கேபிள் டிவி - ஏமாளி மக்கள் - எத்தனை கேள்விகள்? - தினமணியிலிருந்து...


கட்சி தொடங்கிய கையோடு ஒவ்வொரு தமிழக அரசியல் தலைவரும் யோசிக்கும் அடுத்த விஷயம் தங்களுக்கென ஒரு தொலைக்காட்சி சேனல் தொடங்குவது பற்றித்தான். அந்த அளவுக்கு தொலைக்காட்சியின் தாக்கமும் ஆதிக்கமும் தமிழகத்தில் இருப்பதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.

தமிழகத்தில் மட்டும் சுமார் 2 கோடி வாடிக்கையாளர்கள் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. தமிழ்நாட்டில் 10 கோடி மக்கள் தொகையில், தொலைக்காட்சி பார்க்காதவர்களின் எண்ணிக்கை 5 சதவீதம்கூட இருக்காது என்கிற நிலைமை. போதாக்குறைக்கு அரசே இலவசமாக தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கவும் தொடங்கி விட்ட நிலையில், இதைவிடச் சிறந்த பிரசார சாதனம் இருக்க முடியாது என்று அரசியல்வாதிகள் கருதுவதில் ஆச்சரியம் இல்லை.

தொலைக்காட்சிச் சேனல்களுக்கு இடையிலான யுத்தம் ஒருபுறம் இருக்க, இந்தச் சேனல்களை விநியோகம் செய்யும் கேபிள் டிவி நிறுவனங்களின் போட்டா போட்டி வேறு தொடங்கி இருக்கிறது. கேபிள் டிவி விநியோகத்தின் மொத்த குத்தகைக்காரர் என்பதுபோல இயங்கி வந்த சுமங்கலி கேபிள் விஷனின் (எஸ்.சி.வி.) மேலாதிக்கத்தை ஒழிப்பது என்று கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கி இருக்கிறது மதுரையிலுள்ள ராயல் கேபிள் விஷன் (ஆர்.சி.வி.)வேடிக்கை என்னவென்றால், எஸ்.சி.வி. என்னென்ன யுக்திகளைப் பிரயோகித்துத் தனக்குப் போட்டியே இல்லாமல் மேலாதிக்கம் செய்ததோ, அதையே இப்போது ஆர்.சி.வி.யும் செய்ய முற்பட்டிருக்கிறது.

ஒரு தவறு அதே தவறு மீண்டும் செய்யப்படுவதை நியாயப்படுத்தி விடாது. அப்போது, தங்களுக்கு இருந்த அரசியல் பலத்தைப் பயன்ப டுத்தித் தங்களது வியாபார எதிரிகளை எஸ்.சி.வி. முடக்கியது எப்படித் தவறோ, அதேபோல இப்போது ஆர்.சி.வி.யின் செயல்பாடுகளும் கண்டனத்துக்குரியவை.

முன்பணம் கட்டி, மாதக் கட்டணமும் செலுத்தி கேபிள் மூலம் இந்தத் தொலைக்காட்சிச் சேனல்களைப் பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு எந்தவித உரிமையும், தாங்கள் விரும்பும் சேனல்களைப் பார்க்கும் வசதியும் கிடையாது என்றால் எப்படி? யார் வேண்டுமானாலும் கேபிள் விநியோகம் செய்யட்டும்; யாருடைய சேனல் நன்றாகவும், கட்டணம் குறைவாகவும் இருக்கிறதோ அதை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளட்டும் என்பதுதானே முறை? இதைக் கண்காணித்து கேபிள் விநியோகஸ்தர்கள் அனைவருக்கும் நியாயம் கிடைப்பதை உறுதி செய்வதற்குத்தானே அரசும் ஆட்சியாளர்களும் இருக்கிறார் கள்? முந்தைய அதிமுக அரசு அறிவித்தபோது எங்கள் கழுத்தை நெரிக் கிறார்கள் என்று கூக்குரலிட்டு எஸ்.சி.வி.க்கு ஆதரவாகப் பேரணி நடத்தி, ஆளுநரிடம் மனு கொடுத்தவர்கள், உறவு கசந்ததும் அரசுத் தரப்பில் கேபிள் விநியோகம் என்று அறிவித்தனர். அறிவித்து வருடம் ஆயிற்று, கேபிளையும் காணோம், விஷனையும் காணோம்.

முதல்வரின் மகனே கேபிள் விநியோகம் செய்ய ஆர்.சி.வி. தொடங்கு கிறார். அப்படியானால் அரசு நிறுவனம் அவ்வளவுதானா? மின்சாரம் இல்லாமல் தொலைக்காட்சி பார்க்க முடியாது. மின்சார விநியோகம் செய்யும் மின்வாரியம் கேபிள் விநியோகத்தையும் செய்யட்டுமே. மின்வாரிய நஷ்டமாவது ஈடுகட்டப்படுமே? அதை ஏன் செய்ய இவர்கள் முன்வரவில்லை? இந்தக் குடும்பமோ, அந்தக் குடும்பமோ, தங்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் கேபிள் விநியோகம் செய்ய வேண்டும் என்பதாலா?

அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் இலவசச்சேனல்களில் தான் விளம்பரங்கள் போடமுடியும். கட்டணச் சேனல்களில் விளம்பரங்கள் இருக்காது. இங்கே மாதக் கட்டணமும் வசூலித்து, ஐந்து நிமி டத்துக்கு ஒரு தடவை விளம்பரங்களையும் போடும் அயோக்கியத்தனமும் நடைபெறுகிறதே, அதைக் கேள்வி கேட்பாரே இல்லையா?

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் வாடிக்கையாளர்கள் அனைவரையும் முட்டாள்களாக்கி,விளம்பரத்திலும், கட்டணத்தி லும் வருமானத்தை அள்ளிக் விக்கிறார்களே,இது என்ன நியாயம்? 2 கோடி கேபிள் இணைப்புகள் என்றால்,ரூ. 100 மாதக் கட்டணம் என்று வைத்துக் கொண்டாலும் வருடத்திற்கு ரூ. 2,400 கோடி ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதில் அரசுக்கு என்ன கிடைக்கிறது? இந்த வருமானம் ஏன் மின்சார வாரியத்துக்குக் கிடைக்கக் கூடாது? அதை விட்டுவிட்டு மின்வாரியத்தைத் தனியார் மயமாக்க சிந்திப்பது ஏன்? எஸ்.சி.வி., ஆர்.சி.வி. என்றெல்லாம் தனியார் கேபிள் விநியோகம் நடைபெறுவதாக இருந்தால் அனைத்துத் தரப்பினரும், எந்த உருட்டல் மிரட்டலுக்கும் ஆட்படுத்தப்படாமல் தங்களது சேவையை முன்னிலைப்படுத்தி போட்டியிடட்டும். அதனால் வாடிக்கையாளர்களுக்கு நன்மை கிடைக்கும். இல்லையென்றால், தனியாரின் தலையீடு இல்லாமல் அரசு நடத்தட்டும். அதை விட்டுவிட்டு, ஏகபோக உரிமை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குக் கைமாறுவதில் பொதுமக்களுக்கு என்ன நன்மை?

நன்றி - தினமணி

7 பேர் கமெண்டிட்டாங்க:

said...

me the first

said...

கமன்ட் அப்புறமா போடுறேன்...இப்ப அடடென்டன்ட்ஸ் மட்டும் சரியா...

said...

எத்தனை தொலைக்காட்சிகள் இருந்தாலும் உருப்படியா இருக்கிறது..
ஒரு சில நிகழ்ச்சிகள் மட்டும்தானே...

said...

///இதைவிடச் சிறந்த பிரசார சாதனம் இருக்க முடியாது என்று அரசியல்வாதிகள் கருதுவதில் ஆச்சரியம் இல்லை.///


அதற்காகத்தானே தொலைக்காட்சிகள் இருக்கிறது...

said...

"தமிழர்களே தோழர்களே..." பதிவோட தலைப்பை பார்த்ததும் நினைவுக்கு வந்தது இதுதான்...:))

said...

பாதிக்கப்படுவது என்னவோ பொது மக்களும் கேபிள் டிவி உரிமையாளர்களும்

said...

கேபிள் யார் கையிலிருந்து யாருக்கு மாறினால் என்ன எவ்வளவு விலை உயர்வு ஏற்பட்டால் என்ன தொலைக்காட்சி சினிமா மோகம் மக்களைக் கட்டி வைத்திருப்பதால் எவ்வளவு கொடுத்தும் பார்க்க தயாராக இருக்கிறார்கள் மக்கள்.