சந்திரமுகி 804-வது வெற்றி விழா
ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தின் 804-வது நாள் வெற்றி விழா சாதனை திருவிழா என்ற தலைப்பில் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நேற்று நடந்தது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்-சிவாஜி புரடக்ஷன்ஸ் இணைந்து நடத்திய இந்த விழாவுக்கு, முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமை தாங்கினார். தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் கே.ஆர்.ஜி., பட அதிபர் ஏவி.எம்.சரவணன், டைரக்டர் கே.பாலசந்தர், நடிகர் கமலஹாசன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்கள்.
நடிகர் ரஜினிகாந்த், சந்திரமுகி பட டைரக்டர் பி.வாசு ஆகியோர் ஏற்புரையாற்றினார்கள்.
விழாவில், நடிகர் ரஜினிகாந்த்துக்கு விழாக் குழு சார்பில், முதல்-அமைச்சர் கருணாநிதி வீரவாள் பரிசு வழங்கி பேசியதாவது:-
"சந்திரமுகி''படத்தை-அது 800 நாட்களுக்கு மேல் ஓடியுங்கூட, இன்று தான் பார்த்தேன். இந்த விழாவிற்காகவே பார்த்தேன். புத்தக வெளி யீட்டு விழாவிற்கு என்னை அழைக்கும்போதெல்லாம், அந்தப் புத்தகத்தை முதல் நாள் இரவு வரை படித்து விட்டு, விழாவிற்குச் சென்று நான் குறிப்பு எடுத்தவைகளை அந்த விழா நிகழ்ச்சியிலே பேசுவது எனக்கு வாடிக்கை.
பல பேர் விழாவிற்கு ஒத்துக் கொள்வார்கள், எந்த விழா என்பதை மேடைக்குச் சென்று தெரிந்து கொள்வார்கள். நான் அப்படியல்ல, ஒரு புத்தக வெளியீட்டு விழா என்றால், அந்தப் புத்தகத்தை தொடக்கம் முதல் முடிவு வரை படித்து விட்டு அதிலே உள்ள நல்ல கருத்துக்களையும், அல்லது என்னுடைய உள்ளத்திற்கு ஒவ்வாத கருத்துக்களையும் மேடைகளிலே எடுத்துச் சொல்வது என்னுடைய வாடிக்கை.
அப்படி "சந்திரமுகி'' படத்தைப் பற்றி விமர்சனம் செய்ய நான் விரும்பினேன் என்றாலும்கூட, இன்று தான் அதற்கான நல்வாய்ப்பு எனக்குக் கிடைத்து, சந்திரமுகி படத்தை இதற்காகவே பார்த்து விட்டு வந்திருக்கிறேன்.
நம்பிக்கை வீண் போகவில்லை
ஏன் 800 நாட்கள் ஓடியுங்கூட, இந்தப் படத்தைப் பார்க்க சூப்பர் ஸ்டார் உங்களை அழைக்கவில்லையா அல்லது இயக்குனர் வாசு தான் உங்களை அழைக்கவில்லையா என்று நீங்கள் கேட்கலாம். எனக்குக் கூட இன்னும் அவர்கள் அழைக்கவில்லையே என்ற தாபம் இருந்தது. ஆனாலுங்கூட, ஒரு நம்பிக்கை, இவர்கள் என்னைஅழைக்காமலா போய் விடுவார்கள்? அழைத்துத் தானே தீரவேண்டும்,
இந்தப் படம் என்ன ஒரு நாள், இரண்டு நாள் அல்லது ஒரு வாரம், இரண்டு வாரம் ஓடக் கூடியதா? 100 நாட்களை, 200 நாட்களை, 300 நாட்களை எல்லாம் கடக்கும், அதற்காக ஒரு விழா எடுக்கிற நேரத்தில் நம்மை அழைக்காமலா விழா நடத்திடப் போகிறார்கள், ஆகவே அழைப்பார்கள் என்ற அந்த நம்பிக்கையோடு தான் இருந்தேன். என்னுடைய நம்பிக்கை என்றைக்கும் வீண் போனதில்லை. இப்போதும் வீண் போகாமல் உங்களையெல்லாம் சந்தித்து என்னுடைய மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்கிற வாய்ப்பு எனக்கும், உங்களுக்கும் ஏற்பட்டிருக்கின்றது.
804-வது நாள் விழா-இதற்கு நீங்கள் தலைமை தாங்க வேண்டும் என்று இயக்குநர் வாசுவும், தம்பி இளையதிலகம் பிரபுவும் மற்றும் ராம்குமாரும், ராம.நாராயணனும் என்னைச் சந்தித்து கேட்ட போது, நான் 804 லேயே என்னுடைய வயது 84 ம் இருக்கிறது, அதாவது எட்டு, நான்கு என்ற எண்கள் இருக்கிறது, ஆகவே நிச்சயம் வருகிறேன் என்று சொன்னேன்.
இந்தப் படத்தின் மூலமாக தமிழகத்தில் பல இளம் உள்ளங்களில், படமாகப் பொதிந்திருக்கின்ற யாரும் குறை சொல்ல முடியாத நிறை மனிதர், ரஜினிகாந்த்தைப்பற்றி தமிழகத்திலே மாத்திரமல்ல, அண்மையிலே கடந்த டிசம்பர் திங்கள் ஜப்பான் நாட்டிற்குச் சென்ற நம்முடைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் கூட அங்கேயுள்ள நாடாளுமன்றத்தில் பேசும்போது-ரஜினிகாந்த்தைப் பற்றி அந்தக் கூட்டத்திலே அவர் பேசி, எங்கள் நாட்டு பெரிய நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்தின் பெயர், ஜப்பான் நாட்டிலும் பரவியிருக்கின்றது, அவருடைய படம் இங்கே வெற்றிகரமாக ஓடுகிறது என்பதைக் கேள்விப்பட்டு நான் பெருமையடைகிறேன், மகிழ்ச்சியடைகிறேன் என்று பிரதமர் மன்மோகன் சிங் ஜப்பான் நாட்டிலே சொல்லியிருக்கிறார் என்றால், எவ்வளவு பெருமைக்குரிய விஷயம் அது, என்னைப் போன்றவர்கள் அதைக் கேட்டு எந்த அளவிற்கு மகிழ்ச்சி அடைந்திருப்போம், மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
சந்திரமுகி படத்தில் நடித்திருக்கின்றவர்கள் அத்தனை பேரும் அந்த கதாபாத்திரங்களாகவே மாறி நடித்திருப்பதும், எல்லாவற்றுக்கும் மேலாக நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இந்தப் படத்தின் மூலமாகப் பெரும் புகழ் எய்தியிருப்பதும் என்னைப் போன்றவர்களுக்கு மிக மிக ஆறுதல் அளிக்கக் கூடியதல்ல, மிக மிக இன்பம் அளிக்கக் கூடியது மாத்திர மல்ல, என்னைப் போன்றவர்களுக்கு எங்களுடைய இதய நாளங்களைத் தட்டி உங்களுக்கு ஒரு பெரிய நடிகர் மாத்திரமல்ல, தமிழகத்திலே ஒரு நல்ல உள்ளம் படைத்த மனிதரும் நண்பராகக் கிடைத்திருக்கிறார் என்ற செய்தியை எனக்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றது.
வெற்றிக்கு காரணம்?
நான் ரஜினியை இன்று நேற்றல்ல, நீண்ட காலமாக அறிவேன். அவருக்கும் எனக்கும் உள்ள தொடர்பு வெளிப்படையாக, விளம்பரமாக தெரியக் கூடிய தொடர்பு அல்ல. எப்பொழுதாவது தான் மின்னல் கீற்று போல அந்தத் தொடர்பு ஒளி விடும். ஆனால் எங்களுடைய இதயங்கள் நிச்சயமாக ஒன்று பட்டிருக்கக் கூடிய இதயங்கள்.
அந்த இதய உணர்வோடு நான் சொல்கிறேன், அவருடைய வெற்றிக்கு காரணம் எது என்றெல்லாம் எண்ணிப் பார்த்தேன். அவருடைய நடிப்பா? நடிப்பு மாத்திரமல்ல. அவருடைய கலை ஆர்வமா? அந்த ஆர்வம் மாத்திரமல்ல. அவருடைய உழைப்பா? அந்த உழைப்பு மாத்திரமல்ல. அவருடைய ஆற்றலா? அந்த ஆற்றல் மாத்திரமல்ல. வேறு எது அவருடைய வெற்றிக்குக் காரணம்? அவர் திரையுலகத்திலே மாத்திரமல்லாமல், தமிழ்நாட்டு மக்களுடைய உள்ளத்தில் எல்லாம், என்னைப் போன்றவர்களின் உள்ளத்தில் எல்லாம் இடம் பெற்றிருக்கிறார் என்றால், அதற்குக் காரணம்-எவ்வளவு மகத்தான வெற்றிகள் வந்தாலும், மலை போல வெற்றிகள் குவிந்தாலும், கடல் ஆழத்திற்கு வெற்றிகள் வந்து சேர்ந்தாலும், அவர் அடக்கமானவர்.
அந்த வெற்றிகள் எல்லாம் தனக்கு கிடைத்தது, தன்னால் தான் கிடைத்தது என்று எண்ணக் கூடியவர் அல்ல. எவர் ஒருவர் இந்த வெற்றிக்கெல்லாம் காரணம் தான் தான் என்று எண்ணிக்கொள்கிறாரோ அவர் வீழ்வது நிச்சயம். யார் ஒருவர் வெற்றிக்கு எல்லாம் காரணம் எல்லோரும் என்று கருதுகிறாரோ, அவர் இன்னும் பல வெற்றிகளைக் குவிக்கக் கூடியவர். அந்த இரண்டாவது இடத்திலே இருப்பவர் தான் நம்முடைய அன்பிற்குரிய ரஜினி காந்த். ஆகவே தான் அவர் வெற்றிக்கு மேல் வெற்றியை இன்று பெற்று வருகிறார். அந்த வெற்றிகளிலே ஒன்று தான் சந்திரமுகியினுடைய வெற்றி.
மூன்று சிவாஜிகள் உண்டு. ஒரு சிவாஜி, மராட்டிய மாவீரன். இன்னொரு சிவாஜி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இப்போது இந்த சிவாஜி, நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிவாஜி. இந்த மூன்று சிவாஜிகளும், சரித்திரத்திலே இடம் பெற்றப் பெயர்களாக இப்போது ஆகியிருக்கின்றன.
அப்படிப்பட்ட சிவாஜியை பார்க்கின்ற, ரசிக்கின்ற, அது கண்டு இன்பம் துய்க்கின்ற, மகிழ்ச்சிகொள்கின்ற மக்கள் இப்போது தமிழகத்திலே ஏராளம் இருக்கிறார்கள். இப்போது வெளி வந்திருக்கின்ற இந்தப் புதிய படம் கூட, வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதைக் கேள்விப்பட்டு நான் மிக மகிழ்ச்சியடைந்தேன்.
தம்பி வாசு பேசும்போது, ஒவ்வொரு நாளும்-கலைஞரின் வீட்டு வழியாகத் தான் நான் சென்று கொண்டிருக்கிறேன் என்று குறிப்பிட்டார். ஆனால் நானும் அந்த வழியிலே அவரைப் பார்த்ததில்லை, அவரும் என்னை வழியிலே பார்த்ததில்லை. அப்படிப்பட்ட கோபாலபுரத்தில் அவரும் வாழ்கிறார், நானும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இது ஒரு ஆச்சரியத்திற்குரியதல்ல. எனக்கு கோபாலபுரத்தில் அடுத்த வீட்டில் யார் இருக்கிறார்கள் என்றே தெரியாது. அடுத்த வீட்டிலே உள்ளவர்களுக்கு என் வீடு எது என்று தெரியும். ஆனால் எனக்கு யார் வீடு என்று தெரியாது. ஏனென்றால் 1956-ம் ஆண்டு முதல் அங்கே நான் குடி வந்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
இதுவரையிலே நான் பக்கத்து வீட்டுக்காரர் யார் என்றே எனக்குத்தெரியாது. அப்படி பழகியிருக்கிறேன். அந்த அளவிற்கு நான் அடக்கத்தோடு வாழ விரும்பினேன், விரும்பி அந்த விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன். "அடக்கம் அமரருள் உய்க்கும்'' என்றான் வள்ளுவன். அந்த அடக்கம் தான் நம்முடைய தம்பி ரஜினிகாந்த்தை இவ்வளவு பெரிய புகழ் ஏணியிலே ஏற்றி வைத்திருக்கிறது. ஆரம்பத்திலே சொன்னேன் இது, அதையே மீண்டும் வலியுறுத்தி அவர் வாழ்க வாழ்க, அவருடைய முயற்சிகள் எல்லாம் வெற்றி பெறுக என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்.
நன்றி!
தினத்தந்தி & தினமணி