24.09.2006
காலை 7.30 க்கு பிளைட், நாம இரண்டு மணி நேரம் முன்னாடியே போயிடணுமான்டா? வெளிநாடு செல்ல வேண்டும் என்கின்ற வெறியோடு பலரிடம், சேகரித்த தகவல்களை என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தான் என் நண்பன் – அவனுக்கு மட்டும் வாய்ப்புகள் தட்டிச்சென்றது ஏன், என்று தெரியவில்லை?
சோப்பு, பவுடர் எல்லாம் அதிகமாவே எடுத்துக்கோ, அங்க பயங்கர விலை! விலைய பார்த்தா இதையெல்லாம் யூஸ் பண்ண்வே தோணாது என்ற நண்பனிடம்,அதனாலதானே அவங்க இந்த நாட்டு காச விட நாலு மடங்கு அதிகமா தராங்க! என்று கிண்டலடித்துக்கொண்டிருந்தான் மற்றெருவன்!
இந்த அலம்பல்களுக்கிடையே அரை மனத்துடன் அரபு நாட்டை நோக்கிய என் பயணத்தை ஆரம்பித்தேன் இத்தனைக்கும் எனக்கு அரபு நாட்டில் தான், சென்று பணிபுரிய வேண்டும் என்று கொள்கை வெறியொன்றும் கிடையாது!
என் நேரம், என் ஸ்பான்சரோட கெட்ட நேரம் அவ்வளவுதான்!
டெலிபோன் இண்டர்வீயுலேயே நான் ஒ.கே ஆக அடுத்த நாளே மெயிலில் மிதந்து வந்த ஆபர் லெட்டர பார்த்த முதல் கொஞ்சம் சந்தோஷம், என்னை விட அதிகம் சந்தோஷப்பட்டது என் நண்பர்கள்தான்!
பஹரைன் வந்து வேறு பிளைட் மாறி வர வேண்டும் ஒண்ணும் பிரச்சனை இருக்காதுடா? நீ ஏர்போர்ட்ட விட்டு வெளிய போகமுடியாது! அதுவுமில்லாம, நீ எங்கயாவது சுத்திக்கிட்டு இருந்த கூட, அவங்களே வந்து அழைச்சிட்டு போயிடுவாங்கன்னு சொன்ன தைரியம் தான்!
ஆனால் என் நேரம் கல்ப் ஏர்’ன் வழக்கமான சேவையின் படி அந்த பிளைட் ரத்தாகி அடுத்து 6 மணி நேரம் கழித்துதான் பிளைட்!
இது கல்ப் ஏரின் தந்திரமான நடவடிக்கைகளாம். கொஞ்சம் கொஞ்சமாக ஆளுங்களை சேர்த்து – அவர்களின் அட்டவணைப்படியான விமானத்தை,ரத்து செய்து மொத்தமாக ஒரு பிளைட்டில் போட்டு அள்ளிச்செல்கின்றனர்
முடிவில் வந்து இறங்கியாச்சு! கத்தாருக்கு! வரவேற்க கூட்டம் குழுமியிருக்கும் போது, வரவேற்க யாருமே இல்லாமல் யாரையும் பார்க்கவும்,தோணாமல் குனிந்து கொண்டே செல்லும் போது எல்லோருக்கு ஏற்படும் அனுபவமே அன்று எனக்கும் நிகழ்ந்தது!

எனக்கு தெரியும் கண்டிப்பாக யாரும் வந்திருக்கமாட்டர்கள் பிளைட் ரத்தானது தெரிந்திருக்காது என்பதால் !
வாசலில் வந்து அமரும்போது, ரிடர்ன் டிக்கெட்டோடு நாம் ஊருக்கே போக வாய்ப்பு இருந்தா போடா..! நீங்களும் உங்க வேலையும்ன்னு போய்க்கிட்டே இருக்கலாம்ன்னு, தோணுச்சு..!
கிட்டதட்ட 2 மணி நேரத்துக்கு பிறகு மந்தூப் என்று சொல்லப்படும் பி.ஆர்.ஒ வந்து சேர்ந்தார்! கையில் என் பெயரிட்ட பேப்பர் வைத்துகொண்டு
சென்று கொண்டிருந்தவரை நான் கண்டு பிடித்து அழைத்து வந்தேன்! பின் அவர் கொண்டு வந்து கம்பெனி குவார்ட்டர்ஸ்லில் விட்டுச்செல்ல,எனக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறையை திற்ந்து படுக்கைகளுக்குரிய ஏற்பாடுகளை செய்திருந்த பெங்காலியும் விடைப்பெற்றுக்கொள்ள..,
அதுவரையிலும், எனக்கு ஒன்றும் புரியாமல் இருந்து அப்போதுதான் தெரிந்தது 24 மணி நேரத்திற்குள் சொந்தங்களிடமிருந்து, தனித்து விடப்பட்டது!
அப்படியே உட்கார்ந்து எதோ நினைத்துகொண்டிருந்தேன், வீட்டு ஞாபகம் மாறி மாறி வந்து கொண்டிருந்தது! இங்க நான் எப்படி இருக்கப்போறேன்
பேச்சு துணைக்கு கூட ஆள் இல்லையே! அந்த பெங்காலிக்கிட்ட பேசுறதுக்கும் இந்தி தெரியாதே!

அப்போதுதான் பக்கத்து ரூமிலிருந்து,கதவு திறக்கும் சப்தம்!
நல்ல தூக்கத்திலிருந்து, முழித்தவாறு வந்த அந்த நண்பர் கேட்டார் - தமிழில்,
எப்ப வந்தீங்க சாப்பிட்டீங்களா?
கூட இருந்த மற்றொருவர் பழச்சாறு பாட்டிலை கொண்டு வந்து கொடுத்து,
எடுத்துங்கோங்க மாஸ்டர்...!!!