”நேரம்” சரியில்லை!


சில நேரங்களில் அரசினாலோ அல்லது ஆள்பவர்களாலோ எடுக்கப்படும் முடிவுகள் பைத்தியக்காரதனமாகவோ தெரிகின்றது! அட்லீஸ்ட் ஆலோசனை சொல்லுபவர்களை (நிறைய படிச்சவங்கதானே இருக்காங்க!??) நினைத்துப்பார்த்தால் கூட இவர்களும் கூட இதற்கு உடந்தையாகி இப்படியான முடிவுகளை ஏற்க வாய்மூடி மெளனியாக இருப்பார்களோ என்று நினைக்கதோன்றுகிறது!- என்ன மேட்டருன்னா....!

"ஜூன் 1-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் தாலுகா தலைநகரங்களில் உள்ள நூலக வாசகர்களுக்கு "நேரம்' சரியில்லாமல் போய்விட்டது! மே 31-ம் தேதி வரை காலை 8 மணி முதல் 11.30 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருந்த நூலகங்கள் ஜூன் 1-ம் தேதி முதல் பொது நூலகத் துறையால் புதிய வேலைநேரத்தில் மாற்றிய மைக்கப்பட்டன.

அதன்படி, காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இடைவிடாமல் நூலகம் திறக்கப்படும் எனக் கூறி புதிய வேலை நேரத்தில் நூலகங்கள் திறக்கப்படுகின்றன.மற்ற அரசு அலுவலகத்திற்கும் நூலகத்திற்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. அதனால் தான் நூலகத்திற்கான வார விடுமுறை வெள்ளிக்கிழமை வைக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை முழு வேலைநாள். ஞாயிறு நூலகம் இயங்கும். இதற்கு காரணம் விடுமுறை நாளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் நூலகத்திற்கு வந்து படிக்கவும் புத்தகம் எடுத்துச் செல்வதற்காகவும்தான்...!

1993-ஆம் ஆண்டுக்கு முன்பெல்லாம் நூலகங்கள் காலை 8 மணி முதல் 11 மணி வரையும் மாலை 4 மணி முதல் 7.30 மணி வரையும் செயல்பட்டன. 1993ஆம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நூலகத்தின் வேலை நேரம் மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி காலை 8 மணி முதல் 11.30 மணி வரையும் மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் செயல்படத் தொடங்கின. காலையில் அரை மணி நேரம் அதிகமாக்கப் பட்டு இரவில் அரை மணி நேரம் குறைக்கப்பட்டது.

இரவு 7.30 மணி வரை, படிக்கவும் புத்தகம் மாற்றவும் வரும் வாசகர்கள் அப்போது கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் தங்கள் பணிகளை முடித்துவிட்டு 6 மணிக்கு மேல் நூலகம் வந்தார்கள்; அதற்கு ஜெயலலிதா அரசு முட்டுக்கட்டை போட்டு ஏழு மணிக்கே நூலகத்தை இழுத்து மூட ஆணையிட்டது. சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின் 2008ஆம் ஆண்டில் நூலக வாசகர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

வாசகர்களின் விருப்பத்தைக் கேட்காமல் அரசே தன்னிச்சையாக நூலக வேலை நேரத்தை தாலுகா நூலகங்களில் மாற்றியுள்ளது பொதுமக்களுக்கும் நூலக வாசகர்களுக்கும் நிச்சயமாக மரண அடிதான். நூலகங்களை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று அரசு கங்கணம் கட்டி செயல்படுகிறதா?

பொதுமக்கள் தங்கள் வீட்டு வரி கட்டும் போது நூலக வரி 10 சதவீதம் சேர்த்து வசூலிக்கப்படுகிறது; அதாவது ஒருவர் வீட்டு வரி ரூ. 100 கட்டுகிறார் என்றால் நூலக வரி 10சதவீதம் சேர்த்து ரூ. 110 வீட்டு வரியாக வசூலிக்கப்படுகிறது.

இந்த நூலக வரியை மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் தனியாக நூலகத்துறையினரிடம் கொடுத்து விடுகிறார்கள். இந்த நூலக வரியைக் கொண்டு தான் நூலகத்தின் செலவினங்கள் செய்யப்படுகின்றன.

ஆக,நாம் ஒவ்வொருவரும் அரசு நூலகங்களின் பங்குதாரர்களாக உள்ளோம்; நூலக வளர்ச்சியில், அக்கறையில் நூலகத் துறையை விட நமக்குத்தான் அதிக உரிமை உள்ளது.

பள்ளிக்கு மிக அருகில் அரசு நூலகங்கள் இருக்கும்போது, முன்கூட்டியே பள்ளிக்கு வரும் மாணவர்கள் காலை 8 மணி முதல் 9 மணி வரை ஒருமணி நேரம் தங்களின் பொது அறிவை வளர்த்துக் கொள்ள அன்றைய நாளிதழ்களைப் படித்து வந்தார்கள்.

அனைத்து நாளிதழ்களையும் காசு கொடுத்து வாங்கிப் படிக்க முடியாத மாணவர்கள் காலை நேரத்தில் அரசு நூலகத்தில் இலவசமாக நாளிதழ்கள், வார, மாத இதழ்களைப் படித்து மகிழ்ந்தார்கள். பள்ளிக்குச் சென்று முக்கியமான செய்திகளை சக நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டார்கள். அந்த வாய்ப்பு இனிமேல் கிடைக்காது. மாணவர்கள் மட்டுமல்ல, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தனியார் துறை ஊழியர்கள் தாங்கள் வேலைக்குச் செல்லும் முன் நூலகத்தைப் பயன்படுத்தினார்கள். பத்து மணிக்கு தான் அரசு அலுவலகங்களுக்கும் தனியார் அலுவலகங்களுக்கும் சென்று வந்தார்கள்.

இவர்கள் அனைவரும் 1-ம் தேதியில் இருந்து நூலகத்தைப் பயன்படுத்த முடியாமல் போய்விட்டது. நூலகம் காலை 10 மணிக்குத் திறக்கப்படும் போது எப்படி வர முடியும்? இவர்களால் மாலை நேரங்களிலும் நூலகத்தைப் பயன்படுத்த முடியாது. பள்ளி மற்றும் கல்லூரி முடிந்து வீட்டிற்குச் சென்று பிறகு நூலகம் வந்தால் 6 மணியைத் தாண்டி விடும். இதேபோல்தான் வேலைக்குச் செல்பவர்களின் நிலையும். 6 மணிக்குத்தான் அரசு மற்றும் தனியார் துறை வேலை முடியும். கிராமப்புறங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் பள்ளி முடிந்து, நகர்ப்புறத்திற்கு வரும்போது 6 மணியைக் கடந்து விடும். முன்பு 6 மணிக்கு மேல் தான் ஆசிரியர்கள் நூலகத்திற்கு வருவார்கள்.

குடிமகன்களின் தாகத்தைத் தீர்க்க டாஸ் மாக் மதுபானக் கடைகள் இரவு 11 மணி வரை திறந்திருக்கிறது. ஆனால், அறிவு தாகத்தைத் தீர்க்கும் அறிவுச் சுரங்கமான நூலகங்கள் மாலை 6 மணிக்கே பூட்டப்படுகிறது. என்ன கொடுமை ஐயா இது!

நன்றி - தினமணி

8 பேர் கமெண்டிட்டாங்க:

said...

சிந்திக்க வேண்டிய விடயம்... சிறப்பான கட்டுரை...

said...

நல்லா சொல்லியிருக்கீங்க!!

said...

ஒரு காலத்தில பள்ளிக்கூடமெல்லாம் அரசாங்கமும்,சாராயக் கடையெல்லாம் தனியாரும் நடத்துச்சு.இப்போ....:((

said...

NOBODY wants the public to be really educated and start THINKING on their own. Have you any idea how many people will be jobless if the common man in India starts to think on his/her own?

said...

Super usefull post anna..!!

said...

Now a Days Most of the people and Students are not intrested in reading books. Some people are Really Distrubed by this timing.

Very nice post.

said...

பல வருடங்கள் எங்களூரின் கிளை அரசு நூலகத்தினால் பயனடைந்தவன் என்ற முறையில், அரசு எடுத்த தான்தோன்றித்தனமான இம்முடிவுக்கு என் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

said...

எங்கள் இடத்தில் பூங்கா ஒன்றும் அதனுள்ளே நூலகமும் இருந்தன,நாங்கள் விளையாட போனாலும் சில நிமிடங்கள் அந்த நூலகத்தில் பத்திரிக்கைகள் பார்த்து விட்டு செல்வோம். இன்று அந்த நூலகம் எங்கோ ஒரு சின்ன சந்துக்கு மாற்றப்பட்டு யாருக்கும் எங்கிருக்கிறது என்பது கூட தெரியாமல் இருக்கிறது.அந்த பூங்கா ஒரு கல்யாண மண்டபமாக மாற்றப்பட்டு பணமாக்கப்பட்டுவிட்டது
அரசாங்கம் ஒரு நிறுவனம் போன்று லாப நோக்கில் செயல் பட ஆரம்பித்து விட்டபின் இதெல்லாம் சகஜமாகிவிட்டது.