கலர் கோழி

பஞ்சு போன்ற மேனி அதன் பாதங்களை நம் உள்ளங்கைகளில் எடுக்கும்போது உண்டாகும் சிலிர்ப்பு, உற்சாகம் அல்லது குதூகலம்!

‘எல்லாம் சில காலம்’, என்னும் தத்துவம் அந்த பிஞ்சுகளுக்கு தெரியாது! ஆனால் பிஞ்சு பருவத்திலேயே நமக்கு அந்த தத்துவத்தை உணர்த்த போடும் வேஷம் தான் கலர் கோழிகள்!

Photo Sharing and Video Hosting at Photobucket


கோயில் திருவிழாக்களில், பள்ளிக்கூட வாசல்களில், தட்டி அல்லது பட்டி அடைத்து கிடக்கும் அந்த பிஞ்சுகளின் கூட்டத்தை, காண்பவர்கள் அனைவரையுமே, கவர்ந்திழுக்க வைக்கும் காட்சிதான்!

சில நேரங்களில் கூடைமேல், கூடைமேல், கூடை வைத்து கூவி வருபவனின் ‘கலர்கோழி’ ‘கலர்கோழி’ எனற குரல், அவனுக்கு அன்றாட வருமானம் ஆனால், அக்கோழிகளுக்கு அவலக்குரல்தானே!

சிறு வயதில் எனக்கு மிகவும் பிடித்தது இந்த கலர் கோழிகள் எனக்கு மட்டுமா? கோழி விற்பவனைக்கண்டால், தெருவே அதிரும்..!

எப்படியாவது ஒரு மாதமாவது கோழிக்குஞ்சுகளை வளர்த்து பெரியதாக்கி அதன் மூலம் கிடைக்கும் முட்டையையே மூலதனமாக்கி நாம் பெரும் காசு சேர்க்கவேண்டுமென்பது என் இளம் கால கனா!

ஆனால் ஒரு வாரம் வைத்து வளர்ப்பதற்கே நான் படும் பாடு நான் மட்டுமல்ல, அந்த கோழியும்தான்! பள்ளி செல்லும் வரை என கண் காணிப்பில் இருக்கும் அந்த கோழிக்குஞ்சுகள் பின் கூண்டில் அடைக்கப்பட்டு உத்திரத்தில் தொங்கவிடப்படும்! (அப்பத்தான் அது பத்திரமா இருக்கும் – இது பக்கத்து வீட்டு பையன் எனக்கு சொன்ன அட்வைஸ்!)

மாலை பள்ளி முடிந்து வீடு திரும்புகையில் பாட்டி வீட்டு வாசலிலேயே சொல்லிவிடுவாள்!

சின்னபயலே..! நான் செட்டியாரு கடைக்கு போய்ட்வரதுக்குள்ளயே அந்த பாழாப்போன பூனை உள்ளாற பூந்து அதம் பண்ணிட்டு போயிடுச்சிடா!

கொஞ்சம் நேரம் சேதமடைந்து கிடக்கும் அந்த கூண்டு கலர்கோழிகளின் ரோமத்தின் எச்சங்கள், என அதையே பார்த்துகொண்டிருந்துவிட்டு, டேய் பூனை..! உன்னை கொல்றதுக்கு ஒரு ஆளு வருவான்டா! என மனதுக்குள் சவால்விட்டப்படி உறங்கிப்போவேன்..!

0 பேர் கமெண்டிட்டாங்க: