போய் வருகிறேன்.!

துள்ளித்துடித்துக்கொண்டிருந்த போராட்ட இதயம், மெல்ல மெல்ல அமைதி அடைந்து கொண்டிருக்கிறது.

அவன் இந்த முடிவை விரும்பவில்லை

இந்த முடிவு அவனை விரும்புகிறது

அடர்ந்த காடும்,பசுமை நிறைந்த மரங்களும்,மணம் பரப்பும் மலர்களும்,சலசலவென ஒடிக்கொண்டிருக்கும் நதியும், அந்த நதியின் கரையிலுள்ள அழகிய சிறு இல்லமும்,அமைதியை நாடும் அவன் கண்களுக்கு தெரிந்துகொண்டிருக்கின்றன.

அவன் இனி,சுதந்திரம் நிறைந்தவன்.

அவன் இனி,தனி மனிதன்.

ஆனால்...

எந்த மூலையிலிருந்தாலும்,அவன் உங்களையே சிந்தித்துக்கொண்டிருப்பான்

பிரிவின் துயரம் அவனை உறுத்திக்கொண்டே இருக்கிறது

அவன் எப்போதும் உங்கள் நண்பன்

நிச்சயமாக அவன் உங்களை மறக்கமாட்டான்.

எப்போதாவது தற்செயலாக நீங்கள் அவனை சந்திக்க நேர்ந்தால்,அவன் கண்களில் கண்ணீர் வரும்.

அந்த கண்ணீர்,அவன் மாறவில்லை என்பதைக் காட்டும்.

எந்த அமைதியிலிருந்து ஒரு நாள் அவன் தப்பியோடி வந்தானோ,அந்த அமைதியிடமே அவன் மீண்டும் போய் சேர்ந்துவிடுகிறான்.

உலகம் உருண்டை என்பது எவ்வளவு பெரிய உண்மை.

ஒவ்வோர் மனிதனும் தான் புறப்பட்ட இடத்திற்கு ஒரு முறை திரும்பி வருகிறான்.

பயம் பிறக்கவில்லை.

பழிபாவங்கள் தோன்றவில்லை.

பரபரப்பில்லை.

இங்கேயிருந்து அங்கே,அங்கேயிருந்து இங்கே என்று இதயம் ஒடவில்லை.

இன்றும் நாளையும் ஒன்றேபோல் தோற்றமளிக்கின்றன.

ஏறும் போது இருந்த மயக்கம் இறங்கும்போது இல்லை.

அது வேண்டும் இது வேண்டுமென்கின்ற ஆசை முடிந்துவிட்டால், வாழ்க்கை சுவை நிரம்பியதாக ஆகிவிடுகிறது.

வெற்றிகளால் ஏற்படும் மயக்கங்களில் ஏ, தெய்வமே என்னை வீழ்த்திவிடாதே!

தோல்விகளால் ஏற்படும் மயக்கங்களில் ஏ, தெய்வமே என்னை துவள வைக்காதே!

ஆசைகளால் ஏற்படும் பரபரப்பில் ஏ,தெய்வமே என்னை ஆழ்த்திவிடாதே!

பயத்தால் ஏற்படும் கோழைத்தனத்தில் ஏ,தெய்வமே,என்னை பதுங்கவைக்காதே!

-கவியரசு கண்ணதாசன்

நன்றி :- வனவாசம்
வானதி பதிப்பகம்

1 பேர் கமெண்டிட்டாங்க:

said...

நெஞ்சைத் தொட்ட வரிகள்
கன்னங்களை ஈரமாக்கிய கவிதை
நன்றி
Anbudan
Irai Adimai