காந்திஜி இங்கே, காந்தியம் எங்கே? - தினமணியிலிருந்துPhoto Sharing and Video Hosting at Photobucketஇந்தியாவுக்கு பெருமை அளிப்பவை எவை? இமயமும் குமரியுமா, கங்கையும் காவிரியுமா, வங்காள விரிகுடாவும் அரபிக் கடலுமா? - இல்லை. இந்நாடு பழங்காலத்தில் முனிவர்களாலும் ஞானிகளாலும் பெருமை பெற்றது. புத்தரால் புனிதமடைந்தது; மகாத்மாவால் மகிமை பெற்றது.

காந்தியடிகள் மறைந்தபோது அறிவியல்மேதை ஐன்ஸ்டீன் கூறினார்: ""இத்தகைய ஒரு மனிதர், இந்த மண்ணில் நடமாடினார் என்பதை வருங்காலத் தலைமுறையினர் நம்புவது கடினம்...'' ஆம், அவர் அப்படி வாழ்ந்தார். எளிமை, இரக்கம், தொண்டு, தியாகம் இவற்றின் மொத்த வடிவம், மதங்களைக் கடந்த மனிதநேயம், அகிம்சை, வாய்மை - அவரது ஆயுதங்கள்; ஏழை மனிதர்களுக்காக உழைப்பதே அவரது வழிபாடு.

"உலகுக்கு உபதேசிக்க, புதிதாக என்னிடம் எதுவும் இல்லை. மலைகள் எவ்வளவு பழைமையானவையோ அவ்வளவு பழைமையானவை சத்தியமும் அகிம்சையும்...'' என்றார் அவர்.

ஆண்டாண்டாக அவரது பிறந்தநாளைக் கொண்டாடும் நாம், அவரது கொள்கைகளை எண்ணிப் பார்க்கிறோமா? அவரது பெயரால் ஆட்சிக்கு வந்தவர்கள் அவரது கொள்கைகளைச் செயல்படுத்த நடவடிக்கை எடுத்தது உண்டா? அகிம்சையும் சத்தியமும் அவர் பிறந்த மண்ணில் உயிரோடு இருக்கின்றனவா?

நாடெங்கும் குண்டுவெடிப்பு, வன்முறை, படுகொலைகள், கற்பழிப்பு, மர்மச்சாவு, அரசே நடத்தும் மதுக்கடைகள், கள்ளச்சாராயம், சட்டத்தை மீறும் காவல்துறை, நீதியே விலைபோகும் நிலை } இவற்றைக் காணும் நல்லவர்களின் மனம் பதறாமல் என்ன செய்யும்?

அடுத்த நாடுகளின் மீது தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்த விரும்பும் அமெரிக்காவுடன் இந்தியா அணுசக்தி ஒப்பந்தம்; ஆதிபத்திய நாடுகளுடன் இந்திய கடற்பரப்பில் கூட்டுப்பயிற்சி; உலகத்துக்கே அகிம்சையை உபதேசித்த இந்தியா, இப்போது அன்பையும் அமைதியையும் இப்படித்தான் நடைமுறைப்படுத்துகிறது.

அணுஆயுதங்களின் அச்சுறுத்தலில் இருந்து உலகைக் காக்கவல்ல பாதுகாப்புக் கேடயம் அகிம்சையே. இதை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.

இரண்டாம் உலகப் போரின் முடிவில் அணுகுண்டால் ஹிரோஷிமா அழிந்தபோது காந்திஜி, சலனமின்றி இருந்தார். அவர் மனம் கூறியது: ""இப்பொழுது உலகம் அகிம்சையைக் கடைப்பிடித்தாலன்றி மனித இனத்தின் கதி தற்கொலையிலேயே போய் முடியும்...''

மதத்தின் பெயரால் நாடு பிளவுபட்டபோது, மகாத்மா கொண்ட கவலை சரிதான் என்று இப்போது நடக்கும் சம்பவங்கள் நிரூபிக்கின்றன. இன்று நடக்கும் பயங்கரவாதச் செயல்களே வருங்கால வரலாறாக மாறி, கசப்புணர்வே தொடர்கதையாகும்.

அன்று நவகாளியில் நடைபெற்ற படுகொலைகள் நாடெங்கும் இன்றும் தவணை முறையில் தொடர்கின்றன. அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதை அரசு எவ்வளவு காலத்துக்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறது?

ஆறுதல் கூறுவதாலும் இழப்பீடு அளிப்பதாலும் இறந்த உயிர்களை மீட்டுவிட முடியுமா?

""என்னுடைய வீட்டின் எல்லாப் பக்கங்களும் சுவர்களால் மூடப்படுவதையும், சாளரங்களால் அடைக்கப்படுவதையும் நான் விரும்பவில்லை. என் வீட்டிற்குள் எல்லா நாடுகளின் பண்பாடும் இயல்பாய் பரவ வேண்டும் என எதிர்பார்க்கிறேன். இதில் எதுவும் என்னை முழுமையாக அடிமைகொள்ள நான் அனுமதிக்க மாட்டேன். என் இல்லத்தில் இறைவனின் மிக எளிய படைப்பிற்கும் இடம் உண்டு. ஆனால், நிறம், மதம், இனத்தால் எழும் தற்பெருமைகளுக்கு இடமில்லை...'' என்பது காந்தியடிகள் கருத்து.

மக்களை நெறிப்படுத்த உருவாக்கப்பட்ட மதங்கள், மார்க்கங்களை இன்று மனிதர்களை வெறிப்படுத்தப் பயன்படுத்தலாமா? அன்புமயமான உலகத்தை வம்புமயமாக மாற்றலாமா? சொர்க்கத்திற்கு வழிகாட்டுவதாகச் சொல்லிக் கொண்டு நரகத்தை நோக்கியே நடை போடலாமா?

கடவுளுக்காகப் போரிடுவதாகக் கூறுவதும், மதத்துக்காகத் தியாகம் செய்வதாகப் பேசுவதும் இறைவனைச் சிறுமைப்படுத்தும் செயல்கள். பிரபஞ்சத்தையே படைத்திட்ட, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு சக்தி என்று ஒத்துக்கொண்டுவிட்டு, அவருக்காக அழிவுச் செயலில் ஈடுபடுவது அறிவுடைமையாகுமா?

காந்தியடிகள் தாழ்த்தப்பட்ட மக்களை மிகவும் நேசித்தார். "கடவுளின் குழந்தை' என்ற பொருள்தரும் "ஹரிஜன்' என்ற பெயரை வழங்கி, அப்பெயரிலேயே அவர்களை அழைத்தார்; அந்தப் பெயரில் ஒரு பத்திரிகையும் நடத்தினார்.

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு அவர்களின் நிலை என்ன? அவர்களுக்கென இடஒதுக்கீடு இருந்தும், அவர்களுடைய நிலையில் பெரிய முன்னேற்றம் இல்லை. தீண்டாமையும் சாதி வேற்றுமையும் தொடர்கின்றன. பல இடங்களில் இன்னும் தேநீர்க் கடைகளில் இரட்டைக்குவளை முறை நீக்கப்படவில்லை. அத்துடன் அரசியல் அதிகாரமும் அவர்களை நெருங்க விடவில்லை.

"மக்களாட்சியில் அதிக பலம் வாய்ந்தவர்களுக்கு இருக்கும் அதே வாய்ப்பு, பலவீனமானவர்களுக்கும் கிடைக்க வேண்டும். இதுவே மக்களாட்சியைப் பற்றி நான் கொள்ளும் கருத்து. ஆனால் அகிம்சை வழியினால் அன்றி, இதை என்றுமே அடைந்துவிட இயலாது...'' என்று சொன்ன அவரது கூற்று காற்றிலே கரைந்தது.

1947 அக்டோபர் 2. அவரது வாழ்நாளில் கடைசி பிறந்தநாள். தேசப்பிதாவுக்கு தங்கள் அன்பையும் வாழ்த்தையும் தெரிவிக்க நாள் முழுவதும் அவரது ஆதரவாளர்களும், நண்பர்களும், பார்வையாளர்களும் வந்தபடி இருந்தனர். அயல்நாட்டுத் தூதரக அலுவலர்களும் தங்கள் அரசுகளின் வாழ்த்துகளைத் தெரிவிக்க வந்தனர்.

ஆனால் அவர் மனதில் மகிழ்ச்சியில்லை. துயரமே குடிகொண்டிருந்தது. "வகுப்புக் கலவரம் தொடர்ந்தபடி இருக்கிறதே!' என்ற கவலை. அன்று மாலை பிரார்த்தனைக் கூட்டத்தின் இறுதியில் அவர் பேசினார்:

""இன்று என்னுடைய பிறந்தநாள்; ஆனால் எனக்கு ஒரு துக்ககரமான நாள். நான் இன்னும் உயிரோடு இருப்பதற்காக வியப்பும் வெட்கமும் அடைகிறேன். நாட்டிலுள்ள கோடிக்கணக்கான மக்கள் என்னுடைய வார்த்தையை மதித்தனர். ஆனால் இன்று நான் சொல்வதை யாரும் கேட்கத் தயாராக இல்லை...''

தாம் இருக்கும்போதே தம்முடைய பேச்சை யாரும் கேட்கவில்லை என்ற வருத்தம் காந்திஜிக்கு இருந்தது. இப்போது கேட்க வேண்டுமா? அவரது கொள்கைகள் தங்கள் ஆடம்பர வாழ்க்கைக்குத் தடையாக இருப்பதாகப் பலர் எண்ணுகின்றனர். ஆனால் அவரது பெயரும் - புகழும் தேர்தல் நேரங்களில் தேவைப்படுகிறது. பொய் அரசோச்சும் இடத்தில் உண்மைக்கு என்ன வேலை?

நம் தேசப்பிதா இப்போது எங்கும் இருக்கிறார். அரசு அலுவலகங்களில் புன்னகை செய்தபடி சுவரில் மாட்டப்பட்டுள்ள படங்களில் இருக்கிறார். ஆனால் அவரது கொள்கையான காந்தியம் எங்கே? தேடுவோம், தேடிக்கொண்டே இருப்போம்!

0 பேர் கமெண்டிட்டாங்க: