Showing posts with label நூல். Show all posts
Showing posts with label நூல். Show all posts

போய் வருகிறேன்.!

துள்ளித்துடித்துக்கொண்டிருந்த போராட்ட இதயம், மெல்ல மெல்ல அமைதி அடைந்து கொண்டிருக்கிறது.

அவன் இந்த முடிவை விரும்பவில்லை

இந்த முடிவு அவனை விரும்புகிறது

அடர்ந்த காடும்,பசுமை நிறைந்த மரங்களும்,மணம் பரப்பும் மலர்களும்,சலசலவென ஒடிக்கொண்டிருக்கும் நதியும், அந்த நதியின் கரையிலுள்ள அழகிய சிறு இல்லமும்,அமைதியை நாடும் அவன் கண்களுக்கு தெரிந்துகொண்டிருக்கின்றன.

அவன் இனி,சுதந்திரம் நிறைந்தவன்.

அவன் இனி,தனி மனிதன்.

ஆனால்...

எந்த மூலையிலிருந்தாலும்,அவன் உங்களையே சிந்தித்துக்கொண்டிருப்பான்

பிரிவின் துயரம் அவனை உறுத்திக்கொண்டே இருக்கிறது

அவன் எப்போதும் உங்கள் நண்பன்

நிச்சயமாக அவன் உங்களை மறக்கமாட்டான்.

எப்போதாவது தற்செயலாக நீங்கள் அவனை சந்திக்க நேர்ந்தால்,அவன் கண்களில் கண்ணீர் வரும்.

அந்த கண்ணீர்,அவன் மாறவில்லை என்பதைக் காட்டும்.

எந்த அமைதியிலிருந்து ஒரு நாள் அவன் தப்பியோடி வந்தானோ,அந்த அமைதியிடமே அவன் மீண்டும் போய் சேர்ந்துவிடுகிறான்.

உலகம் உருண்டை என்பது எவ்வளவு பெரிய உண்மை.

ஒவ்வோர் மனிதனும் தான் புறப்பட்ட இடத்திற்கு ஒரு முறை திரும்பி வருகிறான்.

பயம் பிறக்கவில்லை.

பழிபாவங்கள் தோன்றவில்லை.

பரபரப்பில்லை.

இங்கேயிருந்து அங்கே,அங்கேயிருந்து இங்கே என்று இதயம் ஒடவில்லை.

இன்றும் நாளையும் ஒன்றேபோல் தோற்றமளிக்கின்றன.

ஏறும் போது இருந்த மயக்கம் இறங்கும்போது இல்லை.

அது வேண்டும் இது வேண்டுமென்கின்ற ஆசை முடிந்துவிட்டால், வாழ்க்கை சுவை நிரம்பியதாக ஆகிவிடுகிறது.

வெற்றிகளால் ஏற்படும் மயக்கங்களில் ஏ, தெய்வமே என்னை வீழ்த்திவிடாதே!

தோல்விகளால் ஏற்படும் மயக்கங்களில் ஏ, தெய்வமே என்னை துவள வைக்காதே!

ஆசைகளால் ஏற்படும் பரபரப்பில் ஏ,தெய்வமே என்னை ஆழ்த்திவிடாதே!

பயத்தால் ஏற்படும் கோழைத்தனத்தில் ஏ,தெய்வமே,என்னை பதுங்கவைக்காதே!

-கவியரசு கண்ணதாசன்

நன்றி :- வனவாசம்
வானதி பதிப்பகம்

சென்னை புத்தக கண்காட்சி - 2008

வருடா வருடம் ஜனவரி மாதத்தில் பெரும் கொண்டாட்டமான ஒரு திருவிழா போன்று நடைப்பெறும், சென்னை புத்தக கண்காட்சி 2008ம் ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி 4 -வெள்ளிகிழமை தொடங்கி சுமார் 14 நாட்கள் 17 நிறைவுப்பெறும் வகையிலான ஏற்பாடுகளை அமைப்பாளர்கள் செய்து வந்தாலும் இதுவரையிலும் அந்தளவுக்கு ஊடகங்களில், ஊக்கம் அளிக்கும் வகையிலான, செய்திகள் ஏதும் காணப்படவில்லை இந்த எண்ணங்கள் தவிர

சில வருடங்களுக்கு முன்பு நான் சென்று சில புத்தகங்களை பெற்றதும், சில கடைகளுக்கு சென்றதும் சில கடைகளை கண்டதும், இன்றும் விழிகளில் நிழலாடுகின்றது! இந்த முறையும் கண்டிப்பாக செல்லவேண்டும் என்று மனதுக்குள் நம்பிக்கை வைத்துள்ளேன்!

இதே போன்றே மிகுந்த நம்பிக்கையோடு தமிழக முதல்வர் அவர்கள் சென்ற 2007 புத்தக கண்காட்சியின் போது அறிவித்திருந்த புத்தக் கண்காட்சிக்கென நிரந்தர இடம் பற்றிய நிலைப்பாடுகள் எந்தளவில் இருக்கின்றன, என்று இன்னும் கூட தெரியவில்லை (சரியாக இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில்...?!)

இந்த வருடமும் மக்களின் நல்வரவேற்புடனும்,புத்தக ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீனி போடும் வகையிலும் கண்காட்சி அமையும் என்ற எதிர்பார்ப்போடு...!

படங்கள் நன்றி :- திண்ணை & தமிழ்நாடு அரசு