திண்ணை - 1980-85

1980 ஜூன் மாதத்தின் ஏதோ ஒரு நாளில் சுப நேரத்தில் கீழநாஞ்சில் நாட்டின் பர்மா செட்டியார் வீட்டு திண்ணைக்கு நான் அறிமுகமான காலந்தொட்டு 2006 செப்டமர் வரையிலுமான காலகட்டத்தில் திண்ணையும் என்னையும் சேர்த்தே வைத்திருந்தது வாழ்க்கை!

அப்ப எனக்கு குவார்ட்டர் வயசு கூட கிடையாதாம்!(ஒன்றரை மாசம்!) குவா..! குவான்னு...! கத்திக்கிட்டே இருந்ததால கடுப்பாகிப்போன அம்மா திண்ணையில தூக்கி வைச்சுடடு வீட்டு பாத்திரங்கள் பார்சல லாரியிலேர்ந்து டவுன்லோடு பண்றதுல பிசியாகிட்டாங்களாம்!

அப்புறம் எனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து,காலையில தூக்கத்திலேர்ந்து முழிச்ச உடனேயா அய்யோ அப்பா என்னைய விட்டுட்டு காளியாக்குடிக்கு காபி குடிக்க போயிருக்குமேன்னு அடிச்சு புடிச்சுக்கிட்டு வந்து தெருவில பார்த்த சைக்கிள் மிஸ்ஸிங்காயிருக்கும் அப்படியே அந்த 6'X 3' ( கொஞ்சம் சின்னதுதான்) உக்காந்திர்ந்து ஊளையிட ஆரம்பிச்சா பிற்பாடு அரைமணி நேரம் கழிச்சு காளியாக்குடி பொங்கலை வாயில வைச்சு அடைச்சுத்தான் நிப்பாட்டுவாங்க!

எப்பொழுதுமே அம்மாவுக்கு ஸ்கூலுக்கு போய்ட்டு சாயந்திரம் திரும்பி வந்து வீட்டுக்க்குளே நுழைஞ்சதுமே அப்பாடான்னு நிம்மதியா உக்கார்ந்து ரெஸ்ட் எடுக்கறது இந்த திண்ணையிலதான்! ( பின்னே சும்மாவா ஸ்கூலுக்கு போக 2 கி.மீ வர 2 கி.மீன்னு 4 கி.மீ நடைப்பயணமாச்சே!)

ஞாயிறுகளின் மத்திய நேரத்தில் வாய்க்கால் குளியலில் விளையாடிவிட்டு வந்து உக்கார்ந்து திண்ணையில் பாடிய பாடலை மறக்கமுடியுமா? என்ன பாட்டுன்னு ரொம்ப ஆர்வமா இருக்கீங்களா? அப்போலேர்ந்தா நான் இந்த பஞ்ச பாட்டுட்தான் பாடி வள்ர்ந்திருக்கேனாக்கும் - அம்மா பசிக்குது அம்மா பசிக்குது !

மாலை நேரங்களில் டூயுசன் முடிந்து ரொம்ப களைப்பாக வரும்போதே அதுவும் வாயில்படியில் கால் வைக்கும்போதே அம்மா காபி என்று ச்வுண்ட் விடும் அதே நேரத்தில்,படு சுவாரஸ்யமான டிஸ்கஷன அக்கம்பக்கத்து வீட்டு பாட்டிகளோடு திண்ணையில் பேச்சு நடந்துக்கொண்டிருக்கும்! ( அப்ப போய் டிஸ்டர்ப் பண்ணுனா என்னவாகும்னு வேற தனியா சொல்லணுமா நீங்க டிஸைட் பண்ணிக்கோங்க!)

காலையில் மன்னம்பந்தலிலிருந்து காய்கறி கொண்டுவந்து கொடுத்துச்செல்லும் பாட்டியின் தின வருகையில் ஆரம்பித்து மாத வசூல் செய்ய வரும் பால்காரர் பேப்பர்காரர் அவ்வப்போது சைக்கிள் ரிப்பேர் செய்து கொண்டு வந்து கொடுத்துவிட்டு பணம் வாங்கிசெல்லும் முக்கூட்டு சைக்கிள் கடைக்காரர்,விழாகாலங்களில் வசூலுக்கு வரும் பூசாரி,அவஸ்தையான அரசு அலுவல்களில் அப்பாவின் ஆதரவு தேடிவரும் அப்பாவின் அலுவலக நண்பர்கள் என திண்ணை விருந்தாளிகளின் வருகைக்கும் இடையிலும் கூட, என் வாசம் திண்ணையில்தான்!

திண்ணை ஒய்வுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட ஒரு இடம் என்பதை தாண்டி அதில் வெவ்வேறு வகையிலான அமைப்புகளை உழைத்து உருவாக்கிய விதவிதமான திண்ணைகளை பார்க்கும்போதெல்லாம் ஏனோ ஒரு வித ஈர்ப்பு!

பெரும்பாலும் எல்லோருக்குமே திண்ணையினை பார்த்தால் ஹய்யோ எப்படி சூப்பரா இருக்கு! கொஞ்சம் நேரம் இருந்து ரெஸ்ட் எடுக்கலாம்போல இருக்கேன்ன்னு ஏற்படும் எண்ணத்தை மறுக்கவோ அல்லது மறைக்கவோ இயலாது! (நானெல்லாம் கவலையே படமா மாட்டேன் கட்டையை சாச்சுடுவேன்!)

எனக்கு வீடு கட்டவேண்டும் என்ற ஆசையினை விட அழகானதொரு கிராமத்தில் படத்தில் இருப்பதுபோன்ற பாழடைந்த வீடாக இருந்தாலும் பரவாயில்லை என்று வாங்கிப்போட்டு அதன் பழமை மாறாமல் சரி செய்யவேண்டும் என்பதுதான்!


சரி செஞ்சு சூப்பரா இதோ...! இந்த ஆளப்போல ஸ்டைல்லா படுத்து தூங்கணும்ப்பா அவ்ளோதான்!

(இத்துடன் 1980 -1985களுக்கான திண்ணை பற்றிய பதிவு பார்ட் - 1 நிறைவடைந்தது! இன்னும் எத்தனை பார்ட்டு வரப்போகுத்துன்னு எனக்கு தெரியாது ஆனால் அதை படிக்கறத்துக்கும் இல்லாட்டி படிக்காம எஸ்ஸாகுறதுக்கும் நீங்க ரெடியாகிக்கோங்க!

திண்ணை பற்றி என்னை எழுத சொல்லி அழைத்த முத்துலெட்சுமியக்காவிற்கு நன்றிகளை கூறிக்கொண்டு ( ஏண்டா கூப்பிடோம்ன்னு திண்ணை பார்ட் 3 அல்லது 4க்கப்புறம் ஃபீல் பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன்!)

என் நட்பு வட்டத்தில் நிற்கும் பதிவர்களை திண்ணை பற்றி எழுத அழைக்கிறேன்!
அபி அப்பா
தஞ்சாவூரண்ணன்
மதுமதியக்கா

கானா பிரபா - இவங்ககிட்ட அனுமதி கேட்டப்பா நான் திண்ணை வீட்ட பார்த்ததே இல்லப்பா எப்படி எழுதுறதுன்னு ஒரு பின்வாங்கல் கடிதம் அனுப்புனாங்க! சரி நீங்க பார்த்துட்டு அப்புறமா உங்க அனுபவத்தை எழுதுங்கன்னு சொல்லிட்டேன் இங்க!

எல்லாரும் வாங்க திண்ணைய பத்தின உங்களது சுவையான செய்திகளை தாங்க!

14 பேர் கமெண்டிட்டாங்க:

said...

இங்கேயும் மீ த பர்ஸ்டு

said...

அருமையான மலரும் நினைவுகள்

நல்வாழ்த்துகள்

அக்கடா என மகிழ்வுடன் தூங்கும் பெரியவர் அடையும் இன்பம் நமக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் கூட கிடைப்பதில்லை.

said...

திண்ணை நமது தமிழ்ப் பண்பாட்டிற்கு ஒரு வாசல்
நமது வீடு தேடியவர் வந்தவர் நமக்கு அறிமுகம் ஆகாதவர் எனினும் அவரை அமர வைத்து
அன்புடன் விசாரித்து ஒரு குவளை நீர் அல்லது மோர் கொடுத்துப் பின்னே தான், தாங்கள்
யார் ? என்ன செய்தி ? என விசாரிப்பது நமது பாரம்பரியம்.
திண்ணை ஒரு இரு பயன் வசதி.
நமது காரியத்தையும் செய்துகொண்டே ( பேப்பர் படிப்பது, கறிகாய் நறுக்குவது, ஷேவ்
செய்து கொள்வது ஆகியவை ) அடுத்த வீட்டிலும் வீதியிலும் என்ன நடக்கிறது என்பதை
அறிய உதவும் ஆன்டென்னா. வீதிக்கோடியில் வரும் கறிகாய் வியாபாரிக்காக, கால் கடுக்க‌
நிற்காமல், அமைதியாக அமர்ந்து அவர் வந்தவுடன் தெருவுக்கு வந்து வியாபாரம் செய்யலாம்.
திண்ணை, கணவன் மனைவி யிடையே ஏற்படும் ஊடலை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்
கொள்ளுமோர் மனித நேய சாதனம். கோவித்துக்கொண்ட கணவன் தெருவிற்கு போய்விடாமல், அங்கு திண்ணையிலே சற்று நேரம் அமர்வர். தனது மனதை அமைதிப்படுத்த முயலும் அதே சமயம், " நான் என்னாத்த சொல்லிப்புட்டேன்னு இப்படி வந்து உக்காந்திருக்கீக .." எனும் ஆதங்கத்துடன் மனைவி காதைக் கடிக்க‌
ஏற்ற இடம் இதைத் தவிர வேறொன்றும் உண்டோ ?
அதே சமயம், மகள், ஏம்மா அப்பா எங்கே போனாரு கிணத்துக்குள்ளே வாளி விழுந்துடுச்சு என்று கிணற்றுப்பக்கத்திலிருந்து மகள் சொல்லும்போது, மனைவி " அந்த மனுசன் எங்கே போவாரு, அந்தத்
திண்ணையிலே தான் குந்திக்கினு இருப்பாரு, இந்தா, இந்த காபி தண்ணிய கொஞ்சம் கொடுத்துட்டு
அவர கூட்டிக்கிட்டு வா, " என சொல்வாளே ? அதெல்லாம், இந்தக்காலத்திலே கேள இயலாத‌
பேச்சுக்கள்.
இதைத்தவிர, இன்னும் பல, பாட்டிகள் அரட்டை, பொழுது போகாதவர் மதிய நேர சீட்டுக்கட்டு, அக்கப்போர் எல்லாமே, இங்குதான் சங்கமம். .
கடைசியாக, கிராமங்களிலே திண்ணைதான் யுனைடெட் நேஷன்ஸின் ஜெனரல் அசெம்பிளி.
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://vazhvuneri.blogspot.com

said...

இன்றும் பல கிராமங்களில்
தீபத்திரு நாளாம், கார்த்திகை தினமன்று
வீதியில் உள்ள வீடுகள் அனைததிலும்
சின்னச் சின்ன அகல் விளக்குகளை
திண்ணைகளில் வைத்திடுவார்.
அந்த எழில் தரும் காட்சிக்கு
இந்திர புரியும் இணையுண்டோ ?


கிராமத்தான்
தஞ்சை.

said...

ம் அழகு திண்ணை நினைவுகள் .. ஒரு துண்டை மடிச்சு தூங்குபவர்கள் பார்க்கலாம் நம்ம ஊரில் காய்கறிக்கூடை இறக்கிவைத்து களைப்பாறும் பாட்டிகள் இருப்பார்கள்..

சூரி சார் நீங்களும் திண்ணை பற்றி ஒரு பதிவெழுதிப்போடுங்கள்..

said...

எண்ணை வெண்ணை எதானாலும்
திண்ணையிலே இறக்கி வச்சு
கண்ணுமுன்னே அளவு பாத்த ‌
காலமெல்லாம் மாறிப் போச்சே !

பொட்டு பொட்டு புள்ளியெல்லாம்
பால் தயிர் கணக்கெல்லாம்
திண்ணை சுவத்தினிலே
எண்ணிப்பாத்த வாபாரங்க ..

சாக்குபீசு குச்சி வச்சு
நாலு கட்டம் பாண்டி போட்டு
ஆளுக்காளு சத்தம் போட்டு
தண்டை சல சலக்க‌
துள்ளித் துள்ளிக் குதிக்குமே
கன்னிப்பொண்ணுக ! அத‌
தாங்குறது திண்ணைதாங்க..


ஆத்தாடி ! இன்னா வெய்யில் !
காத்தாடி கொண்டான்னுட்டு
நீர் மோரு கிழவி அவ
உள்ளெ போய் வருமுன்னே
உர்.உர்னு குறட்டை விட்டு
தூங்கிப்போவா திண்ணைலேங்க.

வீதிலே வானரங்க
பம்பரங்க விளையாட
ஒக்கார்ந்து பாத்ததெல்லாம்
வாசப்படி திண்ணைங்க ..

வெளி ஊரு போனவரு
என்ன கொண்டு வருவாரு ?
எந்நேரம் வருவாரு ?
கண் இமை கொட்டாமலே
கால்கடுக்க காத்திருப்பா ‌
ஒத்தாசை செய்ய ஒரு
வாசலிலே திண்ணைங்க ..

கொட்டு கொட்டுன்னு முழிச்சிருக்கும்
எட்டு பத்து கிழவி அவ‌
எப்பதான் தூங்குவாளோ ?
ஏங்கிக்கினே இளவட்டம்
அஞ்சியஞ்சிப் பேசுரதும்
அந்த வீட்டுத் திண்ணைலேங்க.

என்னா விளைச்சலுடா !!
பொன்னா கொட்டுதடா !!
எம்புட்டு காசு பணம்டா !!
ஊரு சனம் எல்லாத்துக்கும்
வாரி வாரி தந்த‌தெல்லாம்
வாசப்படி திண்ணைதாங்க ..

நல்லவரு வல்லவரு
சொன்னவரு செய்தவரு
போனவரு புகழ் பாடும்
ஊரு சனம் திண்ணைலேங்க ..

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://vazhvuneri.blogspot.com
PS: I tried to post this in Madam Muthulakshmi's blog. But the gatekeeper is very adamant in not allowing this old man inside. So I am posting this here.

said...

//எனக்கு வீடு கட்டவேண்டும் என்ற ஆசையினை விட அழகானதொரு கிராமத்தில் படத்தில் இருப்பதுபோன்ற பாழடைந்த வீடாக இருந்தாலும் பரவாயில்லை என்று வாங்கிப்போட்டு அதன் பழமை மாறாமல் சரி செய்யவேண்டும் என்பதுதான்!
//

எனக்கு கூட அந்த ஆசை இருக்குங்க

அந்த படம் டக்கரு

said...

////எனக்கு வீடு கட்டவேண்டும் என்ற ஆசையினை விட அழகானதொரு கிராமத்தில் படத்தில் இருப்பதுபோன்ற பாழடைந்த வீடாக இருந்தாலும் பரவாயில்லை என்று வாங்கிப்போட்டு அதன் பழமை மாறாமல் சரி செய்யவேண்டும் என்பதுதான்!
//

அதிஷா, அதெப்படி? என்னைக் கவர்ந்ததும் இதே வரிகள். ஆயில்யன். நல்ல ஆசை. வாழ்த்துக்கள்.

//( ஏண்டா கூப்பிடோம்ன்னு திண்ணை பார்ட் 3 அல்லது 4க்கப்புறம் ஃபீல் பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன்!) //

இல்லீங்க. எத்தனை பார்ட் வந்தாலும் அலுக்கும்னு தோணலை.(ஹி..ஹி.. ஏன்னா நானும் ஒரு பார்ட் போடலாம்னு இருக்கேன்)

said...

கயல்விழி முத்துலெட்சுமி said...
//சூரி சார் நீங்களும் திண்ணை பற்றி ஒரு பதிவெழுதிப்போடுங்கள்..//

சூரி சாரின் பின்னூட்டங்களே திண்ணையைப் பற்றிய ஒரு பதிவு போல இருக்கிறது. இல்லையா கயல்விழி?

said...

ஆயில்ஸ்

உங்க திண்ணை நினைவு கலக்கல், உங்க மாதிரி நமக்கு அனுபவம் கிடையது என்பதால் தான் தேர்தலில் இருந்து விலகினேன் ;) மற்றப்படி திண்ணையில் இருந்து காற்சட்டை தேய்ந்தவர் தான் கானா பிரபாவாக்கும் ;-)

said...

ஆஹா, என்னை கூப்பிட்டது எல்லாம் சரி, ஆனா சுப்பு சார் பின்னூட்டம், பின்னே மத்த மத்த பின்னூட்டம் எல்லாம் பார்த்தா நான் எழுத வச்சிருந்த மேட்டரெல்லாமே வந்துடுச்சே! அதனால என்ன ஏதோ என்னால முடிஞ்சதை சுத்தறேன்!!!

said...

:)

சூப்பர் கொசுவத்தி!! 2008 வரை எழுதுங்க...ஐ ஆம் தி வெயிட்டிங்க் :)))

said...

மனதை தொட்ட மிக மிக நல்ல பதிவு. வாழ்த்துக்கள். ஆவலோடு எதிர்பார்க்கிறேன் இதன் தொடர்ச்சியை.

said...

I said on 9 June, 2008..
//இல்லீங்க. எத்தனை பார்ட் வந்தாலும் அலுக்கும்னு தோணலை.(ஹி..ஹி.. ஏன்னா நானும் ஒரு பார்ட் போடலாம்னு இருக்கேன்)//

போட்டுட்டேன்.
http://tamilamudam.blogspot.com/2008/07/blog-post.html