சுஜாதா - மிஸ் தமிழ்த்தாயே நமஸ்காரம்!


எழுத்தாளர் சுஜாதாவைப் பிடிக்காதவர்கள் இருக்கலாம், படிக்காதவர்கள் இருந்திருக்க முடியாது. 1970-களில் தமிழ் பத்திரிகைகளில் எழுத்தாளர்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தபோது, அவர்களில் இளம் தளகர்த்தராக சுஜாதா இருந்தார்.

சுஜாதா என்ற புனைபெயர், அவருடைய துணைவியாரின் பெயராகவே இருந்தபோதிலும் அதில் கவர்ச்சி மின்னியது. அவருடைய எழுத் தும் மின்னல், கதையும் மின்னல். மிகப்பெரிய தத்துவ விசாரங்களை யும், கள வர்ணனைகளையும் எழுதாமலேயே நாவல்களையும் சிறுக தைகளையும் உள்ளத்தில் பதிய வைத்தவர்.

பெண்களை வர்ணிக்க அவர் செலவிட்ட நேரமும் எழுத்துகளும் குறைவுதான் என்றாலும் வாசகனின் நினைவில் அவை புகுந்து கொண்டு இம்சை செய்த நேரங்கள் அதிகம். இளைஞர்கள் மட்டும் அல்ல யுவதிகளாலும் போட்டி போட்டு வாசிக்கப்பட்டவர்.

அவர் பிறந்த ஸ்ரீரங்கத்தை மட்டும் அல்லாது பெங்களூருவையும் தில்லியையும் (அதன் அஜ்மல்கான் ரோடு, எம்.ஜி. ரோடு மகாத்மியங்கள் உள்பட) வர்ணித்து காசு செலவில்லாமல் "காதல் ஷேத்ராடனம்' போக வைத்தவர்.

விமானம் எப்படி ஓடுகிறது, கம்ப்யூட்டர் எப்படிச் செயல்படுகிறது, ஹைஜாக்குகள் எப்படி நடக்கின்றன, கணினியின் கட்டுப்பாட்டில் எதிர்கால நகரங்கள் எப்படி இருக்கும் என்றெல்லாம் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர்.

ஸ்ரீரங்கத்து தேவதைகள் என்ற நடைச் சித்திரமும், கடைசி பாராவில் கதையின் போக்கையே படு கிண்டலாக மாற்றிய முத்திரைக் கதைகளும் இன்ன பிற உத்திகளும் சுஜாதாவின் முத்திரைகள்.

பத்திரிகைகளில் எழுத தொழில்முறை எழுத்தாளர்கள் ஆயிரம் பேர், நமக்குக் கிடைத்த நல்ல உத்தியோகத்தில் நாலு நாட்டைப் பார்ப்போம், நமது தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும் சொத்து சேர்ப்போம் என்று ஸ்ரீரங்கம் எஸ். ரங்கராஜன் நினைத்திருந்தால், நமக்கு "சுஜாதா'வின் அறிமுகமே கிட்டியிருக்காது.

எதற்காக எழுத வந்தாரோ, தமிழ் வாசகர்களுக்கு நல்லதொரு எழுத்து விருந்து படைத்தார். அவரைத் தன்னிடம் அழைத்துக் கொண்ட "மிஸ் தமிழ்த்தாயே நமஸ்காரம்'.

(வாசிக்கலாமோ கூடாதோ என்ற அச்சத்தோடு பள்ளிக்கூட நாட்களிலிருந்து சுஜாதாவின் கதைகளை வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் படித்து மகிழ்ந்திட்ட வாசகனின் கண்ணீர்த்துளி அஞ்சலி இது.)

நன்றி - தினமணி 28/02/08

2 பேர் கமெண்டிட்டாங்க:

said...

அஞ்சலிகள்..

said...

அவரது ஆன்மா சாந்தியடைவதாக