Showing posts with label விலங்கு. Show all posts
Showing posts with label விலங்கு. Show all posts

அலுக்கவைக்காத ஆமைக்கதை - ரீப்பிட்டேய்!

முன்னொரு காலத்தில் "வேகம் மிக்கவர் யார்?" என்று ஆமையும் முயலும் விவாதித்துக்கொண்டன. ஒரு பந்தயத்தின் மூலம் அந்த விவாதத்திற்கு முடிவு கட்டத் தீர்மானித்தன. பந்தயத்தில் வேகமாக ஓடத் தொடங்கிய முயல்.... ஆமை நெடுந் தொலைவு பின் தங்கியிருப்பதைப் பார்த்து.... மரத்தடியில் சிறிது அமர்ந்து ஓய்வெடுத்து பின் ஓடத் தீர்மானித்தது. ஆனால் விரைவிலேயே உறங்கிப்போனது. தவழ்ந்து நடந்த ஆமையோ எந்தத் தொந்தரவுமில்லாமல் - தூங்கும் முயலைக் கடந்து சென்று பந்தயத்தை முடித்துக்கொண்டது. விழித்தெழுந்த முயல், தான் பந்தயத்தில் தோற்றுப் போனதை உணர்ந்து வருந்தியது.

கதை கூறும் கருத்து :- பொறுமையும், ஈடுபாடும் பந்தயத்தில் வெல்ல அவசியம் தேவை. மேலே சொன்னதுதான் நாம் கேட்டு வளர்ந்த கதை.

ஆனால் சமீபத்தில் நண்பர் ஒருவர் சொன்ன சுவாரசியமான கதை இப்படிப் போகிறது.... பந்தயத்தில் தோற்ற முயல் மிகுந்த ஏமாற்றத்துடன் தோற்ற காரணத்தைத் தேடத் தொடங்கியது. அளவுக் கதிகமான நம்பிக்கையும், கவனக் குறைவுமே தோல்விக்கான காரணம் என்பதை உணர்ந்து கொண்டது. தனக்கு வரமாகக் கிடைத்த "வேகத்தைப்" பயன் படுத்தி ஓடியிருந்தால்... ஆமை ஒரு போதும் வென்றிருக்காது என அறிந்தது.இப்படி நினைத்த முயல், இன்னொரு பந்தயத்திற்குச் சவால் விட்டது. ஆமையும் ஒப்புக் கொண்டது. இம்முறை முயல் நிற்காமல் வேகமாக ஓடிப் பல மைல்கள் வித்தியாசத்தில் ஆமையை வென்றது.

கதை கூறும் கருத்து:- வேகமும் உறுதியும் உடையவர்களிடம் பொறுமையும், ஈடுபாடும் உள்ளவர்கள் தோற்றுவிடுகிறார்கள். கதை இங்கே முடிந்துவிடவில்லை.

இப்போது ஆமை யோசித்தது. தற்போதுள்ள நிலையில் பந்தயத்தில் முயலை வெல்வது என்பது சாத்தியமல்ல. அதனால் சற்றே மாறுதலான ஒரு வழியைச் சிந்தித்து முயலைப் பந்தயத்திற்கு அழைத்து. முயலும் ஒப்புக்கொண்டது.ஏற்கெனவே தீர்மானித்திருந்தபடி முயல் வேகமாயும், உறுதியாயும் ஓட ஆரம்பித்தது. ஆனால்.... ஓர் அகலமான ஆற்றை அடைந்தபோது நின்றுவிட்டது. பந்தய முடிவுக் கோடு ஆற்றின் அக்கரையில் இரண்டு கி.மீ. தொலைவில் இருந்தது. அதனால் என்ன செய்வதென்றறியாது வியப்புடன் முயல் அப்படியே உட்கார்ந்துவிட்டது. அதே சமயம் ஆமை மெதுவாகத் தவழ்ந்து வந்து ஆற்றுக்குள் இறங்கி எதிர்க்கரையை நீந்திக் கடந்து தொடர்ந்து நடந்து பந்தயத்தை முடித்துக் கொண்டது

கதை கூறும் கருத்து :- முதலில் உனது போட்டித்திறனின் தகுதி மையத்தைப் புரிந்துகொள். அதற்கேற்ப ஆடுகளத்தை மாற்றிக் கொள்.

இன்னமும்கூட இந்தக் கதை முடிவடையவில்லை. இக்காலக் கட்டத்தில் முயலும் ஆமையும் நல்ல நண்பர்களாகிவிட்டதால் ஒற்றுமையுடன் சிந்தித்துப் பார்த்தன. கடைசிப் பந்தயத்தை இன்னமும் சிறப்பாகச் செய்திருக்க முடியும் என்று உணர்ந்துகொண்டன. அதனால் கடைசிப் பந்தயத்தை மீண்டும் நடத்தத் தீர்மானித்தன. இம்முறை இணைந்து ஓடத் துணிந்தன. பந்தயத்திற்குத் தயாராயின. இம்முறை முயலானது ஆற்றின் கரை வரை ஆமையைத் தன் முதுகில் சுமந்து கொண்டோடியது. ஆற்றை அடைந்ததும் ஆமை முயலைத் தன் முதுகில் சுமந்து ஆற்றை நீந்திக் கடந்தது. கரையில் மீண்டும் முயல், ஆமையைக் சுமந்து ஓடியது. இறுதியில் இரண்டும் ஒன்றாகவே பந்தயக் கோட்டைத் தொட்டன.

முன் எப்போதும் உணர்ந்திராத தன்னிறைவை இரண்டும் அதிகமாகவே உணர்ந்துகொண்டன. கதை கூறும் கருத்து:- பலமான போட்டித் தகுதிகளுடன் தனிப்பட்ட முறையில் புத்திசாலியாக இருப்பது நல்லதே. ஆனால் பிறரது தகுதியை மதித்து இணைந்து செயலாற்ற முடியாத பட்சத்தில் நமது திறமை வரையறுக்கப்பட்ட எல்லைக்குக் கீழாகவே இருக்கும். ஏனெனில் சில சூழலில் பிறர் நம்மை விடச் சிறப்பாகச் செயலாற்ற முடியும்.கூட்டு முயற்சியில் சூழல் சார்ந்தே தலைமை உருவாகிறது.

குறிப்பிட்ட சூழலில் குறிப்பிட் மனிதரைத் தலைமை ஏற்கும்படி விட்டுவிடுதல் நல்லது.
இந்தக் கதையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு.

தோல்விக்குப் பிறகு முயலோ, ஆமையோ துவண்டு போய் விட்டுவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தோல்விக்குப் பிறகு, முயல் கவனத்துடன் முயன்று, கடுûமாய் உழைக்கத் தீர்மானித்தது.

ஆமை தனது போராடும் வியூகத்தை மாற்றிக்கொண்டது. ஏனெனில் அது ஏற்கெனவே இயன்றவரை கடினமாகவே உழைத்திருக்கிறது.

வாழ்வில் நாம் தோல்விகளைச் சந்திக்கும்போது, சில நேரங்களில் முயன்று கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. சில நேரங்களில் போட்டி வழிகளை மாற்றிக்கொண்டு மாறுபட்ட வழிகளைத் தேட வேண்டியுள்ளது. சில நேரங்களில் உழைப்பு வழிகள் இரண்டையும் மாற்றிப்பார்க்க வேண்டிய தாயுள்ளது.

முயலும், ஆமையும் கற்றுக்கொண்ட மிக முக்கியமான பாடம்:

எதிரியுடன் போட்டியிடுவதை விட்டுவிட்டு சூழலுக்கு எதிராகப் போட்டியிடும்போது... மிக மிகச் சிறப்பாக செயலாற்ற முடிகிறது.

நன்றி - சிஃபி அமுதசுரபி




நேற்று 23.05.08 ஆமைகள் பாதுகாப்பு தினம் - உலகம் முழுவதும் இயற்கை மாற்றங்களினாலும்,மனிதர்களின் பழக்கங்களிலும் பாதிக்கப்பட்டு அழிந்து வரும் ஆமைகளின் வாழ்வினை அவைகளின் பாதுகாப்பினை பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் கடைப்பிடிக்கப்படுகிறது.


குறிப்பு:- ஆமை வேகத்தில் வந்தாதால் கொஞ்சம் லேட்டு :-)

அழிவுப்பாதையில் விலங்குகள் - காப்போம் & காண்போம்!

மனிதன் தன்னை தவிர்த்த, மற்ற உயிரினங்களை கொல்வதை அல்லது துன்புறுத்துவதை அல்லது இந்த மாதிரியான விஷயங்களுக்கு உடந்தையாக இருப்பதை சுட்டிகாட்டி வேண்டாம், இனியும் இது வேண்டாம் என்று சொல்லும் விதமாக,அழியும் விலங்குகளை அழிவிலிருந்து காக்க முயற்சி மேற்கொள்வோம் என்ற விழிப்புணர்வினை அளிக்கும் விதமான நாளாக இன்று மே 16 வெள்ளி

மனிதன் தன் உயிரினை தவிர மற்ற உயிர்களின் மீது ஆதிக்கம் செலுத்துவது அன்பினால் மட்டுமே இருக்கவேண்டுமே ஒழிய அழிப்பதற்காக இருக்க கூடாது இது முதலில் அடிப்படையான விஷயமாக கருத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்!


இயற்கையினோடு இயைந்த வாழ்வு இனி அவசியம்!

இயற்கையினை இயல்பாக்கி, இருக்கும் வாழ்க்கையினையும்,இனிமையாக்கி,

வாழ்க்கையில் நாம் விலங்குகளாய் மாறாமல்,

விலங்குகளின் வாழ்க்கையினையும் மாற்றாமல்,

மகிழ்ச்சியோடு வாழ்வோம்!

காக்கா - க்ரோ வித் ஜப்பான்!


பாட்டி வடை சுட்டு காக்கா லவட்டிக்கிட்டு போன கதையை நீங்க போய் இங்க சொன்னீங்கன்னா, வரும் பதில் அடப்போய்யா இங்க எல்லாம் ஆளுங்கள தூக்காதது ஒண்ணுதான் கொறைச்சல் இதுல நீ இந்த கதையை சொல்லி என்னமோ பல வருடங்களா புழக்கத்தில் இருக்கும் நீதிக்கதையுன்னு சும்மா கதை வுட்டுக்கிட்டு திரியிறீங்களேன்னு கேப்பாங்க டெக்னாலஜி டெவலப்பண்ணிக்கிட்டிருக்கற ஜப்பான்காரங்க!அவ்ளோ இம்சை கொடுத்து டோக்கியோவை துவம்சம் பண்ணுதுங்களாம் இந்த காக்காக்கள்!

மனிதர்களுக்கு இணையாக போட்டிப்போட்டுக்கொண்டு தம் இனத்தை பெருக்கிக்கொள்ளும் காகங்களுக்கு தேவையான உணவினையும் மனிதர்களிடமிருந்து தட்டி பறித்து செல்கின்றன! இங்குதான் மனிதர்களுக்கும் காகங்களுக்கு கடும் சண்டை நிகழ்கிறதாம்! பலரின் தலையினை புண்ணாக்கி புண்ணியம் கட்டிக்கொள்கின்றனவாம்! (அந்த ஷார்ப்பான கடினமான காகங்களின் வாய்ப்குதியினை கொஞ்சம் பயத்துடனே விவரிக்கிறார்கள் ஜப்பானியர்!)

பள்ளி செல்லும் சிறுவர்கள் பள்ளியினுள் கையில் குடையுடன் நடமாடி தங்களையும் தங்களது மதிய உணவையும் பாதுகாக்கும் நிலைமைதான் இப்போது! தெருவில் நிம்மதியாக ஒரு சாக்லேட்டினை தின்று செல்ல முடியாமல் தவிக்கும் சிறுவர் சிறுமியரிலிருந்து பலரும் பலவிதமான வேதனைகளை அனுபவித்துக்கொண்டுதான் இருக்கின்றனவாம் காக்கை கூட்டங்கள்!

இவற்றின் அளவிடமுடியாத வளர்ச்சியினை கண்டு ஜப்பான் கொஞ்சம் திணறித்தான் போயிருக்கிறது. (உத்தேசமாக 1.50 லட்சம் காக்கைகள் பறக்கின்றனவாம்!) கடும் கண்டனங்களை பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுக்கொண்டிருக்கும் அதே சமயத்தில் அரசு தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு பொதுஇடங்களில் காக்காகளை ஒழிக்கும் வகையில் வாயுவினை கொண்டு பொறிகள் வைத்து அழித்தும் வருகிறது.

ஆனால் வன்முறையின் மீது நாட்டமில்லா ஜப்பான் காகங்களை இப்படி கொல்வதையும் மக்கள் விரும்பவில்லை!

சரி குஞ்சுகளை பொரிக்கும் இடங்களிலேயே, பயபுள்ளைகளின் மேட்டரினை முடிக்கலாம் என்று திட்டமிட்டு செயல்பட்டால் இவர்களை விட காகங்கள் கூடுதலாக யோசித்து சும்மா லொலலொலா கூடுகளை கட்டி எஸ்ஸாகிவிட்டு வேற இடங்களில் குடும்ப சகிதமாய் குதூகலமாய் வாழ வழி தெரிந்து வைத்திருக்கின்றனவாம்!

இந்த மாதிரியான முடிவுவினை கூட அரசு எடுக்க காரணம் அரசாங்கத்தின் முக்கிய அதிகாரி கோல்ப் விளையாடிக்கொண்டிருக்கையில் ஒரு காகம் அவரின் தலையில் கொத்தி விளையாடி வினை தேடிக்கொண்டதுதானாம்!

வெளியே சொல்லிக்கொள்ள இயலாத அளவு கதறுகிறார்களாம் ஜப்பானிய விலங்கியல் அறிஞர்கள் கூட...!

காலையில் எழுவதற்கு முன்பே எழுப்பும் காகங்களின் இரைச்சல் சத்தங்களுக்காகவே காதில் எதையாவது திணித்துக்கொண்டு வேலைக்கு செல்ல எத்தனிக்கும் பலர் வேண்டிக்கொள்வது நிம்மதியாய் தலைக்கு எந்த தொந்தரவும் வந்துவிடாமல் இந்த நாளை இனிய நாளாக்கவேண்டும் சனீஸ்வர பகவான் என்றுதானாம்!

யானை :-)


ஒவ்வொரு முறை எங்கள் ஊரின் பெரிய கோவில்லுக்கு செல்கையில் கண்டிப்பாய் காண்பது கோவில் யானையைத்தான்!

ஏனோ பார்க்கும்போது பரிதாபமாகத்தான் தோன்றினாலும், பிரும்மாண்டம் நோக்குகையில் ஒரு பெரிய கெளரவமாகத்தான் இருக்கும், நம்மூரிலும் யானை இருக்கிறது என்று! (ஆனா பாருங்க வருஷா வருஷம் ஓய்வுக்குன்னு சொல்லி அழைச்சிட்டு போகும்போதுதான் நம்ம கண்ணுலயும் ,யானை கண்ணுலயும் கண்ணீர் வரும்...!)

கிட்டதட்ட வாழ்ந்துக்கொண்டே, வளர்ந்துகொண்டிருக்கும் எனக்கு இரண்டு ( கடைசி நேரத்தில ரெண்டு போட்டிக்கு அப்ளிக்கபிள் ஆகுமா??) கழுத வயதாகிவிட்டது ஆனாலும், யானைகள் பெரியதாக வளர்ந்து முதிய வயதாக போனால் என்னவாகும்? எங்கு இருக்கும்? என்றெல்லாம் அறியாத தெரிந்துக்கொள்ள நினைக்காத மனம்!

நம்மூரில் அவ்வளவாக யானைகள் இல்லாததால் யாருக்கும் இது சம்பந்தமாக எதுவும் நினைவுக்கு வருவதில்லை அல்லது பெரும்பாலும் தன் முதிய வயதிலும் கோவில் கோவிலாய் திரிந்து கடைத்தெருக்களில் காசுகள் வாங்கி மணமக்களை வாழ்த்தி எந்தவொரு ஒய்வுமின்றியே தன் நிரந்த ஒய்வுக்கு செல்கிறது!

ஆனால் கேரளாவிலே நிறைய பேர் வீட்டு செல்லமாக வளர்க்கிறார்கள். அவர்கள் யோசிக்கிறார்கள் அல்லது அங்கு இருக்கும் விலங்குகள் பாதுகாப்பாளர்களும் யோசிக்கிறார்கள்!

பெரும்பாலான யானை உரிமையாளர்கள் யானை முதிய வயதினை அடைந்ததும் கூடுமானவரை அதற்கான பராமரிப்புகளில் சிறிதளவு ஆர்வத்தை குறைத்துக்கொள்ள, கொள்ள கடைசியில் உடல் நலமின்மையால் கொல்லப்படுகின்றன யானைகள் என்பது அவ்வளவாக வெளியில் தெரிந்திராத சோகமான செய்தியாம்!

மாதச்செலவுகள் என்பது பெருந்தொகையாக, அதனுடன் அரசின் குறைந்த மானியம், இவைகளை கொண்டு யானைகளின் வயதான காலத்து தேவைகளை சமாளிக்க பெரும்பாலான உரிமையாளார்கள் விரும்புவதில்லை..!

பெரும்பாலான வனவிலங்கு பாதுகாப்பு தன்னார்வலர்களின் கோரிக்கைகளை ஏற்று வனவிலங்குகள் பாதுகாப்பு வாரியம் முதன்முதலாக கேரளாவில் யானைகள் ஓய்வு இல்லம் ஒன்றினை திறக்கப்போகிறது! எனபது ஒய்வுவெடுக்கும் வயதில் இருக்கும் யானைகளுக்கும், அதை வைத்து கஷ்டப்பட்டு,கஷ்டப்படுத்திக்கொண்டிருக்கும் உரிமையாளர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்திதான்!

இனி இங்கு செல்லும் வயதும் வாழ்வும் முதிர்ந்த யானைகளுக்கு இது செல்லகூடமாக செல்லங்களின் கூட்டமாக வாழும் வகையில் சுமார் 1000 ஏக்கர் காட்டுப்பகுதியில் ஒரு பிரத்யோக இடத்தினை நிர்ணயிக்கப்போகிறார்களாம்!

ரிடையர்மெண்ட் யானைகள் மட்டுமின்றி அவ்வப்போது வந்து தங்கி தங்களை ரிலாக்ஸ் செய்துக்கொள்ளவும் பிற யானைகளுக்கு வசதி செய்யப்போகிறார்களாம்!

எது எப்படியோ..? இயற்கையின் படைப்பினில் இனிய வாழ்வினை அதுவும் ஓய்வுக்காலத்தில் அனைவருமே பெறுவதுதானே நல்ல சிந்தனை!