யோகா இனி பள்ளிகள்தோறும் - தினமணியிலிருந்து


வரும் கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கட்டாய யோகாசனப் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது மட்டுமல்ல; வரவேற்கக்கூடியதுமாகும்.

"நோய் நாடி நோய் முதல் நாடி' என்பது போல, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் யோகாசனப் பயிற்சி, நாளைய உலகின் நம்பிக்கை நட்சத்திரங்களான இளம் மாணவர்களுக்கு அளிக்கப்படவேண்டியது அவசியம்.

"மனதுக்கும் உடலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு' என்பது யோக சாஸ்திரத்தின் சாராம்சம். ஆரோக்கியமான உடல் இருந்தால் மட்டுமே ஆக்கபூர்வமான சிந்தனை பிறக்கும். அப்படிப்பட்ட சிந்தனை மட்டுமே செயலாகப் பரிமளிக்கும். வருங்காலச் சந்ததிகளின் வளமான வாழ்வுக்கு நோயற்ற உடலே குறைவற்ற செல்வம்.

அதற்கு யோகப் பயிற்சி ஓர் அற்புத வழி.இந்தியா வரும் வெளிநாட்டவர்களில் பலர், நம் நாட்டின் பாரம்பரிய பரத நாட்டியத்தையும், யோகக் கலையையும் கற்கவே பெரிதும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

வெளிநாட்டில் அலுவலகப் பணியாளர்களுக்கு ஒரு குழுவாக யோகாசனப் பயிற்சியளிக்கப்படுகிறது. இது மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதாம். பணியாளர்களுக்கு யோகா கற்பிப்பதால், உற்பத்தித் திறன் அதிகரிப்பதுடன், டென்ஷன் குறைந்து மன அமைதி கிடைப்பதாகச் சொல்கிறார்கள்.

8 வயதிலிருந்து குழந்தைகளுக்கு யோகாசனப் பயிற்சி அளிக்கத் தொடங்கலாம். இதனால் குழந்தைகளிடையே ஒழுக்கம், கட்டுப்பாடு வளர்கிறது. படிப்பில் மனதை ஒருமுகப்படுத்த முடிகிறது. நினைவாற்றல் அதிகரிக்கிறது. பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகளுக்கு யோகாசனப் பயிற்சி அளிப்பது எளிது. இளம் உடலை வளைத்து ஆசனங்களை எளிதில் செய்யமுடியும்.

பெண்களுக்கு குறிப்பாக வளர் இளம் பெண்களுக்கு யோகாசனம் உற்ற தோழி. மாத விலக்கு சமயத்தில் தோன்றும் கோபம், எரிச்சல் போன்ற மன உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதில் யோகாசனத்துக்கு இணை வேறில்லை. மாதவிலங்கு ஒழுங்கின்மை, மெனோபாஸ் நேரத்தில் ஏற்படும் மனஅழுத்தம் போன்றவற்றுக்கும் யோகா அற்புதமான தீர்வு. பிரசவத்துக்குப் பிறகு தளர்ந்திருக்கும் தசைகளை இறுகச் செய்வதிலும் இதன் பங்கு மகத்தானது.

வயதானவர்கள்கூட யோகாசனத்தின் மூலம் சுறுசுறுப்பாக வாழ்க்கை நடத்த முடியும் என்பதை லண்டனில் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது. யோகாசனம் செய்து வரும் முதியவர்கள் சிலரிடம் நடத்தப் பட்ட ஆய்வில், தசைகளைத் தளரச் செய்வதிலும், தள்ளாடாமல் நடக்கச் செய்வதிலும் யோகா முக்கியப் பங்கு வகிப்பது நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

ஆஸ்துமா, இதய நோய், உடற்பருமன், நீரிழிவு போன்ற பல நோய்களைக் கட்டுப்படுத்துவதிலும், குறைப்பதிலும் யோகாசனமும், மூச்சுப் பயிற்சியும் பெருமளவு உதவுகிறது.அனுபவித்துப் பார்த்தவர்களுக்கு மட்டுமே அற்புதம் புரியும்.

யோக சூத்திரத்தின் தந்தையான பதஞ்சலி முனிவர் அறிமுகப்படுத்திய யோகாசனங்களின் வகைகள் ஏராளம். காலப்போக்கில் அவற்றில் பல மறைந்து சுமார் 1000 வகையான ஆசனங்கள் மட்டுமே இப்போது வழக்கத்தில் உள்ளன.

சாதாரணமாக 10 முதல் 20 ஆசனங்கள் வரை தெரிந்தாலே ஆரோக்கியமாகவும், சுறு சுறுப்பாகவும் வாழ முடியும். குழந்தைகளிடையே யோகாவைச் சொல்லிக் கொடுப்பதால், ஒரு தலைமுறைக்கே அவற்றை சொல்லிக் கொடுக்கும் நன்மை ஏற்படுகிறது.

யோகாசனத்தைப் பற்றிப் பேசுகையில் தியானத்தையும் குறிப்பிடுவது அவசியமாகிறது. யோகமும், தியானமும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் எனலாம். கொந்தளிக்கும் மனதை கட்டுக்குள் கொண்டு வர தியானம், பொருட் செலவற்ற மருந்து. பரபரப்பு, மன அழுத்தம் நிறைந்த இன்றைய சூழ்நி லையில் தியானமும், யோகமும், மனித மனதுக்கு நிச்சயம் அமைதி தரும். உறவுகள் மேம்படவும் உதவிடும்.

6 பேர் கமெண்டிட்டாங்க:

said...

First naan thaan!

said...

///வரும் கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கட்டாய யோகாசனப் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது மட்டுமல்ல; வரவேற்கக்கூடியதுமாகும்.///

நல்ல விஷயம். நாங்களும் வரவேற்கிறோம்.

said...

///"நோய் நாடி நோய் முதல் நாடி' என்பது போல, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் யோகாசனப் பயிற்சி, நாளைய உலகின் நம்பிக்கை நட்சத்திரங்களான இளம் மாணவர்களுக்கு அளிக்கப்படவேண்டியது அவசியம்.///


கட்டாயம் அளிக்கப்படவேண்டும்.

said...

///ஆரோக்கியமான உடல் இருந்தால் மட்டுமே ஆக்கபூர்வமான சிந்தனை பிறக்கும். //


நம்ம எல்லோரையும் போல.

said...

///இந்தியா வரும் வெளிநாட்டவர்களில் பலர், நம் நாட்டின் பாரம்பரிய பரத நாட்டியத்தையும், யோகக் கலையையும் கற்கவே பெரிதும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.///


வெளிநாட்டவர்கள் இருக்கட்டும். நம்ம நாட்டவர்கள் அதிகமா கண்டுக்க மாட்டேங்கிறாங்களே ஏன்?

said...

நல்ல பதிவு(எப்பவும் தான்) போட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்.