அலுக்கவைக்காத ஆமைக்கதை - ரீப்பிட்டேய்!

முன்னொரு காலத்தில் "வேகம் மிக்கவர் யார்?" என்று ஆமையும் முயலும் விவாதித்துக்கொண்டன. ஒரு பந்தயத்தின் மூலம் அந்த விவாதத்திற்கு முடிவு கட்டத் தீர்மானித்தன. பந்தயத்தில் வேகமாக ஓடத் தொடங்கிய முயல்.... ஆமை நெடுந் தொலைவு பின் தங்கியிருப்பதைப் பார்த்து.... மரத்தடியில் சிறிது அமர்ந்து ஓய்வெடுத்து பின் ஓடத் தீர்மானித்தது. ஆனால் விரைவிலேயே உறங்கிப்போனது. தவழ்ந்து நடந்த ஆமையோ எந்தத் தொந்தரவுமில்லாமல் - தூங்கும் முயலைக் கடந்து சென்று பந்தயத்தை முடித்துக்கொண்டது. விழித்தெழுந்த முயல், தான் பந்தயத்தில் தோற்றுப் போனதை உணர்ந்து வருந்தியது.

கதை கூறும் கருத்து :- பொறுமையும், ஈடுபாடும் பந்தயத்தில் வெல்ல அவசியம் தேவை. மேலே சொன்னதுதான் நாம் கேட்டு வளர்ந்த கதை.

ஆனால் சமீபத்தில் நண்பர் ஒருவர் சொன்ன சுவாரசியமான கதை இப்படிப் போகிறது.... பந்தயத்தில் தோற்ற முயல் மிகுந்த ஏமாற்றத்துடன் தோற்ற காரணத்தைத் தேடத் தொடங்கியது. அளவுக் கதிகமான நம்பிக்கையும், கவனக் குறைவுமே தோல்விக்கான காரணம் என்பதை உணர்ந்து கொண்டது. தனக்கு வரமாகக் கிடைத்த "வேகத்தைப்" பயன் படுத்தி ஓடியிருந்தால்... ஆமை ஒரு போதும் வென்றிருக்காது என அறிந்தது.இப்படி நினைத்த முயல், இன்னொரு பந்தயத்திற்குச் சவால் விட்டது. ஆமையும் ஒப்புக் கொண்டது. இம்முறை முயல் நிற்காமல் வேகமாக ஓடிப் பல மைல்கள் வித்தியாசத்தில் ஆமையை வென்றது.

கதை கூறும் கருத்து:- வேகமும் உறுதியும் உடையவர்களிடம் பொறுமையும், ஈடுபாடும் உள்ளவர்கள் தோற்றுவிடுகிறார்கள். கதை இங்கே முடிந்துவிடவில்லை.

இப்போது ஆமை யோசித்தது. தற்போதுள்ள நிலையில் பந்தயத்தில் முயலை வெல்வது என்பது சாத்தியமல்ல. அதனால் சற்றே மாறுதலான ஒரு வழியைச் சிந்தித்து முயலைப் பந்தயத்திற்கு அழைத்து. முயலும் ஒப்புக்கொண்டது.ஏற்கெனவே தீர்மானித்திருந்தபடி முயல் வேகமாயும், உறுதியாயும் ஓட ஆரம்பித்தது. ஆனால்.... ஓர் அகலமான ஆற்றை அடைந்தபோது நின்றுவிட்டது. பந்தய முடிவுக் கோடு ஆற்றின் அக்கரையில் இரண்டு கி.மீ. தொலைவில் இருந்தது. அதனால் என்ன செய்வதென்றறியாது வியப்புடன் முயல் அப்படியே உட்கார்ந்துவிட்டது. அதே சமயம் ஆமை மெதுவாகத் தவழ்ந்து வந்து ஆற்றுக்குள் இறங்கி எதிர்க்கரையை நீந்திக் கடந்து தொடர்ந்து நடந்து பந்தயத்தை முடித்துக் கொண்டது

கதை கூறும் கருத்து :- முதலில் உனது போட்டித்திறனின் தகுதி மையத்தைப் புரிந்துகொள். அதற்கேற்ப ஆடுகளத்தை மாற்றிக் கொள்.

இன்னமும்கூட இந்தக் கதை முடிவடையவில்லை. இக்காலக் கட்டத்தில் முயலும் ஆமையும் நல்ல நண்பர்களாகிவிட்டதால் ஒற்றுமையுடன் சிந்தித்துப் பார்த்தன. கடைசிப் பந்தயத்தை இன்னமும் சிறப்பாகச் செய்திருக்க முடியும் என்று உணர்ந்துகொண்டன. அதனால் கடைசிப் பந்தயத்தை மீண்டும் நடத்தத் தீர்மானித்தன. இம்முறை இணைந்து ஓடத் துணிந்தன. பந்தயத்திற்குத் தயாராயின. இம்முறை முயலானது ஆற்றின் கரை வரை ஆமையைத் தன் முதுகில் சுமந்து கொண்டோடியது. ஆற்றை அடைந்ததும் ஆமை முயலைத் தன் முதுகில் சுமந்து ஆற்றை நீந்திக் கடந்தது. கரையில் மீண்டும் முயல், ஆமையைக் சுமந்து ஓடியது. இறுதியில் இரண்டும் ஒன்றாகவே பந்தயக் கோட்டைத் தொட்டன.

முன் எப்போதும் உணர்ந்திராத தன்னிறைவை இரண்டும் அதிகமாகவே உணர்ந்துகொண்டன. கதை கூறும் கருத்து:- பலமான போட்டித் தகுதிகளுடன் தனிப்பட்ட முறையில் புத்திசாலியாக இருப்பது நல்லதே. ஆனால் பிறரது தகுதியை மதித்து இணைந்து செயலாற்ற முடியாத பட்சத்தில் நமது திறமை வரையறுக்கப்பட்ட எல்லைக்குக் கீழாகவே இருக்கும். ஏனெனில் சில சூழலில் பிறர் நம்மை விடச் சிறப்பாகச் செயலாற்ற முடியும்.கூட்டு முயற்சியில் சூழல் சார்ந்தே தலைமை உருவாகிறது.

குறிப்பிட்ட சூழலில் குறிப்பிட் மனிதரைத் தலைமை ஏற்கும்படி விட்டுவிடுதல் நல்லது.
இந்தக் கதையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு.

தோல்விக்குப் பிறகு முயலோ, ஆமையோ துவண்டு போய் விட்டுவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தோல்விக்குப் பிறகு, முயல் கவனத்துடன் முயன்று, கடுûமாய் உழைக்கத் தீர்மானித்தது.

ஆமை தனது போராடும் வியூகத்தை மாற்றிக்கொண்டது. ஏனெனில் அது ஏற்கெனவே இயன்றவரை கடினமாகவே உழைத்திருக்கிறது.

வாழ்வில் நாம் தோல்விகளைச் சந்திக்கும்போது, சில நேரங்களில் முயன்று கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. சில நேரங்களில் போட்டி வழிகளை மாற்றிக்கொண்டு மாறுபட்ட வழிகளைத் தேட வேண்டியுள்ளது. சில நேரங்களில் உழைப்பு வழிகள் இரண்டையும் மாற்றிப்பார்க்க வேண்டிய தாயுள்ளது.

முயலும், ஆமையும் கற்றுக்கொண்ட மிக முக்கியமான பாடம்:

எதிரியுடன் போட்டியிடுவதை விட்டுவிட்டு சூழலுக்கு எதிராகப் போட்டியிடும்போது... மிக மிகச் சிறப்பாக செயலாற்ற முடிகிறது.

நன்றி - சிஃபி அமுதசுரபி
நேற்று 23.05.08 ஆமைகள் பாதுகாப்பு தினம் - உலகம் முழுவதும் இயற்கை மாற்றங்களினாலும்,மனிதர்களின் பழக்கங்களிலும் பாதிக்கப்பட்டு அழிந்து வரும் ஆமைகளின் வாழ்வினை அவைகளின் பாதுகாப்பினை பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் கடைப்பிடிக்கப்படுகிறது.


குறிப்பு:- ஆமை வேகத்தில் வந்தாதால் கொஞ்சம் லேட்டு :-)

5 பேர் கமெண்டிட்டாங்க:

said...

இந்த கதை எல்லாம் தான் நாங்க டீம் பில்டிங் ஒர்க்சாப்பில் பயன் படுத்துகிறோம்... அனைவருக்கும் ஒன்றாக செயல்பட்டால் வீ கேன் பி மோர் புரோடக்டிவ்... நன்றி

Anonymous said...

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை அழகாக விளக்குகிறது இந்த கதை. குழந்தைக்கு சொல்ல புதிய கதை கிடைத்தது.

said...

ஜூஜூஜூப்பரு... எப்டி எல்லாம் யோசிக்கிறாய்ங்கப்பா... :)

said...

கேள்விப்பட்ட கதைதான் ஆனாலும் நல்லா இருக்கு.

said...

சூப்பரு பகிர்வுக்கு நன்றி ஆயில்யன்...