சிவபோக சாரம்


அவரவர் வினை வழியவர் வந்தன;
அவரவர் வினை வழியவர் வருபன;
எவர்ரெவர்க்கு உதவினாரே எவர்ரெவர்க்கு உதவிலரோ
அது அவர் நினைவது தமையுணர்வதுவே!

ஏதேது செய்தாலும்,
ஏதேது சிந்தித்தாலும்,
ஏதேது சொன்னாலும்,
மகாதேவா உன் செயலே!
என்று உன் அருளாலே உணர்ந்து,
உன் செயலே காண்கிறேன்!

தருமையாதீனத்தை உருவாக்கிய ஸ்ரீஞான சம்பந்த சுவாமிகளால் இயற்றப்பட்ட சிவபோகச் சாரம் என்னும் நூலிலிருந்துதான் மேற்கண்ட பாடல்கள் இடம்பெற்றுள்ளன!

அந்த கால தமிழில் தட்டுதடுமாறி, முழுவதும் படித்து முடிப்பதற்குள், தடுமாறி மிக கஷ்டப்பட்டு போய்விட்டேன்! ஆனாலும் ஒருவித ஆர்வம் ஈர்ப்பு அந்த எழுத்துக்களில் இன்னும் இருக்கின்றது!

சைவத்தமிழை அனைவரும் அறிந்துகொள்வதன் மூலம் நாம் நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டினையும் அறிந்துகொள்வதோட் அரிய பல சிந்தனைகள் பொதிந்த செய்திகளை நாம் கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டும்

இது போன்ற விஷயங்களுக்கு நாம் அதிகம் செலவளிக்கவும் தேவையில்லை, மிக மலிவான விலையிலேயே இது போன்ற பதிப்புக்களை, தருமபுரம் ஆதீனம் போன்ற சைவத்தமிழ் வளர்க்கும் ஆதீனங்களும், சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகங்களும் அச்சிட்டு வெளியிட்டு வருகின்றன!

மேல் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் தொழில்நுட்ப துறைகளிலேயே தம் கவனத்தை செலுத்தி வரும் இக்காலகட்டத்தில்,இது போன்ற பழந்தமிழ் பாடல்களை,- வாழ்க்கை பற்றிய பாடங்களை - தெரிந்து, அறிந்து, புரிந்துகொள்ள முயற்சிகள் ஏதுமின்றி தடம் மாறி போய்க்கொண்டிருக்கிறோம்!

எங்கள் ஊரில் நடக்கும் புத்தக கண்காட்சிகளில் கண்டிப்பாக தருமபுர ஞான சம்பந்த பதிப்பகமும், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகமும் தம் சைவதமிழ் திருமுறை நூல்களை பதிப்புகளை பார்வைக்கு வைக்கும் (ஆம் பார்க்க மட்டும்தான் பெரும்பாலானோர் வருகிறார்கள் அதுவும் வழவழப்பான அட்டையுள்ள நூல்கள்தான் அவர்களுக்கு பார்க்க, வாங்க ரொம்ப விருப்பமாக உள்ளது)

தற்போதைய சுழல் தமிழ் பாடங்களை மேல் படிப்பில் எடுத்து படிப்பதென்பது,குறைவாகி,தாழ்வாகியும் போய்விட்டது! கல்லூரியில் தமிழ் மாணவன் என்றால் ஏளன பார்வையோடு என்ன வேலை கிடைக்கும் என்ற கேலிப்பேச்சுகளே பிரபலமாகி வருகின்றன! கல்லூரிகளில் தமிழை விட கணிப்பொறி அறிவியல்தான் மிக முக்கியத்துவமானதாகிவிட்டது!

தமிழ் சொற்பொழிவுகள்,கருத்தரங்குகள் குறைய தொடங்கியதற்கு இதுவும் ஒரு காரணம்! இலக்கிய விழாக்களென்றால் காத தூரம் ஒடுகிறார்கள் மாணவர்கள்..!

மாணவர்களை ஈர்க்கும்படியான முயற்சிகளோ, நடவடிக்கைகளோ இதுவரையில் செயல்படுத்தபடாத நிலை கவலையளிக்கும் விஷயமாகவே உள்ளது!

0 பேர் கமெண்டிட்டாங்க: