வலிக்கின்ற மனமே..!

வேலை தேடியோ அல்லது வேலை கிடைத்த பின்னரோ ஊரை விட்டு வெளியேறி செல்லும் போது ஏற்படும் மனபாரம்,சிறிது காலங்களிலேயே சூழ்நிலைக்கேற்ப மாறிவிடும். அப்படியே, சில கட்டங்களில் மனம் வாடும் போது, ஊரிலிருந்த காலங்களை நினைத்து, கண்ணீர் விட்டு ஆற்றிக்கொள்ள முடியும்.!

ஆனால்,சில நேரங்களில் அதுவும் தனிமையில் ஒரு ஜூரம் வந்தால் கூட மனம் கிடந்து துடிக்கும் துடிப்பிருக்கிறதே..! அப்பப்பா..! அதற்கு பதில் உயிரை கூட விட தோன்றும்.
சிறு வயதில்,நமக்காக குடும்பமே கும்பலாக அருகில் அமர்ந்திருந்த கால கட்டங்கள் மனதில் நிழலாட,உதவிக்கு ஆளின்றி கிடக்கும் சூழலில் இது போன்ற சூழ்நிலைகளை நாம் ஏற்படுத்திக்கொள்ள காரணமென்ன என்று ஏற்படும் எண்ணங்கள்.

நோய் அதனால் ஏற்படும் மனப்போராட்டங்கள், இது பற்றிய எஸ்.ராமகிருஷ்ணனின் இந்த வார "கேள்விக்குறியில்"
Photo Sharing and Video Hosting at Photobucket
வேறு எப்போதையும்விட நோயுறும்போதுதான் மனதில் அதிகக் கேள்விகள் பிறக்கின்றன. வீடு கற்றுத்தர மறந்ததை, மருத்துவமனைப் படுக்கை கற்றுத்தந்துவிடுகிறது. புத்தனுக்குப் போதி மரத்தடியில் ஞானம் வந்ததைப் போல, பலருக்கும் வாழ்வின் அருமையும், யார் நமக்கு நெருக்க மானவர்கள்,
யார் நம்மைப் பயன்படுத்திக்கொண்டவர்கள் என்றும் நோயுறும்போதுதான் தெரியத் தொடங்குகிறது.
உடல் குறித்த நமது கவனம் மிக அலட்சியமானது. அன்றாடம் பயன்படுத்தும் ஒரு சைக்கிளுக்குத் தரும் முக்கியத்துவத்தைக்கூட நமது உடலுக்கு நாம் தருவதில்லை. இயல்பாக இருக்கும்போது உடலின் அற்புதம் நமக்குப் புரிவதே இல்லை.

வலியின் முன்னால் வயதோ, பணமோ, பேரோ, புகழோ எதுவும் இருப்பதில்லை. வலி, மனிதனை உண்மைக்கு மிக நெருக்கமாக்குகிறது. தன்னைப் பற்றிக்கொண்டு இருந்த அத்தனைப் பெருமிதங்களையும் ஒரே நிமிஷத்தில் கரைத்து அழித்துவிடுகிறது. நோய் ஒரு வகையில் நம் உடலை மட்டுமல்ல; ஆன்மாவையும் தூய்மைப் படுத்துகிறது.

உடல் நோயுறும்போது மனதில் தோன்றும் முதல் கேள்வி, ‘எனக்குன்னு யாரு இருக்கா?’ என்பதுதான். மற்ற எந்த நேரங்களையும்விட சக மனிதனின் நெருக்கமும் அன்பும் அரவ ணைப்பும் மிகத் தேவையாக உள்ள தருணம் அதுதான்!

10 வயதில் காய்ச்சல் காண்பதற்கும் 30 வயதில் காய்ச்சலில் படுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. 10 வயதில் காய்ச்சல் கண்டால், மற்ற எல்லோருக்கும் வருவது போல தனக்கும் காய்ச்சல் வந்திருக்கிறது என்று எண்ணத் தோன்று-கிறது. ஆனால், 30 வயதிலோ, ‘எனக்கு எப்படிக் காய்ச்சல் வந்தது? எத்தனை நாளில் சரியாகும்? ஒருவேளை சரியாகாமல் போனால் என்ன செய்வது?’ என்று சந்தேகங்களும் கேள்விகளும் நீரூற்றைப் போல பொங்கி வழியத் தொடங்குகின்றன.

அதைவிட, திடீரென உலகின் இயக்கத்திலிருந்து தான் துண்டிக்கப்பட்டுவிட்டதைப் போலவும், இப்படியே சில நாட்கள் கடந்து போனால் தன்னை உலகம் அடியோடு மறந்து விடும் என்பது போலவும் நோயாளி நினைக்கத் தொடங்குகிறான்.

உலகிலேயே மிகப் புரிந்துகொள்ள முடியாதது நோயாளிகளின் கோபம். உண்மையில், அவனது கோபம் மனிதர்களிடம் இல்லை. தன் உடலுக்குள் நடக்கும் புரியாத மாற்றங்களின் மீதான கோபத்தை அவன் தனக்கு நெருக்கமான மனிதர்களின் மீது காட்டுகிறான்.

மனைவியும் குழந்தைகளும் சகோதரர்களும் தான் படுக்கையில் கிடக்கும்போது இயல்பாகக் குளித்து, சாப்பிட்டு, காபி குடித்து தன் நாட்களைக் கழிக்கிறார்களே என்ற ஆத்திரம் பொங்கி வருகிறது. தனக்காக மற்றவர்கள் வருத்திக்கொள்ள வேண்டும் என்று நோயாளி ஆசைப்படுகிறான்.

நோயுறும்போது ஆணுக்குக் கிடைக்கும் அன்பும் அக்கறையும் பெண்ணுக்குக் கிடைப்பதில்லை. பெண் நோயுறும் குடும்பங்களில் அது தேவையற்ற ஒரு பிரச்னை என்றே கருதப்படுகிறது. மனைவியோ, சகோதரியோ நோயுற்ற நேரங்களில் உடன் இருந்து அக்கறை-யோடு கவனித்துக்-கொள்ளும் ஆண்கள் மிக சொற்பமானவர்களே!

நோய், நம் வயதை வேறு எந்த சந்தர்ப்பத்தையும்விடத் துல்லியமாக அடையாளம் காட்டிவிடுகிறது. அழு-வதற்கு வயது தடையாக இருப்பதை நோயாளி பல நேரங்களில் உணர்கிறான். ஆனால், வயதை மீறி உடல் தன் இயல்பில் உணர்ச்சிகளை வெளிப்-படுத்தத் துவங்கிவிடுகிறது. நோயாளியின் அழுகை, வலியால் மட்டும் ஏற்படக்கூடியதல்ல!

வாழ்க்கை, தன்னைப் புரியவைப்பதற்குச் சில நிகழ்வுகளையும் தருணங்களையும் ஏற்படுத்துகிறது போலும்! உடலில் தோன்றிய நோய் கால மாற்றத்தில் நீங்கிவிடக்கூடும். ஆனால், நோய்மை ஏற்படுத்திய புரிதல் வாழ்நாள் முழுவதும் கூடவே இருக்கக்கூடியதல்லவா?
Photo Sharing and Video Hosting at Photobucket

0 பேர் கமெண்டிட்டாங்க: