Showing posts with label அம்மா. Show all posts
Showing posts with label அம்மா. Show all posts

அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்







உலகின் மூலை முடுக்குகளில்,

வாழ்க்கையின், நம்பிக்கை கீற்றின்;

ஏதோ ஒரு நுனி பிடித்து வாழ்ந்துக்கொண்டிருக்கும்;

உணர்வால் அன்னையரான அனைவருக்கும்,

எம் உள்ளம் நிறைந்த அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் !

முறுக்கு!


பாட்டிக்கு தெரிந்த அளவிற்கான சமையல் வித்தைகள் அம்மாவிற்கு கொஞ்சம் கஷ்டமானது அதுவும், முறுக்கு சுடுவதில் முதலில் சாதாரணமான விசயமாக தோன்றும் அனைத்துமே கடினமான வேலைகள்தான்.

மாவு பதமாய் தயாரிப்பதிலிருந்து, மொறுமொறுவென்று இருக்க கொஞ்சம் மாவில் நெய் அல்லது வெண்ணை சேர்ப்பது,மாவு பட்டதும் எண்ணெய் வெடிக்காமல் இருக்க,கொஞ்சம் புளி போடுவது போன்ற எந்த சின்ன விசயங்களுமே கூட தன் மகள் செய்ய கூடாது என்று தன் வாழ்நாளினை எங்களுடனே கழித்த பாட்டிக்கு ஒரு தெளிவான எண்ணம். - பெற்றவர்கள் என்றைக்குமே தன் மக்கள் கஷ்டம் அடையக்கூடாது என்ற சிந்தனையில்தானே இருக்கிறார்கள்.

தீபாவளி வருவது என்ற சேதி கேட்ட நாள் தொடங்கி நாள் எண்ணி சரியாக 10 நாட்களுக்கு முன்பே மாவு அரைத்து ஒரு வாரம் முன்பே வீட்டில் முறுக்கு தினப்படி தீனியாகிவிடும். நினைத்து நினைத்து முறுக்கு சுட்டு பெரிய பெரிய சில்வர் வாளிகள் அடுக்குவதை பாட்டிக்கு பொழுபோக்கானது அந்த காலம்.

பாட்டிக்கு பிறகு தனித்துத்தான் விடப்பட்டிருந்தார் அம்மா. பெற்ற மக்கள் திசைக்கொன்றாய் சென்று விட தனக்கென செய்து கொண்டு வாழ அத்தனை விருப்பமில்லா வாழ்க்கை - எல்லா பெற்றோர்களுமே இந்த காலகட்டத்தினை கடந்திருக்க கூடும் அல்லது அடைந்திருக்ககூடும்!

அவ்வப்போது சென்று வரும் அண்ணன் அக்காவின் விசிட்டில் கொஞ்சம் கலகலப்பாகும் வீடு வருடத்திற்கொரு முறையாகிப்போனது எனது விடுமுறை விசிட்டில் கொஞ்சம் அதிக ஆர்வத்தையும் அம்மாவுக்கு கொண்டு வரும். தனக்கே தெரிந்த முறையில் சமையல் செய்து போடுவது தினசரி வேலையாகிப்போக,அவ்வப்போது விருப்பமாய் சொல்வதையும் சிரமம் பாராமல் செய்து முடித்து சாதித்ததில் நான் நன்றாக தின்றபோது மனம் நிறையும்.

அதுவும் இந்த விடுமுறையில் போகும்போதே ஒரு சின்ன்ன லிஸ்ட் (நம்புங்கப்பா சின்ன லிஸ்ட்தான் அது..!) கொண்டு போய் முன்பே சொல்லிவிட்டதால் லிஸ்ட் சரிபார்க்கவேண்டிய சிரமமின்றி தினமும் காலை உணவு வயிற்றையும் நிரம்பி கொஞ்சம் வெயிட்டையும் கூட்டியது உண்மைதான்.

என்னடா செஞ்சு தரட்டும்...? என்ற அம்மாவின் குரல் கேட்டு அதிகம் சிரமமேற்படுத்த கூடாது என்ற எண்ணத்தோடு “அதெல்லாம் வேணாம்மா எல்லாம் அங்க கிடைக்குது வேற என்ன வாங்கிட்டா போச்சு...! என்றவன் பதிலை, ஏற்றுகொண்ட பாணியோடு முறுக்கு செஞ்சு தரேன் எடுத்துட்டு போன்னு சொல்லிய அம்மா அன்றைக்கே அதற்கான பணிகளை ஆரம்பித்து,மின்சார கட் ஆகும் நேரம் கணித்து முன்பே சென்று மாவு மிஷினில் அரைத்த மாவோடு அரங்கேறியது முறுக்கு சுடும் படலம்!

நான் எதிர்ப்பார்த்ததை போலவே எண்ணெய் வெடிக்கும் சத்தமும்,அதை தொடர்ந்து அம்மாவின் குரலும், ”ச்சே...! எப்ப நான் முறுக்கு சுட போனாலும் இது ஒரு தொல்லை! எனக்கு என் அம்மா ஒழுங்க சொல்லிக்கொடுத்திருந்தா நல்லா இருந்திருக்கும்” என்ற அலுப்போடு,எதிர்வீட்டு டீச்சரின் ஆலோசனையும் கை கொடுக்க, நானும், கொஞ்சமாய் சுட்டு கொடும்மா..! என்ற ஆதரவு குரலில் ஒரு வழியாய் பார்சல் செய்ய ரெடியானது முறுக்கும் அதனோடு கூடவே, ஓலை பக்கோடா!





@ தோஹா

பார்சல்கள் பிரிக்கப்படாமல் 4 நாட்கள் கழிந்த போதுதான் முறுக்கு மெல்ல ஞாபகப்படுத்தியது! அதே சமயத்தில் இன்னொரு மனம் வேண்டாம் இப்ப சாப்பிட்டா தீந்துடும்! என்று நாவினை கட்டுப்படுத்த,காமிராவில் மட்டும் தின்று ரசித்தேன்.

வந்திருக்கும் கொஞ்சம் முறுக்கில் கொஞ்சூண்டு மட்டும் இதுவரை காலியாகியிருக்கிறது!

இன்னும் காலம் இருக்கிறது...!