டாஸ்மார்க் தண்ணி வுட்டு வளர்ந்தோம்! - தினமணி

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில், இளைஞர்களின் கைகளில் மதுக் கோப்பைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் டாஸ்மாக் நிமிர்ந்து நிற்கிறது, இளைஞர்க ளின் எதிர்காலம் தள்ளாடுகிறது.

எதிர்கால வளம்மிக்க இந்தியாவில், உழைக்கும் சக்தியாக இருக்க வேண்டிய இன்றைய இளைஞர்கள், மது உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாகி நல்ல குணங்களை இழந்து, கெட்ட குணங்களை அதிகப்ப டுத்திக் கொண்டு, தன் எதிர்காலத்தை இருண்டகாலமாக மாற்றி, வாழ்க்கையைக் கசப்பாக மாற்றி வருகின்றனர்.

இன்று எந்த வரைமுறையுமின்றி, கிராமங்கள்தோறும் அரசு மூலம் மிக எளிதாக மது கிடைப்பதால், இளைஞர்களிடையே மதுப் பழக்கம் அதிகரித்து வருகிறது.

முன்பெல்லாம் மனஅழுத்தம் உடையவர்கள், காதல் தோல்வி அடைந்தவர்கள் தான் மது குடிப்பார்கள் என கேள்விப்பட்டுள்ளோம். அதுவும் இப்பழக்கம் உள்ளவர்களை கிராமங்களில் விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்கள் மட்டுமே குடிகாரர்களாக தெரிவர்.ஆனால் இன்றைய நிலைமையே வேறு.

மது குடிக்காதவர்கள் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம். இன்றைய இளைஞர்கள் மது குடிப்பதையே ஒரு நாகரிகமாகக் கருதுகிறார்கள். காதணிவிழா முதல், கல்யாணவிழா, கருமாதி வரை நடைபெறும் விருந்துகளில், மதுவே முக்கியப் பங்கு வகிக்கிறது. முன்பெல்லாம் விருந்து என்றால் அதில் இனிப்பு, காரம், காபி இருக்கும். இன்று சாதாரணமாக சிறுசிறு விஷயங்களுக்கு கூட விருந்தில் மதுவைப் பயன்படுத்துகிறார்கள்.

ஒரு திருமண நிகழ்ச்சி நடக்கிறது என்றால் அந்த வீட்டில் மாப்பிள்ளை செலவு பட்ஜெட்டில், மது விருந்து அளிப்பதற்கென்றே கணிசமான அளவு நிதி ஒதுக்க வேண்டியுள்ளது. அப்படி இருந்தால் மட்டுமே திருமண வீட்டில் இளைஞர்கள் கூட்டத்தைப் பார்க்க முடியும்.

முன்பெல்லாம் குடிப்பவனுக்கு பெண் கொடுக்கவே கூடாது என பெற்றோர்கள் நினைப்பார்கள். இப்போது குறைந்த பட்சம் பகலிலாவது குடிக்காமல் இருக்கிறானா என்று பார்ப்போம் என்கின்ற நிலைமை. எதிர்காலத்தில் மது அருந்தாத இளைஞர்களே இல்லை என்ற நிலை வரக்கூடிய சூழல் உருவாகி வருகிறது.

டாஸ்மாக் கடை 10 மணிக்குதான் திறக்க வேண்டும் என்றாலும், மதுக்கூட உரிமையாளர்கள் விரைவிலேயே திறந்துவிடுவதால், அதிக தொகை கொடுத்துகூட வாங்கிக் குடிப்பதற்கு இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை காலையிலேயே மதுக்கடையில் காத்துக் கிடக்கின்றனர்.

மது குடிப்பதால் சிந்தனைத் திறன், செயல் திறன் பாதிக்கப்படுகிறது. சோம்பலை ஏற்படுத்துகிறது. மனநிலம், உடல்நலத்தை பாதிப்பதோடு பொருளாதார நஷ்டத்தையும் ஏற்படுத்துகிறது. இதனால் எதிர்காலத்தில் நல்ல இளைஞர்கள் உருவாகாமல் நல்ல குடிகாரர்களாக உருவாகுகிறார்கள். இதனால் அவர்களை ஜாதி, மத மோதல் மற்றும் வன்முறை, குடும்பங்களில் மனைவியுடன் தகராறு, போதையில் வாகன விபத்துகள், கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களில் ஈடுபடச் செய்கிறது.

பொழுதுபோக்கிற்காக மது குடிக்க ஆரம்பிக்கும் இளைஞர்களில் பலர், கடைசியில் அதற்கே அடிமையாகி விடுகின்றனர்.போதை தலைக்கேறும்போது வெறித்தனமாகச் செயல்படுகிறார்கள். அப்போது எடுக்கும் ஒவ்வொரு முடிவும் தவறாகவே முடிகிறது.

இதற்கு தீர்வுதான் என்ன...? ஒரே வழி அரசின் கையில்தான் உள்ளது. தமிழகம் முழுவ தும் முழுமையான மதுவிலக்கு கொண்டுவர வேண்டும். இதனால் மட்டுமே வருங்கால இளைஞர் சமுதாயத்தை நல்ல சமுதாயமாக உருவாக்க முடியும்.சாராயம், லாட்டரிசீட்டு, கந்துவட்டி உள்ளிட்டவற்றுக்கு அரசு எடுத்த தடை நடவடிக்கையால் பலன் கிடைத்தது.

மதுவிலக்கால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்கிறார்கள். அரசு நினைத்தால் எவ்வளவு நிதியை வேண்டுமானாலும் எத்தனையோ வழிகளில் திரட்டி வருவாய் இழப்பை ஈடுகட்டலாம். ஆனால் இளைஞர்களின் வாழ்க்கை இழப்பை யாராலும் ஈடு கட்ட இயலாது.

9 பேர் கமெண்டிட்டாங்க:

said...

உண்மை தான் டாஷ்மார்க்கினால் பல பேர் வாழ்க்கை நாசமாய் போகிறது,
அதை மூடாமல் தமிழகம் உருப்படாது

வால்பையன்

said...

மது நாட்டுக்கு,வீட்டுக்கு,உடலுக்கு கேடு.

paradox.

said...

தோழா ஆயில்யன்
வருத்தமான செய்திதான் மேலும் IT துறை ஆண்கள் பெண்கள் குடிப்பவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகம் உள்ளது.

said...

மதுவிலக்கு விலக்கு என்று கதறும் மருத்துவர் கட்சியின் மீட்டீங் நடக்கும் இடத்திற்கு சென்றால் சரக்கு வாடை மூச்சு முட்டுகிறது. .. என்ன செய்ய? தேர்தல் நேரத்தில் அவர் கட்சி வேட்பாளர் பிரசாரத்திற்கு வருபவர்களுக்கு சரக்கு வாங்கி தரவில்லை என்று சொல்லமுடியுமா?

அவர் முதல்வராக வந்து மதுவிலக்கு எடுத்துவரட்டும்.. ஆனால், இந்த காலகட்டத்தில், அவர் கட்சித்தொண்டர்களையாவது சரக்கடிக்க வேண்டாம் என்று கட்டுப்படுத்திவைக்கலாமே.. அவர் சொன்னால் அவர் கட்சிகாரகள் கேட்பார்களே.. செய்வாரா???

said...

:(

said...

மக்கள் நல அரசு என்று கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் சொல்லிவிட்டு இளைய தலைமுறையைக் குடிகாரர்களாக ஆக்கிவிட்டது இன்றைய அரசு.இளைஞர்கள் திருந்தவும் வழியில்லை.ஆட்சியாளர்கள் திருந்தவும் மாட்டார்கள்.எவன் ஆட்சிக்கு வந்தாலும் ஒண்ணு மொள்ளமாறியாக இருக்கிறான்.இல்லாவிட்டால் முடிச்சவுக்கியாக இருக்கிறான்.ஐயகோ!தமிழ்நாட்டிற்கு இப்படி ஒரு இழிநிலையா!

said...

payanulla pathivu!

said...

டாஸ்மார்க் இல்லை, டாஸ்மாக்...

said...

என்ன செய்வது ! இந்த கால இளைஞர்கள் ரொம்பவும் மாறி விட்டார்கள்.
எதுக்கெடுத்தாலும் தண்ணி பார்டி .

ஒன்று செய்யலாம். பெண்கள் , குடிப்பழக்கம் உள்ளவர்களை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கொடி பிடித்தால் தான் உண்டு. அருமையானப் பதிவு !!!