ஈழ மக்கள் தமிழ்நாட்டில்...?


சொந்த நாட்டில் ஏற்படும் போரினாலும், பிரச்னைகளாலும் மற்றொரு நாட்டுக்கு இடம்பெயரும் அகதிகள், இடம்பெயர்ந்த நாட்டிலும் அடைக்கலம் கிடைக்காவிட்டால், அவர்களது வாழ்க்கை கேள்விக்குறி தான்!

அப்படியொரு நிலைதான் இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு ஏற்பட்டுள்ளது. உள்நாட்டுப் போரில் உறவையும், உறைவிடத்தையும் விட்டுவிட்டு உயிரை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு, இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு அரசின் அதீத கட்டுப்பாட்டால் வாழ்க்கையே நரகமாக மாறியுள்ளது

இலங்கையில் 1983-ம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப் போரின் விளைவாக, இலங்கை தமிழர்கள் புலம்பெயரத் தொடங்கினர். மூன்றில் ஒருபங்கு தமிழர்கள், வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர். பெரும்பாலானவர்கள் இந்தியாவுக்கு வந்தனர் அவ்வாறு அகதிகளாக இந்தியாவுக்கு வந்து சேர்ந்த இலங்கைத் தமிழர்களைத் தங்க வைக்க தமிழகத்தில் 117 முகாம்கள் அமைக்கப்பட்டன. இந்த முகாம்களில் தற்போது ஒரு லட்சம் பேர் உள்ளனர்.

சொந்த நாட்டில் உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதம் இல்லாமல் வந்த அகதிகளுக்கு, இங்கும் எந்த வாழ்க்கை உத்தரவாதமும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது!

தங்களது இனம், மொழி, கலாசாரம் என பல ஒற்றுமைகளுடன் இருக்கும் தமிழகத்தை நம்பி வந்த இலங்கை மக்களுக்கு பெரும்பாலான இடங்களில் ஏமாற்றமே பரிசாகக் கிடைத்திருக்கிறது

உயர் கல்வி படிக்க 2000-ம் வரை தமிழகத்தில் அகதிகளுக்கு மேல் ஒதுக்கீடு 5 சதம் இருந்தது. ஆனால், நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பின் விளைவாக, அந்த ஒதுக்கீடு பறிபோனது. கல்வி மட்டுமன்றி அனைத்துத் துறைகளிலுமே இந்தியாவில் உள்ள பிறநாட்டு அகதிகளைவிட, இலங்கை அகதிகளுக்கு அதிக கட்டுப்பாடுகள் உள்ளதாகவே காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும், அவர்களுக்கு உதவியாக இருந்தவர்களும் அண்மைக்காலமாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக காவல்துறை, முகாம்கள் மீதான கட்டுப்பாட்டையும், கண்காணிப்பையும் தேவைக்கு அதிகமாகவே அதிகப்படுத்தியுள்ளது. இதனால், அகதிகள் ஓரிடத்தில் நிலையாக வேலை செய்து, அன்றாட வாழ்க் கையை கழிக்கவே கஷ்டப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது

அதீத கட்டுப்பாட்டின் ஒரு பகுதியாக அகதிகள் வைத்திருக்கும் வாகனங்களின் ஆவண நகல்களை வழங்க வேண்டும்; வேலை செய்யும் இடத்தின் முகவரியை தெரிவிக்க வேண்டும்; செல்போன் கண்காணிப்பு, வெளியூர் வேலைக்குச் செல்லக் கூடாது என பல கட்டுப்பாடுகளை காவல்துறையினர் இலங்கை அகதிகள் மீது திணித்துள்ளனர்.

இலங்கையில் அந்த நாட்டு ராணுவம் செய்த வேலையை, இந்தியாவில் காவல் துறையினர் செய்கின்றனர். சோதனைகள் குறையவும் இல்லை, மாறவும் இல்லை. ஆள்களும், இடமும்தான் மாறி இருக்கிறது.

இலங்கை அகதிகள் காவல் துறையினரால் மிகவும் கண்காணிப்படுவதால், அவர்களுக்கு வேலை வழங்க தொழில் நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன. மேலும் சில நிறுவனங்கள் வெளிப்படையாகவே இலங்கை அகதிகளுக்கு வேலை கொடுப்பது இல்லை என அறிவிக்கின்றன.இந்தியாவில் குடியேறி உள்ளதுபோல கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு அகதியாகச் சென்ற இலங்கை மக்களுக்கு, இவ்வளவு விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் இருப்பதாகத் தெரியவில்லை
மேலும், இங்குள்ள அகதிகளைவிட, அங்குள்ள அகதிகள் பொருளாதாரம், கல்வி என அனைத்துத் துறைகளிலும் நன்றாகவே உள்ளனர். மேலும், அங்கு அவர்களுக்கு சமுதா யத்தில் அந்தஸ்தும் கொடுக்கப்படுகிறது.இலங்கையில் வாழும் தமிழர்களுக்காக போட்டிபோட்டு குரல் கொடுக்கும் தமிழக அரசியல்வாதிகள், உள்ளூரிலேயே அடிப்படைத் தேவைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு, அடைக்கலம் தேடி வந்த இடத்தில் அடைக்கலம் கிடைக்காமல் வதைக்கப்படும் இலங்கைத் தமிழர்களுக்காக ஏன் குரல் எழுப்பவில்லை என்பதே மக்களின் கேள்வி.

நன்றி - தினமணி

6 பேர் கமெண்டிட்டாங்க:

said...

நம் சகோதரர்கள்னு சொல்லுவோம் ஆனால் அதிகமான இடைஞ்சல்களை நாம்தான் அவர்களுக்கு கொடுப்போம்

என்னத்த சொல்றதுங்க

said...

நாம எப்பவுமே (எட்ட முடிந்தாலும்) நம்ம முதுகை தேய்ப்பதில்லை.

அடுத்தவன் முதுகு அழுக்குக்குதான் அதிக கமென்ட்.

வேறென்ன சொல்ல

said...

பதிவுக்கு நன்றி

said...

//தியாகு said...

நம் சகோதரர்கள்னு சொல்லுவோம் ஆனால் அதிகமான இடைஞ்சல்களை நாம்தான் அவர்களுக்கு கொடுப்போம்

என்னத்த சொல்றதுங்க//

வழிமொழிகிறேன்..

said...

தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்களின் நிலை மிகவும் பரிதாபம்.உலகெங்கிலும் தமிழன் அடித்து விரட்டப்பட்டால் அவன் நாடுவது தமிழ்நாடு ஆனால் அங்கும் இப்படி நடத்தப்பட்டால்?

said...

மிகவும் தேவையான பதிவு.நன்றி.