பள்ளி பார்க்காத + பாலகர்கள் - தினமணியிலிருந்து....!


தமிழகத்தில், எய்ட்ஸ் நோய் பரவுவது கட்டுப்பாட்டு மையத்தால் நிகழ்த்தப்பட்டுள்ள விழிப்புணர்வுப் பிரசாரங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது வரவேற்கப்படவேண்டிய விஷயம்.

எய்ட்ஸ் பாதிப்பு என்பது பெரியவர்களை விட குழந்தைகளுக்கு அதிக சாபக்கேடான ஒன்று. பெரியவர்கள் முறையற்ற உறவுகளால் நோய் தாக்கி பாதிக்கப்படுவது கூட அவர்களது செயலுக்குக் கிடைத்த தண்டனையாக எடுத் துக் கொள்ளலாம். ஆனால் தவறு செய்த கணவனால் பாதிக்கப்படும் மனைவி, மருத்துவர்களின் அலட்சியத்தால் எச்ஐவி பாசிடிவ் கொண்ட ரத்தம் செலுத்தப்பட்டவர்கள், பெற்றோர் மூலம் நோய் பாதிக்கப்பட்ட குழந் தைகள் போன்றோர் உண்மையிலேயே பரிதாபமானவர்கள்.

குழந்தைகளுக்கு எய்ட்ஸ் நோய் தாக்கும் பட்சத்தில் அந்த இளவயதிலேயே அவர்களது வாழ்நாள் எண்ணப்படுவது தெரியாமலே வளரவேண்டிய சூழல். குழந்தைகளுக்கு 7 முதல் 8 வயது வரை தங்களுக்குள்ள பாதிப்பு பற்றி தெரியாமலே கூட இருக்கும். அதனால் அவர்களுக்கு மனதில் பாதிப்பு மிகுந்திருக்காது. ஆனால் இன்றைய கல்வி முறையில் 5 அல்லது 6-ஆம் வகுப்புகளிலேயே அறிவியல் பாடங்களில் இது போன்ற விஷயங்கள் விளக்கப்படுவதால் குழந்தைகள் தங்களுக்குள் உள்ள வேற்றுமை, ஒற்றுமைகளை கேட்டது, படித்ததுடன் ஒப்பிட்டு ஆராய ஆரம்பித்து விடுகிறார்கள்.

எனவே நோய் பாதிப்பைவிடவும் மனதில் ஏற்படும் குழப்பமே அவர்களது வாழ்வுக்கு முதல் எதிரியாய் மாறுகிறது. இதனால் மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் குழந்தைகள் அடுத்தவர்களை விட்டு ஒதுங்கிவிடுவதும் உண்டு. அவர்களின் விளையாட்டுத்தனம் போய் மனநிலை எதிலும் ஒன்றாமல் தனித்து விடப்பட்டதாக நினைத்து தடம் மாறவும் செய்கின்றனர்.

இந்நோய் தாக்கப்பட்ட பள்ளி செல்லும் குழந்தைகள் பக்கத்திலிருக்கும் குழந்தைகளிடம் இருந்து அதிக நோய்த் தொற்றுகளைச் சம்பாதிக்கும் வாய்ப்பும் அதிகம். இவர்களுக்கு வியாதி தாக்கக் கூடிய தன்மை அதிகம் என்பதால் சாதாரணக் குழந்தைகள் நோய்த் தொற்றால் வெறும் சளித் தொல்லைக்கு ஆளானால் எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளுக்கு சளியுடன் உபரியாக நிமோனியாவும் (காய்ச்சல்) தொற்றிக் கொள்ளும்.

தோல் வியாதிகள் இவர்களுக்கு பெருந் தொல்லையாய் இருக்கும் என்பது அச்சுறுத்தும் உண்மை. சாதாரணக் கொசு கடித்தால் கூட இவர்கள் அரிப்பு, புண், ரத்தம் அல்லது சீழ் வடிதல் எனப் பாதிக்கப்படுவது பரிதாபம். எய்ட்ஸின் முக்கியத் தாக்கமே நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைப்பது தான் என்ப தால் அரிப்பு, புண் போன்றவை சில நேரங்களில் தொடர்கதையாகும் வாய்ப்புமுண்டு.

மேலும் பள்ளிகளில் இவர்கள் எய்ட்ஸ் பாதித்த குழந்தைகள் எனத்தெரிந்தால் அனேகமாக ஒதுக்கப்படுகிறார்கள். பல பள்ளிகளில் இவர்களைச் சேர்த்துக்கொள்வதே கிடையாது. இதனால் இவர்களுக்கு கல்வி என்பது கேள்விக்குறிதான்.

இக் குழந்தைகள் சந்திக்கும் அடுத்த பிரச்சனை அடைக்கலம். அனேகமாய் இக்குழந்தைகள் பெற்றோரிடமிருந்தே நோயைப் பெறுவதால் அவர்களின் பெற்றோரும் இறுதி வரை குழந்தையைப் பேண முடியாமல் இடையிலேயே மரணத்தைத் தழுவிவிடும் நிலையில் குழந்தைகள் அனாதை ஆக்கப் படுகிறார்கள். இந்நிலையில் குழந்தைகளின் தாத்தா, பாட்டி என யாராவது அடைக்கலம் கொடுத்தால் மட்டுமே உண்டு. ஆனால் அவர்களும் பொருளாதார நிலையில் பின்தங்கியிருக்கும் பட்சத்தில் குழந்தையின் நிலை அதோகதிதான்.

பெற்றோரை இழந்த, நல்ல நிலையில் உள்ள குழந்தைகளையே கண்டு கொள்ள ஆளில்லாத இன்றைய நிலையில் கூடுதலாக எய்ட்ஸ் தாக்கத்துக்கு ஆளான குழந்தைகள் என்றால் உறவுகள் சொல்லாமல் ஓடிப் போவதைத் தவிர்க்க முடிவதில்லை. இவர்களைப் போன்றோரை சேர்த்துக் கொள்ள சேவை இல்லங்களும் குறைந்த அளவிலேயே உள்ளன.

இவர்கள் சந்திக்கும் அடுத்த மிக முக்கியப் பிரச்னை மருத்துவம். இவர்களை அனேக தனியார் மருத்துவமனைகள் சேர்த்துக் கொள்ளத் தயங்கும் நிலை இன்றும் உள்ளது கண்டிக்கத்தக்க ஒன்று. பொருளாதார நிலையில் பின்தங்கியோர் அரசு மருத்துவமனைகளை நாடத் தயங்குவதில்லை. ஆனால் பணம் படைத்தோர் இங்கு வரத் தயக்கம் காட்டுகின்றனர்.

இக்குழந்தைகளை அரவணைக்க குடும்ப அமைப்பிலான இல்லங்கள் அமைப்பது, சமூகத்திலிருந்து ஒதுக்காத நிலையை ஏற்படுத்துவது, பள்ளிகளில் அங்கீகாரம், தனியார் மருத்துவமனைகளில் உரிய மருத்துவம், உறவுகள் விலகாமை, நோய் குறித்த முழுமையான விழிப்புணர்வு போன்றவற்றால் இவர்கள் மனப் புழுக்கம் இல்லாமல் எஞ்சிய நாள்களையாவது வாழ்ந்து பார்க்க வழி செய்வோம்!

2 பேர் கமெண்டிட்டாங்க:

said...

//பெரியவர்கள் முறையற்ற உறவுகளால் நோய் தாக்கி பாதிக்கப்படுவது கூட அவர்களது செயலுக்குக் கிடைத்த தண்டனையாக எடுத் துக் கொள்ளலாம். ஆனால் தவறு செய்த கணவனால் பாதிக்கப்படும் மனைவி, மருத்துவர்களின் அலட்சியத்தால் எச்ஐவி பாசிடிவ் கொண்ட ரத்தம் செலுத்தப்பட்டவர்கள், பெற்றோர் மூலம் நோய் பாதிக்கப்பட்ட குழந் தைகள் போன்றோர் உண்மையிலேயே பரிதாபமானவர்கள்.//

உண்மைதான்:)

said...

பரிதாபமான நிலை ! மனசுக்கு வருத்தமாக இருக்குப்பா .