6 சிக்மா!



சிக்ஸ் சிக்மா என்பது என்னவென்று சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், அது மோட்டரோலா நிறுவனம் கண்டுபிடித்த ஒரு மானேஜ்மென்ட் தந்திரம். கடலை எண்ணெய்க்கு ஐ.எஸ்.ஐ முத்திரை குத்துவது போல ஒரு தரக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ்.

எந்த ஆறு சிக்மா நிறுவனமும் தயாரிக்கும் பொருட்கள் 99.999 சதவிகிதம் கியாரண்டியாக நல்ல தரத்துடன் இருக்கும். சிக்மா என்ற சொல், புள்ளியியலில் வருகிறது. சராசரியிலிருந்து நாம் எவ்வளவு தூரம் விலகி வசிக்கிறோம் என்பதை அளக்கும் குறியீடு அது.

உதாரணமாக, நீங்கள் நட்டு போல்ட் தயாரிக்க ஒரு நிறுவனம் ஆரம்பிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு ஆறு சிக்மா சான்றிதழ் கேட்கிறீர்கள். அவர்கள் முதலில் அளப்பது, உற்பத்தியாகும் பொருட்களில் எவ்வளவு சதவிகிதம் குறைபாடு இருக்கிறது என்பதைத்தான். ஒரு மாதத்தில் பத்து லட்சம் போல்ட்டு தயாரித்தால், அதில் சுமார் மூன்றரை போல்ட்டுகளுக்கு மேல் தப்பு இருந்தால் சர்டிபிகேட் கிடைக்காது! (மூன்றரை போல்ட் என்பதை ஒத்துக் கொள்ள முடியாவிட்டால், ஒரு கோடியில் முப்பது நான்கு பிழைகளுக்கு மேல் அனுமதிக்க மாட்டார்கள் என்று வைத்துக் கொள்ளலாம்).

ஆறு சிக்மா வாங்குவது அவ்வளவு சுலபமல்ல. ஜி.இ., ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களுக்கே சான்றிதழ் கிடைப்பதற்குள் தூக்குப் போட்டவன் மாதிரி நாக்குப் பிதுங்கிவிட்டது. அவர்களிடம் இல்லாத கம்ப்யூட்டரா, எம்.பி.ஏக்களா? இருந்தும் பிழைகளை நீக்கிக் கொள்வதற்கு முக்கியத் தேவை, கடமைக்கு வேலை செய்யாமல் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு வேலை செய்யும் ஊழியர்கள். அப்படிப்பட்ட ஊழியர்கள் மட்டும் கிடைத்தால், எதிர்பாராத இடங்களில் எல்லாம் ஆறு சிக்மாவைச் சந்திக்கலாம். இதற்கு அருமையான உதாரணம், மும்பை நகரின் சாப்பாடுக் கூடைக்காரர்கள்.

புகழ் பெற்ற ஐ.ஐ.எம்.நிர்வாகவியல் பள்ளி. உச்சாணிக் கிளை எம்.பி.ஏக்களை உற்பத்தி செய்யும் நாற்றங்கால். அங்கே ஒரு நாள் மானேஜ்மென்ட் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருப்பவர், கோட்டு சூட்டு போட்ட ஹார்வர்ட் பேராசிரியர் அல்ல; வேட்டியைத் தார் பாய்ச்சிக் கட்டி காந்தி குல்லாய் அணிந்த சர்வ சாதா கூலித் தொழிலாளி. தலை மேல் சாப்பாட்டுக் கூடைகளைச் சுமந்து சென்று வினியோகிக்கும் "டப்பாவாலா'. அவராவது, எம்.பி.ஏ. மாணவர்களுக்குப் போய் மானேஜ்மென்ட் சொல்லித் தருவதாவது? ஏனெனில் அன்று நடந்த பாடம், "தவறுகளே நடக்காமல் வேலை செய்வது எப்படி' என்பதாகும்.

மும்பைக்கு ஒரு முறை சென்று வந்த யாரும் இந்த டப்பாவாலாக்கள் என்பவர்களைக் கவனிக்காமல் இருந்திருக்க முடியாது. மும்பை நகரம், ஒவ்வொரு சதுர கிலோமீட்டருக்கும் இருபதாயிரம் பேர் என்ற ரேட்டில் மக்கள் டப்பாவில் அடைக்கப்பட்ட பேரீச்சம் பழம்போல் நெரிசலாக வசிக்கும் நகரம். இத்தனை பேரும் சேவல் கோழியுடன் சேர்ந்து எழுந்து ரயில் பிடித்து எங்கோ இருக்கும் அலுவலகம் போக வேண்டும். அத்தனை பேருக்கும் மதியம் சாப்பாடு வேண்டும். காண்டீனிலோ, கண்டகண்ட எண்ணெய். இங்கேதான் உதவிக்கு வருகிறது டப்பாவாலா சர்வீஸ். இவர்கள், புற நகர் பகுதியில் இருக்கும் உங்கள் வீட்டிலிருந்து காலை ஒன்பது மணி அளவில் டிபன் காரியரை எடுத்துக் கொண்டு போனால் சரியாக லஞ்ச் நேரத்துக்கு அலுவலகத்தில் சேர்ப்பித்து விடுவார்கள். மாலையில் காலி காரியர்கள் எதிர்த் திசையில் பயணம் செய்து கண்ணன் மேய்த்த ஆநிரைகள் போல் வீட்டுக்கு வந்து சேரும். ட்ரெயின், பஸ், சைக்கிள், மனிதக் கால் என்று சகலவிதமான போக்குவரத்து சாதனங்களையும் பயன்படுத்தி ஒவ்வொரு சாப்பாட்டு மூட்டையும் சராசரியாக அறுபது கிலோ மீட்டர் பயணம் செய்கிறது; நாலு கை மாறுகிறது. இருந்தும் காரியர் மாறிவிடாமல், அவரவர் வீட்டுச் சாப்பாடு அவரவருக்குப் போய்ச் சேருவதுதான் ஆச்சரியம்.



டப்பாவாலாக்களில் பெரும்பாலானவர்களுக்கு எழுதப் படிக்கவும் தெரியாது. டிபன் பாக்ஸ்களில் கோடு, புள்ளி, ஸ்வஸ்திக் என்று தங்களுக்கே உரிய எளிய குறியீடுகளைப் பயன்படுத்தி அதனதன் இலக்கைத் தெரிவிக்கிறார்கள். ஒரு ஏரியாவிலிருந்து சேகரித்த டப்பாக்கள் தபால் பிரிப்பு அலுவலகம் போன்ற ஒரு மரத்தடிக்கு வந்து நாலு திசைகளிலும் பிரித்து அனுப்பப்படுகிறது.

ஐயாயிரம் ஊழியர்கள் தினம்தினம் இரண்டு லட்சம் சாப்பாடுகளை டெலிவரி செய்கிறார்கள். மழையோ புயலோ வெயிலோ, க்வார்ட்ஸ் கடிகாரம் மாதிரி எல்லாம் சீராக, நேரம் தவறாமல் இயங்குகிறது. டெலிவரியில் தப்பு நடப்பது மிகமிகமிக அபூர்வம்!

இந்தத் தொழிலை மட்டும் நம்ம லட்ச ரூபாய் எம்.பி.ஏக்களிடம் விட்டிருந்தால், ஒவ்வொரு டிபன் காரியருக்கும் ஆர்.எஃப் பட்டி, கூடைக்குப் பார் கோட், சுமப்பவர் ஒவ்வொருவருக்கும் ஜி.பி.எஸ் என்று டெக்னாலஜியில் புகுந்து விளையாடி, வரிசை வரிசையாக டெல் கம்ப்யூட்டர்கள் வைத்துக்கொண்டு கண்காணித்து, கடைசியில் அல்போன்ஸ் வீட்டு மீன் குழம்பை அனந்தாச்சாரிக்குக் கொண்டு போய்க் கொடுத்துவிடுவார்கள்.

மாபெரும் மானேஜ்மென்ட் பள்ளிகளும் டப்பாவாலாக்களைப் பக்கத்தில் சென்று கவனித்து ஆராய்ச்சிக் குறிப்புகள் எழுதியிருக்கிறார்கள். ஃபோர்ப்ஸ் என்னும் புகழ் பெற்ற பிசினஸ் இதழ் அவர்கள் ஆறு சிக்மா உலகத் தரத்தை எட்டிவிட்டார்கள் என்று வியக்கிறது.

நியூயார்க் டைம்ஸ் அவர்களைப் பற்றிக் கட்டுரை எழுதுகிறது, பி.பி.சியில் டாக்குமென்டரி படம் காட்டுகிறார்கள். இளவரசர் சார்லஸ் இந்தியாவுக்கு வந்தபோது டப்பாவாலாக்களைச் சந்தித்து அவர்களுடன் பெருமிதமாக போட்டோ எடுத்துக் கொள்கிறார். கலிபோர்னியாவின் சிலிக்கன் பள்ளத்தாக்கில் இதைப் பின்பற்றி "அன்னதாதா' என்று சாப்பாட்டு கேரியர் சர்வீஸ் ஆரம்பிக்கிறார்கள்.

செய்வதைத் திருந்தச் செய்வது என்பது பல்லாயிரம் ஆண்டு பழமையான கருத்து. எகிப்திய பிரமிடின் நாலு பக்கங்களையும் இப்போது அளந்து பார்த்தால் தொண்ணூறு டிகிரிக்கு ஆச்சரியகரமாகக் கிட்டத்தில் அமைத்திருக்கிறார்கள். ஒரு டிகிரியில் ஆயிரத்தில் ஒரு பகுதிதான் வித்தியாசம் கண்டுபிடிக்க முடிந்தது! குவாலிட்டி கண்ட்ரோல் என்ற நவீன வார்த்தை உலகப் போரின்போது உருவானது. தொழிற்சாலை அசெம்பிளி லைன்களில் கார் முதல் குண்டூசி வரை பெரிய அளவில் அடித்துத் தள்ள ஆரம்பித்தார்கள்.

ஊழியர்களை "வேகம், வேகம்' என்று துரத்தியதில் தரம் வீழ்ந்துவிட்டது; கஸ்டமர்கள் கதறினார்கள். எனவே, 1924-வாக்கில் புள்ளியியல் அடிப்படையில் தரக் கட்டுப்பாடு சோதனை செய்யும் வழக்கம் கொண்டுவரப்பட்டது. வால்டர் ஷேவார்ட் என்பவர் அன்றைக்கு எழுதிய புகழ்பெற்ற ஒரு பக்க டாக்குமென்ட்தான், பின்னால் வந்த அத்தனை ஜிலுஜிலு பவர் பாயின்ட்களுக்கும் முன்னோடி. சீக்கிரமே தரக் கட்டுப்பாடு என்பது தாரக மந்திரமாகி (தாரக என்றால் என்ன?), டி.க்யூ.எம், சி.எம்.எம், ஐ.எஸ்.ஓ, ஜப்பானில் கைஸன் என்று கிளைகிளையாகப் புறப்பட்டது. முழு நேர குவாலிட்டி டிப்பார்ட்மென்ட்கள் உருவாக்கப்பட்டு நூற்றுக்கணக்கானவர்கள் நாற்காலியைத் தேய்க்க ஆரம்பித்தார்கள்.

இன்றைக்கு ஆறு சிக்மா, ஏழு சிக்மா என்றெல்லாம் அவர்கள் சீசனுக்கு சீசன் ஒரு புதிய மானேஜ்மென்ட் ஃபாஷன் ஏற்படுத்தி அப்பாவி முதலாளிமார் தலையில் மிளகாய் அரைத்தாலும், தரத்தை உறுதி செய்வதற்கு பிரமிட் காலத்திலிருந்தே ஒரே ஒரு எளிய விதிதான் இருந்து வந்திருக்கிறது.

டப்பாவாலாக்கள் போன்ற தொழில் பக்தி மிகுந்த ஊழியர்கள்! சார்லஸ் இளவரசர் வந்த அன்றைக்குக்கூட, ""எங்கள் வேலை பாதிக்கக் கூடாது; டியூட்டி நேரம் முடிந்த பிறகு வாங்க'' என்று சொல்லி அனுப்பினார்கள். கடந்த நூற்று இருபது வருடங்களாக நடப்பது டப்பாவாலா சர்வீஸ். இருந்தும் ஒரு முறை கூட ஸ்ட்ரைக், ஊர்வலம் என்று நடந்ததே இல்லை. வேலைக்கு வருபவர்களின் பின்னணியைத் தீர விசாரித்துவிட்டுத்தான் கிட்டேயே சேர்க்கிறார்கள். ரிட்டையர்மெண்ட் வயது என்று எதுவும் கிடையாது. அவரவர்கள் உடம்பில் தெம்பு உள்ள வரை வேலை செய்யலாம். அநாவசியமாக லீவு எடுத்தாலோ, காந்திக் குல்லாய் யூனிஃபார்ம் இல்லாமல் காணப்பட்டாலோ கடும் அபராதம் உண்டு! இந்தப் படிப்பில்லாத மக்களிடமிருந்து நமக்கு நிறையப் படிப்பினை இருக்கிறது.

நன்றி - தினமணி கதிர்

16 பேர் கமெண்டிட்டாங்க:

said...

நல்ல செய்தி.

said...

நல்ல கட்டுரை. மீண்டும் மீண்டும் படித்தாலும் சலிக்காத ஒன்று :)

said...

டப்பாவாலாக்களைப் பற்றி முன்னரும் ஒரு சஞ்சிகையில் வந்து படித்தேன், பகிர்வுக்கு நன்றி

இதே மாதிரி மகிமா, குருமா பத்தியும் நீங்க போடணும் ;)

said...

பகிர்ந்து கொண்ட விஷயம் சொல்லுகின்ற பாடம் பிரமாதம்.

//செய்வதைத் திருந்தச் செய்வது என்பது பல்லாயிரம் ஆண்டு பழமையான கருத்து.//

//தரத்தை உறுதி செய்வதற்கு பிரமிட் காலத்திலிருந்தே ஒரே ஒரு எளிய விதிதான் இருந்து வந்திருக்கிறது.

டப்பாவாலாக்கள் போன்ற தொழில் பக்தி மிகுந்த ஊழியர்கள்! //

நன்றி ஆயில்யன்!

said...

நல்ல கட்டுரை. எதிலும் ஒரு ஒழுங்கு இருந்தால் 6 சிக்மா என்ன அதையும் தாண்டி வெல்ல முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு. எழுதியது ஆயில்யன் என்று மிகவும் ஆர்வத்துடன் படித்துக் கொண்டே வந்தேன். கடைசியில் தினமணி என்று வந்தது.. :)

said...

இன்றூ காலை 6:30க்கு தினமணி கதிர் படித்தேன் - உடனே இணையத்தில் போட வேண்டுமெனெ நினைத்தேன் - பிறகு தான் தெரிந்தது - அதுவே நெட்டில் சுட்டது தான் என்று. இருப்பினும் போடலாம் என நினைத்தேன். உங்கள் ஸ்டேடஸ் மெசேஜ் 6சிக்மா என இருந்தது - ஒரு ஐயம் - நீங்கள் பதிவு போட்டிர்களா என்று ? பல பணிகளுக்கு நடுவே இப்பொழுது தான் வர முடிந்தது

நல்ல பதிவு - தீபாவளி நல்வாழ்த்துகள்

said...

தீபாவளி வாழ்த்துக்கள் !

said...

சூப்பர் information அண்ணாத்த! தீபாவளி நல் வாழ்த்துக்கள். உங்க தமிழ்மணம் office ரொம்ப நல்லா இருக்கு!

said...

டப்பா வாலா பத்தின செய்தி செம சூப்பர்...
நான் கூட GB certified ஆக்கும் :-D

said...

//Divyapriya said...
டப்பா வாலா பத்தின செய்தி செம சூப்பர்...
நான் கூட GB certified ஆக்கும் :-D

27 October, 2008
//

அட சூப்பரூ!
மேலதிக தகவல் இருந்தா அனுப்புங்களேன் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம்!
மீ த ஆர்வத்துடன் kadagam80அட்ஜிமெயில்.காம்ல இருக்கேன் :)))

said...

Thanks for stopping by my blog. I don't remember if I left you a message earlier. I don't have a Tamil font/keyboard or whatever, and I don't know anyone would want to read it either. So I am staying with English for safety.
Nice blog, I wish I could read quickly. :(
Anyway, Happy Deepavali.

said...

//சென்ஷி said...
நல்ல கட்டுரை. மீண்டும் மீண்டும் படித்தாலும் சலிக்காத ஒன்று :)//

Repeatuuuuuuuuu ;)))

said...

Very nice post with a good piece of information.:-)

said...

நல்ல கட்டுரை!!

//இதே மாதிரி மகிமா, குருமா பத்தியும் நீங்க போடணும் ;)//

அது யாரு..பெரிய பாண்டி ரொம்ப அக்கறையா விசாரிகறாரு?

said...

நல்ல கட்டுரை,பகிர்வுக்கு நன்றி.

said...

அண்ணே! இன்னும் மஹிமா, குருமா, ஸ்மிதா பற்றி எல்லாம் பதிவு போடலையா? சீக்கிரம் போடுங்க வெயிட்டிங்ஸ்ஸ்ஸ்.. ;))