ஒவ்வொரு முறையும் நகர்வலப்பொழுதுகளில் கண்டிப்பாய் கண்ணில்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள் யாரேனும்!
பேசும் தமிழில் நம்ம ஊருக்காரங்கன்னு உடன் அடையாளம் கண்டுக்கொள்ளவும் முடிகிறது!
ஆனால்... இதுவரையிலும் யாரிடமும் முன்போய் நின்று பேசியதில்லை :-(
பேசுவோமா...? என்று ஒரு முடிவெடுத்து வார்த்தைகளை வெளிப்படுத்த எத்தனிக்கும் அந்த சில கண் இமைக்கும் நொடிகள் இன்னும் பல பல கணக்குகளை போட்டு மனம் தடுக்கிறது வார்த்தைகள் வெளிப்படாமல் மறுத்து மறைகிறது!
பேசப்போவதால் ஏற்படக்கூடிய நன்மைகளை கணக்கிடும்போது மிக மகிழ்ச்சியடையும் மனம் சட்டென்று நெகடிவ் எண்ணங்களுக்கு தாவிவிடுகிறது.அது வரையிலும் மகிழ்ச்சியாக கணக்கிடப்பட்ட மெஜாரிட்டி இன்பங்கள் சில மைனாரிட்டி துன்பங்களில் வீழ்ந்துப்போகின்றது.
பேசுவோமா என்ற முடிவெடுத்த சில விநாடிகளிலேயே வந்து விழும் கேள்விகளில்
நாம் பேசினால் பதில் சொல்லுவார்களா..?
நம்மை விட்டு விலகி சென்றுவிட்டால் அவமானப்பட்டு போய்விடுவோமா?
இல்லை எனக்கு தெரியாது என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது?
நாமே முன்வந்து பேசுவதை தவறாக எடுத்துக்கொண்டால் நினைத்துவிட்டால்...?
ஏன் இது போன்ற இரு வேறு மாறுபட்ட சூழலினை சில விநாடிகளில் முடிவுகள் தாறுமாறாய் வந்து விழுகின்றன?
பேசுவதால் பெறப்போகும் நன்மை தீமைகளை கணக்கிட்டு டக்கென்று முடிவுகளை கூறுமளவுக்கு நம் மனத்திற்கு அறிவுருத்தியிருப்பது நாமா? அல்லது நாம் சார்ந்திருக்கும் சமூகமா?

கடந்து விட்ட கணப்பொழுதுகளை நினைத்து பிறிதோர் சமயத்தில் மனம் வெட்கி, அழாத குறையாக வருத்தம் தெரிவிக்கிறது - பேசியிருக்கலாமோ...?