இனி இல்லாமல் போகும் இன்னிசை?! - தினமணி

இசையோடு இயைந்த வாழ்வு தமிழர்களுடையது என்று கூறிப் பெருமைப்படுகிறோம். உலகமே நமது இசையைக் கேட்டு மயங்குகிறது என்பது நிஜம். ஆனால், நகரங்களில் மேல்தட்டு மக்களுக்கு மட்டும்தான் இசையைப் பற்றிய ஞானம் இருக்கிறதே தவிர, மாவட்டங்களில் அடுத்த தலைமுறையினர் இசையைப் பற்றிய ஞானம் என்பதே இல்லாமல் அல்லவா வளர்கிறார்கள்.

இதைப்பற்றி யாராவது கவலைப்பட்டிருக்கிறார்களா? முன்பெல்லாம் ஆரம்பப் பள்ளிகளில் பாட்டுக்கென்று வகுப்பு இருக்கும். பாட்டுப் படித்தால் வேலை கிடைக்குமா என்று இப்போது பல பள்ளிக்கூடங்களில் பாட்டு வகுப்பு என்பதே இல்லாத நிலைமை.

சங்கீதம் என்பது வேலைக்காக மட்டுமல்ல. மனசாந்திக்கும், ஒரு மனிதனின் ரசனை உணர்வைத் தூண்டுவதற்கும் இசை மிகப்பெரிய மருந்தாக இருக்கும் என்பது சான்றோரும் முன்னோர்களும் கண்டறிந்து சொன்ன விஷயம்.

பாட்டு என்று சொன்னால் அது சினிமாப் பாட்டு என்றாகி விட்டிருக்கிறது. சொல்லப்போனால், அத்தனை திரை இசையமைப்பாளர்களும் - எம்.எஸ். விஸ்வநாதன் ஆனாலும், இளையராஜா ஆனாலும், ஏ.ஆர். ரஹ்மான் ஆனாலும், ஹாரிஸ் ஜெயராஜாக இருந்தாலும் - ஒத்துக்கொள்ளும் விஷயம் தங்களது பாடல்கள் அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பது கர்நாடக சங்கீதம்தான் என்பது.

நல்ல குரல் வளம் இருந்தாலும், அது முறையான பயிற்சியின் மூலம்தான் வளம் பெறுகிறது. ஸ்ருதி, லயம் போன்றவை எந்த சங்கீதமாக இருந்தாலும் இன்றியமையாத விஷயங்கள். இது தெரிந்ததால் தான் நமது முன்னோர்கள் குழந்தைகளுக்கு இசைப்பயிற்சி அளித்தனர்.

இசை ரசனை என்பது பரபரப்பான நாகரிக வாழ்வில் மனதுக்கு இதமளிக்கும் இன்றியமையாத விஷயம் என்று மேலைநாடுகளில் கூட உணரத் தொடங்கி இருக்கிறார்கள்.

தமிழகத்தில் சென்னை, கோயம்பத்தூர், மதுரை மற்றும் திருவையாறு என்று நான்கு இடங்களில் இசைக் கல்லூரிகள் இருக்கின்றன.

இவை தவிர நாகசுரம், தவில், பரதம் மற்றும் வாய்ப்பாட்டுப் பயிற்சி அளிக்கும் பள்ளிக்கூடங்கள் 17 இருக்கின்றன. இந்த இசைக் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் போதிய மாணவர்கள் சேர்வதில்லை என்பது மட்டுமல்ல, முறையாகப் பயிற்சி அளிக்கப் போதுமான ஆசிரியர்களும் இருப்பதில்லை.

இசைக்கல்லூரிகளிலும், இசைப்பள்ளிகளிலும் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாததால் இசைத்துறையில் மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதில் அதிசயம் இல்லை. இதுபோன்ற துறைகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அரசு கொடுத்தால்தான், தமிழகத்துக்கே உரிய கலைகளைக் காப்பாற்ற முடியும். தமிழுக்குத் தரும் முக்கியத்து வம் இசைக்கும் தரப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.

நாகசுரம் மற்றும் தவில் பயிற்சிக்கு தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மிக அதிகமாக ஆர்வம் காட்டி வந்தனர். இதுபோன்று பள்ளிகளில் தேர்வு பெற்று, பல ஆலயங்களில் வித்வான்களாக அவர்கள் நியமிக்கப்பட்டனர். இப்போது அதற்கான வாய்ப்பும் குறைந்துவிட்டிருக்கிறது.

இன்றைய நிலையில், பள்ளிக்கூடங்களில் மீண்டும் இசை வகுப்புகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்று கல்வித்துறை முனைப்புக் காட்டினால் ஒழிய, இந்தப் பாரம்பரிய இசை என்பது பணக்கார வீட்டுக் குழந்தைகளுக்கு மட்டும் கிடைக்கும் வாய்ப்பாக இருக்குமே தவிர, அடித்தட்டிலிருந்து ஒரு எம்.எஸ். சுப்புலட்சுமியோ, எம்.எல்.வசந்தகுமாரியோ உருவாக வாய்ப்பே இல்லாத நிலைமை தொடரும்.

கலைத்துறையிலும், இசையிலும் நாட்டமும், அவைகளின் வளர்ச்சியில் ஆர்வமும் உள்ள முதல்வர், ஏன் இசைக் கல்லூரியின் வளர்ச்சியிலும், அடித்தட்டு மக்களுக்கு இசைப்பயிற்சி அளிப்பதிலும் ஆர்வம் காட்டாமல் இருக்கிறார் என்பதுதான் புதிராக இருக்கிறது!

3 பேர் கமெண்டிட்டாங்க:

said...

நல்ல சிந்தனை, இதே நிலை தான் விவசாயத்துறைக்கும் இருக்கின்றது. அதனால் தான் அரிசிப்பஞ்சமே என்றும் சிலர் வாதிடுகின்றார்கள். இசை போற்றி வளர்க்கப்படவேண்டியது.

said...

பள்ளிகளில் விளையாட்டுக்கே ஒரு முக்கியத்துவம் இல்லாமல்போன ஒரு நிலையில் இசை வகுப்பு எங்கே நடக்கும். இந்த வார செய்தித்தாள்களில் 1100+ மார்க் பெற்ற மாணவ, மாணவிகள் போட்டோவுடன் பள்ளிக்கூட விளம்பரங்கள்தான் வ்ருகின்றன. உங்களைப் போலவே எனக்கும் இந்த வருத்தம் உண்டு. என்னுடைய "இசை விழா" பதிவை தயவு செய்து பாருங்கள்.
சகாதேவன்

said...

உண்மை தான். இசை, விவசாயம், என பல துறைகள் தேய்ந்து போகின்றன.

இதை எழுதும் விவசாய பிண்னணியில் இருந்து வந்த நானே, எனது மகனை/மகளை இசையோ, விவசாயமோ படிக்க வைப்பேனா? என்பது சந்தேகமே.
உண்மைய ஒத்துக்க வெக்கபட வேண்டியதில்லை. :))

இசையை ஒரு திறமையாக வளர்த்து கொண்டும், பொருள் ஈட்ட ஒரு புரபஷனல் படிப்பும் இருந்தால் தான் காலம் தள்ள முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லையே?