சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்

எனத்தொடங்கும் அந்த தேவாரப்பாடல் சாதாரணமாக முத்லில் தோன்றினாலும் 63 நாயன்மார்களின் வரலாற்றை ஒரிரு வரிகள் சொல்லி முடிக்ககூடிய திருத்தொண்டர் புராணமாக எனக்கு தெரிய வந்தது வெகு நாட்கள் கழித்துத்தான்!


வாரங்களின் இறுதி நாளான ஞாயிற்று கிழமைகளில்,பெரிய கோவிலை வலம் வராவிட்டால் தொடங்கும் வாரமே,எதையோ தொலைத்துவிட்டு,ஆரம்பிப்பதை போன்ற எண்ணம்!

ஞாயிறு விடுமுறை நாளாக இருந்தாலும் பெரிய கோயிலில் அவ்வளவாக கூட்டமிருக்காது,நாம் நினைத்தப்படியான வழிபாடுகளை,தேவாரப்பாடல்களை உரக்க நம்க்கு தெரிந்த ராகத்தில் பாடலாம்,உட்கார்ந்து யோசிக்கலாம்? அதாங்க தியானமுனு சொல்வாங்க ஆனா பாருங்க நான் எப்ப அத செஞ்சாலும், உட்கார்ந்து ரொம்பத்தான் யோசிப்பானே என்ற ரீதியிலேயே அமையும்! சாதரணமா வராத நினைப்பெல்லாம் வரும்,- வெளியில இருக்கற வண்டியை எவனாவது எடுத்துப்போயிட்டா,என்ன பண்றது? எப்படி போய் போலீஸ்ல கம்பளைண்ட் கொடுக்கறது? கால்ல வேற செருப்பு இல்லையே – இப்படி லிங்க் மேல லிங்க போட்டு அதுப்பாட்டுக்கு போயிக்கிட்டே இருக்கும் அத நிப்பாட்டுணுமுனா நான் செய்ற அந்த தியானத்தை நிப்பட்டணும்! இத்தோட நிப்பாட்டிக்குவோம் இந்த மேட்டர!

அது போன்ற சமயங்களில் நான் மிகவும் எதிர்பார்த்து,கேட்டு ரசிப்பது,

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்

என்ற கணீர் குரலுடன், வலம் வரும் சிவனடியார் திருக்கூட்டத்தினர்தான்!

எதோ வயசான ஆளுங்கன்னு நினைச்சிடாதீங்க! எல்லாருமே இளம்வயதுக்காரர்கள்தான்! தலைமை வகித்து செல்பவருக்கு ஒர் முப்பது வயதிருக்ககூடும்,கூடவே பாடிக்கொண்டு செல்லும் தொண்டர்கள் அனைவருமே வயது 22க்குள்தான் அதிலும் ரொம்ப குட்டி ஒரு வாண்டு 5 வயசு இருக்கு நெற்றியில வீபுதி அணிந்து பாடிச்செல்லும் காட்சி,காண ரொம்ப ஆசையாத்தான் இருக்கும்!

தமிழிசை பாடல்களில் தேவராப்பாடல்களை கொண்டு வழிபட்டு செல்லும் இக்காட்சி இந்த பாடலும் என்னை மிகவும் கவர்ந்திழுக்க அது நாள் முதல் கொண்டு நானும் சுந்தரர்சுவாமிகளால் பாடப்பெற்ற ஒவ்வொரு நாயன்மார்களின் வரலாற்றையும் ஒற்றை வரிக்குள்ளாகவே சுருக்கி கூறும் தேவராத்தின் திருதொண்டர்கள் புராணம் கூறும் பாடல்களை,கற்று ஒரளவுக்கு பாடத்தெரிந்துகொண்டேன்!

பெரியபுராணத்திற்கு அடிப்படையாக அமைந்த இப்பாடல்கள் மற்றும் தேவாரப்பாடல்களை ஒவ்வொரு கோவில்களிலும் ஒலிப்பதன் மூலமும் தமிழ் வாழும்!

1 பேர் கமெண்டிட்டாங்க:

said...

ஆயில்யன் அவர்களே,

உங்க நிறைய பதிவுகள நான் ரசித்திருக்கேன்.ஆனால் மறுமொழியிட்டதில்லை.

கோவில்ல உங்கள மாறி எனக்கும் வண்டி தொலந்து போற எண்ணங்கள் வரும்.

பாடல் வரிகள் அருமை!!