்லயாச்சும் உக்காருவோமேன்னு செஞ்ச படங்கள்தான்!


யப்பா - மேலும் ஒரு எடிட் செய்யப்பட்ட படம் மிக குறுகிய காலகட்டத்தில் - நேரத்தில் என்றே கூறவேண்டும்! - இணையத்தில் வெகு வேகமாக பரவியிருந்தது - இத்தனைக்கும் தனிப்பட்ட மெயிலாக அனுப்பப்பட்ட படம்! - இணையத்தில் பரவிய வேகம் என்னை ஆச்சர்யப்படுத்தியது! இது தொடர்பில், ”யப்பா” படங்கள் யார் மனதையும் புண்படுத்தியிருந்தால், மன்னிக்கவேண்டுகிறேன்!

12.12.2009


நம் கடமைகளை நாம் ஒழுங்காக செய்யவேண்டும்.யாரையும் துன்புறுத்தாமல்,யாருக்கும் கெடுதல் நினைக்காமல் எந்த ஆசைகளையும் வைத்துக்கொள்ளாமல் வாழ்ந்தால் நிம்மதி நிச்சயம்!

********

Happiness begins when ambition ends.

ஆசைகள் குறையக்குறைய நிம்மதி - சந்தோஷம் அதிகமாகிறது!

********

பெரிய லட்சியமென்று எதுவும் இல்லை...!
லட்சியமாவது, புடலங்காயாவது,சுகமாக,சந்தோஷமா,நிம்மதியாக வாழ்ந்து ..
கூட இருக்கிறவங்களையும் சந்தொஷமா வாழ வைக்கணும் அவ்வளவுதான்!

- ரஜினிகாந்த்

வாழ்க வளமுடன்!

டிஸ்கி:-

ஆன்மீக சிந்தனைகள் - அறிஞர்களின் பொன்மொழிகள் - வாழ்வியல் சிந்தனைகளை பின்பற்றி செல்லுங்கள் என்று கூற விரும்பவில்லை, சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களினை முழுமையாக உள்வாங்கிக்கொள்ளுங்கள் பிற்காலங்களில் உங்களின் சிந்தனைகளினூடாகவே அவை வெளிப்பட்டுவிடும்!


வாழ்க வளமுடன்' என்று பிறரை வாழ்த்துவது மிக உயர்ந்த பலனை அளிக்கும். வாழ்த்தும் பழக்கத்தினால் கோபம் முதலிய தீய குணங்கள் உருவாவதைத் தடுக்கலாம்

ஒவ்வொருவரும் காலையில் எழுந்தவுடன் உலகம் முழுவதையும் நினைத்து வாழ்த்த வேண்டும். அந்த வாழ்த்து அலை மனித சமுதாயத்தில், அவர்கள் அறிவிலே பதிவாகி பிரதிபலித்து காலத்தால் உலகம் முழுவதும் மகிழ்ச்சியை அமைதியை நிலவிடச் செய்யும்

அன்பு, அருள், இன்முகம் இவற்றைச் சிந்தியுங்கள். இதனால், குடும்பத்தில் அமைதியும் இன்பமும் நிலவும். நம் வீட்டு குழந்தைகளும் நல்லவர்களாகவும், அழகுடையவர்களாகவும் வளர்வார்கள்.
வேதாத்திரி மகரிஷி



வேண்டுகோள்:-

வாழ்க வளமுடன் - போன்றே இன்னும் பல உச்சரிக்கப்படும்/உச்சரிக்கப்படாத உச்சரிக்கப்பட்டால் மனதுக்கு மகிழ்ச்சியினை கொடுக்கும் நற்சொற்களை பற்றியும் தெரிவியுங்களேன்!

பிரிவொன்றை சந்தித்தேன்!

வருகிறேன்! என்று சொன்ன அந்த நாளினை - நேரத்தினை - நினைத்துப்பார்க்கின்றேன் எத்தனை பெரிதாய் பீறிட்டு கிளம்பிய சந்தோஷத்துடனான செய்தியாக அன்று தெரிந்தது எனக்கும் என் நண்பர்களுக்கும்!

போகிறேன் என்று சொன்ன அந்த இரவு வேளையில் அதுவும் மஸ்கட் இண்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் Departureல் கண்ணீருடன் விடைகொடுக்கும் நட்புகளை அக்கம்பக்கம் வித்தியாசமாக பார்ப்பது நிச்சயம் புதிதான ஒன்றுதான்! ஊரைவிட்டு வந்து பல மாதங்கள் கஷ்டப்பட்டு இஷ்டப்பட்டோ படாமல் பணி புரிந்து ஊர் செல்லும் நாளில் முழு மகிழ்ச்சியுடன் துள்ளி குதித்து Departurக்குள் புகும் பயணிகளுக்கு மத்தியில் நா தழுதழுக்க கண்ணீருடன் தற்காலிகமாய் விடை பெற்ற அந்த நாளினை நானும் என் நண்பர்களும் மறக்க இயலாத ஒரு நாள்! இத்தனைக்கும் நண்பர்கள் செண்டிமெண்ட்களில் சிக்கி தவிப்பவர்கள் அன்று! எதையுமே மிக எளிதாக எடுத்துக்கொள்ளும் மனோபாவம் கொண்டவர்களும் கூட!





இருந்த நான்கு நாட்களில் பயணித்த தூரங்கள் அதிகம் பார்த்த இடங்களை விட நண்பர்களோடு மகிழ்ச்சி கொண்டு உறவாடிய நேரங்கள் அதிகம்! நண்பர்க்ள் கூடினால் ஒன்று கூடும் கேலிகளும் கிண்டல்களும் சீண்டல்களும் என இனிதே கழிந்த நாட்களை என் நினைவடுக்குகளில் சேமித்துக்கொண்டேன் இன்னும் சில காலங்களுக்கு நினைத்து நினைத்து மகிழ,சோகங்களுக்கும் தோல்விகளுக்கும் நிம்மதியின்மை அடையும் நேரங்களுக்கும், முற்றுபெறாமல் தொடரும் பயங்களுக்கும்,மனதை வருத்தும் எண்ணங்கள் என அனைத்திற்கும் அருமருந்தாய் அமையும் !

பிரிவு கொடியதுதான் - நட்புகளிடத்திலிருந்து - மனதுக்கு பிடித்த மனிதர்களிடத்திலிருந்து விலகி இருப்பது!