எண்பதுகளின் கார்த்திகை மாதத்து ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களை மறக்க முடியாது. ஒரு கையில் பூக்கூடையும் இன்னொரு கையால் எனது கரத்தையும் இழுத்துப்பிடித்தவாறே முன்னே நடப்பாள். தருமபுர மடத்துக்கு வடக்கே முழுங்காலை தொட்டுக்கொண்டு ஓடும் காவிரியில் முதலில் என்னை குளிப்பாட்டி கரையில் உட்கார வைத்துவிட்டு கழுத்தளவு தண்ணீரில் கால் கடுக்க காத்திருப்பாள். வழக்கம்போல் லேட்டாக வந்து தீர்த்தம் கொடுத்த சாமி சீக்கிரமாக திரும்பிப் போவதற்குள் மூங்கில் பாலத்தின் மேலேறி ஈரத்துணியை இழுத்துப்பிடித்தவாறே கருங்குயில்நாதன் பேட்டை நோக்கி நடக்கும் பாட்டியின் உள்ளங்கையிலிருந்த அதே ஜில்லிப்பு, காவிரிக்கரையோரம் அவளின் கடைசிப் பயணத்திலும் இருந்தது.
'பாட்டி' என்று யாரும் விளித்தாலும் என் பாட்டிக்கு பிடிக்காது. பாட்டி என்று இப்போது நான் எழுதுவது கூட இரண்டு விஷயங்கள் உறுதியாக தெரியும் என்பதால்தான். ஒன்று, பாட்டிக்கு எழுதப் படிக்க தெரியாது. இரண்டாவது அப்படியே பாட்டி என்று எழுதியிருந்தாலும் திரும்பி வந்து கோபித்துக்கொள்ள முடியாத இடத்திற்கு போய்விட்டவள் அவள். நினைவு தெரிந்த நாள் முதல் எனக்கு அவள் 'அம்மா'தான். உண்மையில் ஒரிஜினல் அம்மாவை விட ஒரு ஸ்தானம் மேல். குடும்பத்தை துரத்திய வறுமை காரணமாக பதினாலு வயதில் இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டு பத்தே வருஷத்தில் அந்த வாழ்க்கையையும் பறிகொடுத்துவிட்டு ஒரே பெண்ணை படிக்க வைத்து டீச்சராக்கியதையெல்லாம் பாட்டி எப்போதே மறந்துவிட்டிருந்தாள். பாட்டியை பொறுத்தவரை கடந்த முப்பது வருஷங்களில் நடந்து நிகழ்வுகளில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருந்தாள். சினிமா, டி.வியை விட மூன்று பேரப்பிள்ளைகளையும் சுற்றி சுற்றி வந்து பார்த்துக்கொள்வதுதான் அவளின் பொழுதுபோக்கு. ஐந்து மணி அடித்ததும் தெருவை வெறித்தபடி வாசலில் காத்துக்கிடப்பாள். எல்லோரும் வந்து சேர எட்டு மணி ஆனாலும் இருக்கும் இடத்தைவிட்டு நகரவேமாட்டாள்.
பாட்டிக்கும் பேரனுக்கும் பிடித்தமான பிள்ளையார் கோயில் அது. தருமபுர மடத்தில் ஞானசம்பந்தம் பிரஸ் நடத்திக்கொண்டிருந்த தனது கணவர் எப்போதும் உட்கார்ந்திருக்கும் அந்த பிள்ளையார் கோயில் வாசலை ஐம்பது வருஷமானாலும் பாட்டியால் மறக்க முடியவில்லை. தருமபுரம் வரும்போதெல்லாம் பிள்ளையாருக்கு விசேஷ கவனிப்பு உண்டு. அளவுக்கதிகமான அக்கறையும் அன்பும், எரிச்சலை கொண்டு வரும் என்பதை பாட்டி உணரவேயில்லை. அதற்கான எந்தவொரு வாய்ப்பையும் யாரும் ஏற்படுத்திக்கொடுக்கவேயில்லை. காவிரிப்பூம்பட்டினத்தில் பாட்டியின் கடைசி அஸ்தியை கரைத்துவிட்டு திரும்பி பார்க்காமல் நடக்கும்போது அந்த குற்றவுணர்ச்சிதான் வதைத்தது. உடம்பு சரியில்லாத நாட்களில் பத்து நிமிடத்திற்கொரு முறை நெற்றியை தொட்டுபார்த்தவாறே பக்கத்திலேயே உட்கார்ந்திருக்கும் பாட்டியின் கடைசிக்காலங்களில் ஒரு பத்து மணி நேரம் கூட பக்கத்திலிருந்து பார்த்துக்கொள்ளமுடியவில்லையா? என்கிற மனசாட்சியின் குரலை எதிர்கொள்ளும் திரணி எனக்கில்லை. ஆனால், பாட்டி இதையெல்லாம் நிச்சயம் எதிர்பார்த்திருக்கவே மாட்டாள். அந்த கருப்பு ஞாயிற்றுக்கிழமையின் இருட்டு வேளையில் எந்த டாக்டரையும் தொந்தரவு செய்யாமலேயே காசி தண்ணீரை ஒரு மடக்கு குடித்துவிட்டு, சொந்த பந்தங்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும்போதே விழியோரம் ஒரு துளி கண்ணீரையும் மூக்கோரமாய் ஒரு துளி ரத்தத்தையும் சிந்திவிட்டு நிரந்தரமாக தூங்கிப்போனாள்.
'ஸார், சைஸ் ரொம்ப கம்மியா இருக்கே.. Resoultion பத்தலை. பெரிய சைஸ் படமா பிரிண்ட் எடுக்க முடியாதே...' கலர் லேப்காரன் சொன்ன வார்த்தைகளின் கூர்மை, ஆணியை விட நெஞ்சை அதிகமாகவே பதம் பார்த்தன. எத்தனையோ படங்களை எங்கேங்கோ போய் எடுத்து வந்திருந்தாலும் வீட்டுக்குள்ளேயே இருந்த பாட்டியை குளோஸப்பில் எடுக்க மறந்தது வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய மடத்தனம். இத்தனைக்கும் பாட்டிக்கு காமிராவை கண்டால் அலர்ஜி என்றெல்லாம் சொல்வதற்கில்லை. நாகரீகமாக உடுத்தி, நெற்றியில் விபூதி இட்டு, கழுத்தில் இரட்டை வட செயின் சகிதம் எப்போதும் பளிச்சென்றுதான் இருப்பாள். எப்போதும் பிள்ளையார் பைத்தியமாக இருந்த பேரனோடு தான் எடுத்துக்கொண்ட போட்டோதான் பாட்டிக்கு பிடித்தமான போட்டோ. பிள்ளையார் இருந்தால்தான் போஸ் கொடுப்பேன் என்று அழுது அடம்பிடித்த பேரனை சமாதானப்படுத்தி ஸ்டுடியோவிலேயே இருந்த போட்டோவை கழட்டி பேரனிடம் கொடுத்துவிட்டு ஒரு கையில் பேத்தியையும் இன்னொரு கையில் போட்டோவையும் நழுவ விடாமல் பத்திரமாக பிடித்துக்கொண்டு பேரப்பிள்ளைகளே என்னுடைய உலகம் என்று முப்பது வருஷமாய் மனதுக்குள் தீர்மானம் செய்து வைத்திருந்த பாட்டிதான் எனக்கு மகளாக பிறக்கவேண்டும். ராட்டிகளும் சவுக்கு கட்டைகளும் ஆக்கிரமிப்பதற்குள் பாட்டியின் சிதைந்து போன கால் கட்டைவிரல் நகத்தை வருடியவாறு நான் சமர்ப்பித்த அந்த அப்ளிகேஷனை ஆண்டவன்தான் பரிசீலிக்கவேண்டும்.
இது ஓரு மீள் பதிவு!
கடந்த வாரம் வரை என்னைப்பற்றி தெரியாது இருந்தவருக்கு,
நட்சத்திர வாரத்தின் முதல் நாள், என் பால்ய கால புகைப்படம் பார்த்த பின் வந்த முதல் மெயிலில் இருந்த வார்த்தை!
KEEP IT UP…! GO AHEAD
என் சகோதரன் ரஜினி ராம்கியிடமிருந்து...!
பொல்லா வினையே...!
# ஆயில்யன்
Labels: ஆயில்யன், என் உள்ளத்தில்
Subscribe to:
Post Comments (Atom)
5 பேர் கமெண்டிட்டாங்க:
:(
ஆண்டவனிடம் சமர்ப்பிக்கும் வேண்டுகோள்கள் அனைத்துமே உரிய நேரத்தில் உரிய முறையில் நிறைவேற்றப்படும். ஆனால் அது நிறைவேறி விட்டது எனப் புரிந்து கொள்ளும் திறன் நமக்கு வேண்டும்.
பாட்டி பாட்டி தான்.
என்னுடைய பாட்டி பாபநாசத்தில்,( உங்கள் ஊர் அருகில் தான் என நினைக்கிறேன்) வறண்டு கிடந்த அல்லது முழங்கால் வரை ஓடிக்கொண்டிருந்த காவிரியில், அக்கரை அருகில் இருந்த தண்ணீரில், என்னை அழைத்துச் சென்று ( என் வயது 15 ) குளிக்கும் போது, சடாரென காவிரியில் நீர் பெருக்கெடுத்து வந்ததைப் பார்த்து, மனம் கலங்கி, ஓட்டமும் நடையுமாக, இக்கரைக்கு இழுத்து வந்து, கரையேறி, ஆசுவாசமாக மூச்சு வீட்டது நினைவிற்கு வருகிறது. தன் வீட்டிற்கு விடுமுறையில் வந்த மகள் வீட்டுப் பெயரனைப் பத்திரமாக காப்பாற்றுவதில் உள்ள பொறுப்புணர்ச்சி ஏனோ மனதில் இப்போது நிழலாடுகிறது.
என்ன சொல்லறதுன்னு தெரியல...மனசு கொஞ்சம் பாராமாக இருக்கு..:(
பழசா இருந்தாலும் எழுத்து நடை & உணர்ச்சி கொப்பளிக்கும் வார்த்தைகள் அழகா இருக்கு பாஸ்!
அவ்வாக்கள் போல அன்பு காட்டுவோர் யாருமில்லை. அதேபோல பேரன்களை நேசிக்காத பாட்டிகளும் இல்லை.
உங்கள் கோரிக்கை நிறைவேற எனது பிரார்த்தனைகளும்.
Post a Comment