வீதியோரத்தில் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் வழி வந்தோர்!


இன்றைய தினமணியின் முகப்பில் இப்படி ஒரு கட்டுரை!

தியாகம் தேசியம் என்று இன்னும் இந்த சொற்களோடு வாழ்ந்த தேசிய போராட்டத்தில் தம் வாழ்வினை அர்ப்பணித்த நல் உள்ளங்களுக்கு நம்மால் உதவ முடியாவிட்டாலும் கூட அவர்தம் மக்களுக்கு கூட நம்மால் சிறு உதவி செய்ய இயலாத சூழ்நிலையில் இருக்கிறோமே என்பதை எடுத்துச்சொல்லும் சேதி!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

ஆங்கிலேய அரசையே ஆட்டிப்படைத்த சுதந்திரப் போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் கொள்ளுப் பேத்தி, பேரன் ஆகியோர் வசிக்க இடமின்றி சாலையோரத்தில் வாழ்கின்றனர்.

"மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?' -என பாரதியார் தனது "சுதந்திரப் பயிர்' என்ற தலைப்பிலான கவிதையில் வ.உ.சிதம்பரனாரின் தியாகத்தை நினைந்து அன்றே உள்ளம் உருகிப் பாடி யிருந்தார்.

அப்படிப்பட்ட தியாகச்சுடர் சிதம்பரனாரின் மூத்த மகன் ஆறுமுகம். இவரது மகள் கமலாம்பாள். இவரது கணவர் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ஞான வடிவேலு.
இந்திய குடியரசுத்தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத், ஞானவடிவேலு வுக்கு தொழிலாளர் நலத்துறையில் பணி வாய்ப்புக்கு ஏற்பாடு செய்தார்.

ஞானவடிவேலு-கமலாம்பாளின் மூத்த மகள் தனலெட்சுமி (52). மகன்கள் சங்கரன் (46), ஆறுமுகம் (40), சோமசுந்தரம் (40). தாய் இறந்த நிலையில் தந்தையே இவர்களை வளர்த்துள்ளார். அருப்புக்கோட்டையில் குடும்பக் கோயிலுக்குச் சொந்தமான வீட்டில் வசித்துள்ளனர். அப்போது, பங்காளிகளுக்குள் ஏற்பட்ட சொத்துப் பிரச்னை காரணமாக கல்லூரணி என்ற ஊருக்கு வாடகை வீட்டில் குடிபெயர்ந்தனர்.

இந்நிலையில் தனலெட்சுமி, சங்கரன் ஆகியோருக்கு திருமணமாகியது. சங்கரன் மதுரை மூன்றுமாவடி சம்பக்குளம் பகுதியில் குடியேறி பெயிண்டிங் தொழில் செய்தார். அவரது சகோதரரான ஆறுமுகமும் உடன் வசித்தார்.

காதல் திருமணம் செய்த தனலட்சுமி கணவரைப் பிரிந்தார். 2003-ல் ஞானவடி வேலு இறந்துவிட்டார். ஆறுமுகம் பெயிண்டிங் வேலை செய்தபோது ஏற்பட்ட விபத்தில் மனநலம் பாதிக்கப்பட்டார். இதனால் திருமணமாகவில்லை.

கணவரும் பிரிந்து, ஆதரித்த தந்தையும் இறந்துவிட்டதால், மதுரை வந்த தனலெட்சுமி மூன்று மாவடிப் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி முறுக்கு வியாபா ம் செய்தார். ஆனால் சொத்துப் பிரச்னை வழக்கு தொடர்பாக அருப்புக்கோட்டைக்கு அடிக்கடி சென்றதால் வியாபாரத்தைச் சரியாகக் கவனிக்க முடியவில்லை.

மாதாமாதம் வாடகை தராததால் வீட்டைக் காலி செய்துவிட்டனர். தனலெட்சுமியின் சகோதரர் சங்கரனுக்கும் பெயிண்டிங் தொழிலில் போதிய வரு வாய் இல்லை.
அவராலும் வீட்டு வாடகையைக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தகராறு ஏற்பட்டது. அவரது மனைவி குழந்தையுடன் பிரிந்து சென்றுவிட்டார்.

இப்போது தனலெட்சுமியும் அவரது சகோதரர்களும் மூன்று மாவடி பஸ் நிலையம் அருகே உள்ள "கண்ணன் கருப்பன் ஆஞ்சநேயர் கோயில்' வளாகத்தில் தங்கியுள்ளனர்.
சங்கரனும், தனலெட்சுமியும் கிடைக்கும் கூலி வேலைக்குச் சென்று வருகின்றனர். அவரது சகோதரர் ஆறுமுகமும் அவ்வப்போது பெயிண்டிங் வேலைக்குச் சென்று வருகிறார். இவர்களை யாரென்று அப்பகுதியில் உள்ளோருக்குத் தெரியவில்லை.

வெட்டவெளியில் கோயிலுக்கு அருகே விற்பனைக்கு குவிக்கப்பட்ட மணல், செங்கல் இடையேதான் தன லெட்சுமியும், அவரது சகோதரர்களும் தினமும் இரவில் உறங்குகின்றனர் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.மழைக்காலத்தில் அங்குள்ள கடைகளின் முன்பகுதியில் தங்குவார்களாம். மழை பெய்தால் அன்று இரவு அவர்களுக்கு சிவராத்திரிதான். இந்தச் சூழலால் தற்போது தனலெட்சுமியும், அவரது சகோதரர்களும் மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கலாம் என ஆதங்கப்படுகிறார் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.

காபி, வடையே காலை உணவு! தெருவோரத் தில் தள்ளுவண்டியில் விற்கப்படும் கேப்பை, கம்பங்கூழே பகலுணவு - என காலத்தைக் கழிப்பதாக விரக்தியுடன் விவரிக்கிறார் தனலெட்சுமி.

வ.உ.சி. வாரிசுகள் என உதவி கேட்டு அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் எதுவும் நடக்கவில்லை என்பதால் வெறுத்துப் போய்விட்டதாக தனலெட்சுமி விரக்தியுடன் சிரிக்கிறார்."ஏதாவது ஓர் இடத்தில் குறைந்த ஊதி யத்திலாவது என்னை வேலைக்கு சேர்த் துவிட முடியுமா?'' என நம்மைப் பார்த்து அவர் கெஞ்சியதைக் கண்டு கண்ணீர் தான் வருகிறது.சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு ஏதேதோ சலுகைகள் செய்ததாகக் கூறி வரும் தமிழக அரசுக்கும், வ.உ.சி. பெயரில் கட்சியும், மன்றமும் நடத்துவோருக்கும் இந்த தனலெட்சுமி போன்றோரது கஷ்டம் தெரியாமல் போனது எப்படியோ? வ.உ.சி. சிறையில் இழுத்த செக்கையும், அவர் பயன்படுத்திய பொருளையும்கூட பத்திரப்படுத்தி வைத்து பாதுகாத்துகொண்டிருக்கிறது தமிழக அரசு!
நன்றி - தினமணி

11 பேர் கமெண்டிட்டாங்க:

said...

எத்தனையோ தியாகிகள், சாதனையாளர்களின் வாரிசுகளின் நிலையும் இதுதான் :(

said...

தியாகங்கள் பாராட்டப் பட வேண்டியவை. ஆனால் அவர்களின் வழித் தோன்றல்களும் அரசை எதிர்பாராமல் தாங்களேவே உழைத்து முன்னேறி இருக்கலாம்.

said...

:(

said...

தமிழ் பிரியன் மாதிரி நியாயமாகவே பேச வேண்டும்.

வ.உ.சி தியாகம் செய்தார் என்பதற்க்காக அவரது வாரிசுகளுக்கு நாம் என்ன செய்துவிட முடியும்.

எட்டயபுரம் ஜமீனின் வாரிசுகள் சந்தோசமாக இன்று ராஜ வாழ்க்கை வாழவில்லை?

புதுக்கோட்டை பாளையத்தின் வாரிசுகள் இன்று ராஜவாழ்க்கை வாழவில்லை?

மைசூரின் மன்னர்களின் வாரிசுகள் இன்று மல்ட்டி மில்லியனர்கள். இன்னும் குவாலியரின் மஹராஜாக்கள் உள்ளிட்ட இந்தியாவின் எத்தனையோ துரோகிகளின் வாரிசுகள் தமது பாட்டான், முப்பாட்டனின் கோடிக்கணக்கிலான சொத்துக்களை கஸ்டப்பட்டு உழைத்து பாதுகாக்கும் போது, வ உ சி என்பவரின் வாரிசுகள் மட்டும் ஏன் உழைக்க தயங்குகிறார்கள்?

வ.உ.சி ஒரு சிறந்த முதலாளியாக தொழில் செய்து பிழைத்து சேர்த்த சொத்துக்களை(??!!) பாதுகாக்க தெரியாத அவரது வாரிசுகளுக்கு வக்காலத்து வாங்கும் இந்த பதிவை தமிழ் பிரியனுடன் இணைந்து கண்டிக்கிறேன்.

இந்தியர்களை, இந்திய விடுதலையை காட்டிக் கொடுத்த துரோகி மன்னர்களின் வாரிசுகள் போல வாழத் தெரியாத வ உ சி என்ற தியாகியின் வாரிசுகளுக்கு என்ன ஆதரவு வேண்டிக் கிடக்கிறது.


முக்காலமும் உணர்ந்த முனிவன்.

said...

வருத்தத்திற்குரிய விஷயம்!!:(

said...

????

:(

said...

சங்கு சுட்டாலும் வெண்மைதரும்னு சொல்ல வேண்டியத்துதான். அவர்கள் வெய்யிலில் சுடப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

said...

தமிழ் பிரியன் சொல்வதில் உள்ள நியாங்களை ஏன் யாரும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்?

said...

வ.உ.சி என்ற தியாகியின் மன உறுதியும் திறமையும் அவர்தம் வாரிசுகளுக்கு இல்லாமல் போனது பெரிய சோகம்.

ஆனா, வ.உ.சியின் பெயரை உபயோக்கித்து பணம் பண்ணும் அனைவரும், அந்தக் குடும்பத்துக்கு ஏதாவது ராயல்ட்டி கொடுக்கரமாதிரி அரசு ஏதாவது செய்யலாம்.

தமிழ் பிரியனின் வாதமும் ஞாயமானதே.

பொதுஜனத்துக்காக, கஷ்டப்பட்டு உயிர்மாய்த்த பெரியவர்களை நம்பியிருக்க்கும் குடும்பத்துக்கு, கைமாறு செய்வது, பொதுஜனத்தின் கடமை.

எவ்வளவோ வெட்டியா செலவு செய்யும் அரசாங்கம், இதில் சில ஆயிரத்தை விடுவதால் ஒண்ணும் ஆகிவிடாது.
ஆனா,, வெறும் பணமா கொடுத்தா, நிரந்தரத் தீர்வு கிடைக்காது.

said...

ஆயில்யன்

வணக்கம்.

ஒன்று செய்யலாம். நீங்கள் அரபு நாட்டில் வசிக்கிறீர்கள் என நினைக்கிறேன்.
வ.உ.சி யின் உறவினர்கள் (படத்தில் இருப்பவர்கள்) தற்போது எங்கு உள்ளார்கள் என்பதை இந்தியாவிலிருக்கும்
உங்கள் நண்பர்கள்/உறவினர்கள் கண்டு பிடித்துச் சொன்னால், என்னால் முடிந்த உதவிகளை "அவர்கள் வேலை செய்து வருமானம் பெற" - செய்ய விரும்புகிறேன்.

கையில் பணத்தை தராமல் ஒரு குடிசைத் தொழிலை ஆரம்பிக்க அல்லது குறைந்த பட்ச தகுதியிருந்தால், தகுதிக்கு ஏற்ப வேலை வாங்கி தர முயற்சிப்பேன்.

(திருச்சியில் எனது உறவினர் ஒருவர் தொழிலதிபர்-முன்னாள் இந்திய ராணுவ கேப்டன் அவரிடம் கேட்டால் நிச்சயம் வழி கிடைக்கும்)

சம ஆர்வமுள்ள இணைய நண்பர்களும் சேர்ந்து உதவலாம்; ஆக்கபூர்வமான கருத்துக்களை மட்டும் சொல்லியும் உதவலாம்.

said...

// Vassan said...
ஆயில்யன்

வணக்கம்.
ஒன்று செய்யலாம். நீங்கள் அரபு நாட்டில் வசிக்கிறீர்கள் என நினைக்கிறேன்.
வ.உ.சி யின் உறவினர்கள் (படத்தில் இருப்பவர்கள்) தற்போது எங்கு உள்ளார்கள் என்பதை இந்தியாவிலிருக்கும் உங்கள் நண்பர்கள்/உறவினர்கள் கண்டு பிடித்துச் சொன்னால், என்னால் முடிந்த உதவிகளை "அவர்கள் வேலை செய்து வருமானம் பெற" - செய்ய விரும்புகிறேன்.
கையில் பணத்தை தராமல் ஒரு குடிசைத் தொழிலை ஆரம்பிக்க அல்லது குறைந்த பட்ச தகுதியிருந்தால், தகுதிக்கு ஏற்ப வேலை வாங்கி தர முயற்சிப்பேன்.

திருச்சியில் எனது உறவினர் ஒருவர் தொழிலதிபர்-முன்னாள் இந்திய ராணுவ கேப்டன் அவரிடம் கேட்டால் நிச்சயம் வழி கிடைக்கும்)

சம ஆர்வமுள்ள இணைய நண்பர்களும் சேர்ந்து உதவலாம்; ஆக்கபூர்வமான கருத்துக்களை மட்டும் சொல்லியும் உதவலாம்.//

நன்றி வாசன் அய்யா!

நேற்றைய தினமணியின் முகப்பு செய்தியினை கண்ட தமிழகத்தில் பல்வேறு இடங்களிலிருந்தும், நல் உள்ளங்கள் அவர்களினை தேடிச்சென்ற செய்தியினையும் இன்று தினமணி வெளியிட்டுள்ளது! அரசு சார்பிலும் வ.உ.சியின் வாரிசுகளை அணுகி உள்ளனர்! வ.உ.சி வாரிசுகளின் எதிர்பார்ப்புக்கள், அனேகமாக அரசின் உதவியால் வேலை கிடைக்கும் வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன! உங்களின் ஆதரவுக்கு இத்தருணத்தில் என் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்!

மேலும் தினமணி செய்திகள் மற்றும் தலையங்கம் http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNE20080824125038&Title=Editorial+Page&lTitle=R%FBXVeLm&Topic=0&ndate=8/25/2008&dName=No+Title&Dist=