அழிக்கப்படவேண்டிய வார்த்தை - அகதி!மனிதாபிமானம் மரித்த மண்ணில்
மறுக்கப்பட்ட வழ்வை தொலைத்து
தொட்டழைந்த மண்ணையும் விட்டு
உடன் இருந்த உறவுகளையும் தொலைத்து
முளையோடு பிடுங்கி எறியப்பட்ட "விதையாய்"
ஊன்ற நிலம் கேட்டு வந்திருக்கும்
தமிழ் பொடியனின் தவிப்பு இது!

தலை நிமிர்ந்து வாழ்ந்த "தாய்மண்ணை"
உயிர் காக்கும் "உறங்காத விழிகளை"
தலை சாய்ந்துறங்கும் "தாய்மடியை"
என் உயிராய் நேசித்த "நண்பர்களை"
இவற்றையெல்லாம் தொலைத்து விட்டு "வலியோடு"
வந்திருக்கிறேனே!-நான்
வாழ்வதற்கா? இல்லை வாழ வைப்பதற்கா???

ஆழக்கடல் கடந்து "அவுஸ்திரேலியா"
வந்தவனை "அகதி" எண்டு அடையாளம் இட
"ஆயிரம்" கேள்விகள்!
அழகான பூந்தோட்டத்திலிருந்து
பிடுங்கி எறியப்பட்ட சின்னஞ்சிறு செடி நான்
என் வேர்களில் இப்போதும் ஒட்டி இருப்பது-என்
தாய்மண்ணின் "புழுதி மண்" வாசம்தான்!
இங்கே நிரந்தரமாய் வேரூண்டி விழுதுகள் விட
ஆசையில்லை எனக்கு!

ஆணிவேரும் அடிக்கட்டைகளும் அங்கே இருக்க-இங்கே
ஆழ வேரூண்ட எவனுக்கும் ஆசை இல்லை.

என் ஒவ்வொரு கிளைகளும் கொடுக்கின்ற "நிழலில்"
இளைப்பாற வேண்டும் என் இனம்! என் சனம்!

தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு
தங்கத்தட்டில் தரமான உணவாம்!

என்ன கொடுத்தாலும் என் தாய் கொடுக்கும்
"புட்டுக்கும்" "நண்டுக்கறிக்கும்" ஈடாகுமா?

ஓலைப்பாயில் ஒழுகும் மழைத்துளியில்
நனைந்து உறங்கியவனுக்கு-இங்கே
ஓசியாய் கிடைக்கிறது "ஏசி"

என்ன வேண்டும்?எண்டு கேட்டபின் கொடுக்கும் இவர்களுக்கு தெரியாது
கொடுத்தபின், இன்னும் வேண்டுமா? எண்டு கேட்கும் "இனம்" நான் எண்டு.


வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகள் எல்லாம்-அங்கே
வீடு கட்டி வாழ்வதில்லை!

காலநிலை மாற்றம் அவற்றை கடல் கடக்க வைக்கிறது.
இப்போது எங்கள் மண்ணில் இலையுதிர்காலம்-நாளை
வசந்தகாலம் வரும்போது மீண்டும் வானமேறுவோம்
எங்கள் மண்ணில் நிரந்தரமான "வாழ்வை" தேடி!

விரக்தியின் விளிம்பிலும்! வேதனையின் வேக்காட்டிலும்!
விம்முகின்ற உணர்வுகளை
"கவிதை" எனும் கட்டுக்குள் அடங்காமல்,
விழி வழி வழியும் நீர்துளிகளைப்போல
வலியின் உச்சத்தில் வரும் என் வாய் "பிதற்றல்"
என் விரல் கிறுக்கும் கிறுக்கல் இது!

வாழ்ந்த மண்னை விட்டு
"வாழ்க்கை" தேடி வாழ வந்த மண்ணை
"பழிக்கும்" பாவம் செய்யும் பாவி நான் இல்லை!
"அடைக்கலம்" தந்த வீடுகளை "ஆலயங்களாய்"
நினைக்கும் ஆயிரம் தமிழர்களில் நானுமொருவன்!

ஐயா...!
"தமிழன்" என்ற செருக்கோடு தலை நிமிர்ந்து
வாழ்ந்த நாங்கள்....
"அகதி" என்ற அவமானத்தோடு அவலப்படுகிறோமே.!
அந்த "ஆதங்கம்" தான் எனக்கு!

"சிற்றிசன்" தந்தாலும் "சிம்மசனம்" எமக்கெல்லாம்
எங்கள் தாயகத்தில் தான்.

அன்னை மண்ணில் ஆறடிக்குள் புதைந்து "துயிலும்"
அற்புதம் நம்மில் எத்தனைபேருக்கு கிடைக்கும்?

"ஆயிரம்" சொன்னாலும் "அகதி" என்ற பேரோடுதான் - இங்கே
"அடக்கம்" செய்யப்படும் அவலம்!

சொந்த மண்ணிலும் "அகதி"
வந்த மண்ணிலும் "அகதி"
ஐயா...!
அழுதாலும் விளங்காது..!
எழுதினாலும் புரியாது...!
"அகதி" எனும் சொல்லின் அவமானத்தின் "அசிங்கம்"
வாழ்ந்து பாருங்கள் "வலி" தெரியும்...!இன்று ஜூன் 20 - அன்னை மண்ணிலிருந்து வெளியேறி அடைக்கலமான மக்களினை பற்றிய செய்திகளை உலக்குக்கு சொல்லும் நாள்! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தேசத்திலிருந்தும் தம் உறவுகளை உடைமைகளை விட்டு பிரிந்து, மற்றைய நாடுகளில் வாழ்ந்துவரும் எண்ணற்ற மக்களின் உணர்வுகளில் இருக்கும் தாய்மண்ணின் கனவுகள் நிறைவேற நாமும் பிரார்த்திப்போம்!

கவிதை ஆக்கம் :- தமிழ்பொடியன் @ தமிழ் சிட்னி

பரிந்துரை செய்த கானா பிரபாண்ணாவுக்கு நன்றி!

5 பேர் கமெண்டிட்டாங்க:

said...

இன்றைக்கு எத்தனையோ சுகங்களோடும், பாதுகாப்போடும் இருந்தாலும் சொந்த நாட்டில் இருந்து முகவரி தொலைத்தவர்களாய்ப் பலர் இருக்கிறோம். பதிவுக்கு நன்றி

said...

மண்ணை விட்டுப் பிரிவது என்பது உடலை விட்டு உயிர் பிரிவது போன்றது. இனிமேலாவது இது அடியோடு ஒழிய பிரார்த்திப்போம்... :)

said...

:((

said...

இனிமேலாவது இது அடியோடு ஒழிய பிரார்த்திப்போம்...

anbudan
babu

said...

அருமையான பதிவு ஆயில்யா..

கவிதையை காட்சியளித்ததற்கு நன்றிகள் பல...

அகதி - :(

கண்டிப்பாக அழித்தொழிக்கும் நாள் பக்கத்தில் வந்து சேர உங்கள் பிரார்த்தனையில் நானும் சேர்கிறேன்.