பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்யதர்ம ரதாயச
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே
அதுநாள் வரையில் சிவன், முருகன் பிள்ளையார், மட்டுமேயிருந்த எங்கள் பூஜையறையில் சுவாமி ராகவேந்திரர் படமும் வைக்கப்பட்டதும் வெள்ளிக்கிழமை விரதம் மட்டுமே அனுசரித்த வீட்டில், கூடுதலாக, வியாழக்கிழமை விரதமும், கடைப்பிடிக்க ஆரம்பித்தது அதற்குபின்னர்தான்.!
இத்தனைக்கும் காரணமானது ஒரு திரைப்படம் 1985ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வெளியான ஸ்ரீராகவேந்திரர். அறுபதாவது வயதில் எங்கள் பாட்டிக்கு சுவாமி ராகவேந்திரை அறிமுகப்படுத்திய படம்!
ஆக்ஷன் படங்களில் மட்டுமே பார்த்து ரசித்த ரஜினியை அமைதியின் வடிவமாக, ராகவேந்திரராக பார்க்க, ரஜினி ரசிகர்களுக்கு உண்மையிலேயே ஒரு வித்தியாசமான அனுபவமாகத்தான் இருந்திருக்கும்!
என்னது...! ரஜினி சாமிப்படத்துல நடிக்கிறாரான்னு? பலரும் கேலியாகவும்,ஆச்சர்யமாகவும் எதிர்பார்க்க வைத்த படம்.!
ஆனாலும் ஒண்ணும் குறை சொல்ல முடியாத அளவிற்கு ரஜினி தன் பங்கினை சிறப்பாக செய்ததும், அந்த காலகட்டத்திலேயே சிகரெட்டை தொடாமல், அந்த படத்தை நடித்து முடித்தது பத்திரிக்கைகளில் பெரிய சேதியானது!
பாதி ரிப்பேரான டேப்பில் அதிகாலையிலேயே ஆரம்பிக்கும் பாடல்.
ச....
ச ரி க ம ப
ப த நி ச ரி
ம்.. பாடு"ங்கற பாடல்ல ஆரம்பிச்சு, அத்தனை பாட்டையும் போட்டு தெருவையே எழுப்பி,படத்துக்கு ஃப்ரீ பப்ளிச்சிட்டி பண்ணிய அப்பாவும் அந்த படத்த பார்த்துட்டு ராகவேந்திரர் சம்பந்தபட்ட கேசட்கள் வாங்க ஆரம்பிச்சதும்.,
பிள்ளையாரே கதின்னு கிடந்த அண்ணன் பின்னாளில் சந்தனத்தால் நெற்றியில் நெடுகோடு தீட்டி,காவிச்சட்டை அணிந்து அலைந்ததும், எல்லாம் ராகவேந்திரர் படத்தோட எபெக்ட்டாலத்தான்..!
பொருளாதார ரீதியில படத்துக்கு அந்தளவுக்கு முக்கியத்துவம் கிடைக்கலைன்னாலும், ஆன்மீகத்துல ரஜினிக்கு இருந்த இன்ட்ரஸ்ட்-ரசிகர்களிடமும் - அதிகமாக ஆரம்பிச்சது, இந்த படத்துலேருந்துதான்னு, சொன்னா அது தான் உண்மை..!